சகா (2019 திரைப்படம்)

2019 இந்திய தமிழ்த் திரைப்படம்

சகா (sagaa) என்பது 2019 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த அதிரடி குற்ற திரைப்படம் ஆகும். முருகேஷின் இயக்கத்திலும், ஆர். செல்வகுமார் மற்றும் ராம்பிரசாத்தின் தயாரிப்பிலும் வெளியிடப்பட்டது. இத் திரைப்படத்தில் சரண், கிஷோர், ஶ்ரீ ராம் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அய்ரா, நீராஜா, பாண்டி மற்றும் பிருத்வி ராஜன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சபீர் பாடல் வரிகளை எழுதி, பின்னணி இசையை அமைத்துள்ளார்.[1] இந்த திரைப்படம் 1 பிப்ரவரி 2019 அன்று வெளியிடப்பட்டது.

சகா
சுவரொட்டி
இயக்கம்முருகேஷ்
தயாரிப்புஆர். செல்வகுமார் ராம்பிரசாத்
கதைமுருகேஷ்
இசைசபீர்
நடிப்பு
  • சரண்
  • கிஷோர்
  • அய்ரா
  • நிராஜா
  • ஶ்ரீ ராம்
  • பாண்டி
  • பிருத்வி ராஜன்
ஒளிப்பதிவுநிரன் சந்தர்
படத்தொகுப்புஹரிகரன்
கலையகம்செல்லி சினிமாஸ்
வெளியீடுபெப்ரவரி 1, 2019 (2019-02-01)
ஓட்டம்122 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

அநாதை சிறுவர்களான சத்யா (சரண்) மற்றும் கதிர் (பாண்டி) என்ற இரு நண்பர்கள் திருநங்கை ஒருவரினால் வளர்க்கப்படுகிறார்கள். அவர் சொத்து தகராறினால் அவரது சகோதரனால் கொல்லப்படுகின்றார். அவரின் மரணத்திற்குப் பழிவாங்குவதால் சத்யாவும், கதிரும் சிறையில் அடைக்கப்படுகின்றனர். சிறையில் ஏற்படும் தகராறுகளினால் கதிர் மற்றுமொரு சிறைக்கைதி கங்கா (பிருத்வி ராஜன்) என்ற ரவுடியால் கொல்லப்படுகிறார். கதிரின் மரணத்திற்கு காரணமான கங்காவை பழிவாங்குவதாக சத்யா சபதம் செய்கிறார். கங்கா சிறையில் இருந்து விடுதலையாகி செல்கிறார். சத்யா சிறையில் இருந்து தப்பிச் செல்வதற்காக பிற சிறைக் கைதிகளான சிவா (கிஷோர்), ஜாக்கி (ஶ்ரீ ராம்) ஆகியோருடன் நட்பாகிறார். மூவரும் சிறையில் இருந்து தப்பிச் செல்கையில் ஜாக்கி சிக்கிக் கொள்கிறார். தப்பிச் சென்ற சிவாவும் சத்யாவும் அவரவர் நோக்கங்களுக்கான பிரிந்து செல்கின்றனர். தப்பித்தவர்களை பிடிக்க வார்டன் செல்கிறார். வார்டனிடம் சிவா அகப்படுகிறார். வார்டன் சத்யா இருக்கும் இடத்தை காட்டித் தருமாறு சிவாவை மிரட்டுகிறார். சிவா தவறான இடத்தை காட்டியதற்காக வார்டனால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.  சத்யா அரோஹி என்ற பெண்ணை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார். கங்காவை தேடிச் சென்று சண்டையிடுகிறார். சண்டையின் இறுதியில் வரும் ஜாக்கி கங்காவை கொலை செய்கிறார். அவரது சகோதரி ஜெனி (காயத்ரி கிருஷ்ணா) கங்காவால் கொல்லப்பட்டார் என்றும் அதற்காக பழிவாங்கவே கங்காவை கொன்றதாக கூறுகிறார்.

நடிகர்கள்

தொகு
  • சத்யா - சரண்
  • சிவா - கிஷோர்
  • ஆரோஹி - அய்ரா
  • ஜாக்கி - ஶ்ரீ ராம்
  • கதிர் - பாண்டி
  • கங்கா - பிருத்வி ராஜன்
  • சிறை வார்டன் ராஜேந்திரன் - தென்னவன்
  • சிறைச்சாலை வார்டன் - சாய் தீனா
  • ஜாக்கியின் சகோதரி ஜெனி - காயத்ரி கிருஷ்ணா
  • அன்புமணி ஐ.பி.எஸ் - ரவி வெங்கட்ராமன்

தயாரிப்பு

தொகு

சகா  செல்லி சினிமாஸ் தயாரித்த முதல் திரைப்படம் ஆகும். இத் திரைப்படத்தின் முன் தயாரிப்பு ஜனவரி 2015 இல் தொடங்கியது. சென்னையில் உள்ள ஈவிபி திரைப்பட நகரத்தில் முதன்மை புகைப்படம் எடுத்தல் நடைப்பெற்றது. படத்தின் சிறைச்சாலைகள் செல்லி சினிமாஸால் கட்டப்பட்டு அமைக்கப்பட்டன. படப்பிடிப்பு தமிழ்நாடு, பாண்டிச்சேரியின் கடலோரப் பகுதிகள், கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய இடங்களில் நடந்தது.

2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சபீர் திரைப்படத்திற்கு ஒப்பந்தமானார். இந்த திரைப்படத்தில் ஏழு பாடல்கள் உள்ளன. இந்த இசைத்தொகுப்பில் மலேசிய மற்றும் சர்வதேச தமிழ் ராப் முன்னோடி டாக்டர் பர்ன், தென்கிழக்கு ஆசிய உலோக இசைக்குழு ருத்ரா, பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா ஜெரெமையா பின்னணிப் பாடகர் நரேஷ் ஐயர், மற்றும் பாடகர் அல்போன்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.[2]

மேலும் சிங்கப்பூர், மலேசியா, ஹங்கேரி, இந்தியா ஆகிய நான்கு நாடுகளில் ஒலிப்பதிவு நடைப்பெற்றது. "செவுலு கிழியும்" என்ற பாடல் 9 மே 2016 அன்று வெளியிடப்பட்டது. "யாயும்" என்ற பாடலின் முதற் சில வரிகள் தமிழ் இலக்கிய படைப்பான குறுந்தொகையில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த பாடல் யூடியூபில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றது.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. RajKumar (2018-11-10). "Sagaa Tamil Movie (2018) | Cast | Songs | Teaser | Trailer | Release Date". News Bugz (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  2. "Could the next A R Rahman come from Singapore?". TODAYonline. பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  3. "Sagaa Music review songs lyrics". IndiaGlitz.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  4. "Singapore musician debuts as composer in Kollywood - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகா_(2019_திரைப்படம்)&oldid=4169779" இலிருந்து மீள்விக்கப்பட்டது