சக்தி மாற்றம் (இயந்திரவியல்)

சக்தி மாற்றம் (Transmission) என்பது இயந்திரத்தின் சக்தியை கட்டுப்பாடுடன் வேறொரு அமைப்புக்கு மாற்றித் தருவது ஆகும். சக்தி மாற்றம் செய்யும் இயந்திர அமைப்பு இதற்குப் பயன்படுகிறது. பெரும்பாலும் சக்தி மாற்றம் என்ற சொல் வாகனங்களில் மிகையாகப் பயன்படுத்தப்படும் பற்சக்கரக் கூட்டினைக் குறிக்கப் பயன்படுகிறது. பற்சக்கரக் கூடு என்பது பற்சக்கரம் மற்றும் பற்சக்கரத் தொகுதி ஆகியனவற்றைப் பயன்படுத்தி சுழலும் சக்தி மூலங்களில் இருந்து பெறப்படும் வேகம் மற்றும் முறுக்கு விசை போன்ற சக்திகளை வேறொரு அமைப்புக்கு மாற்றித் தருகிறது[1][2]

1600 வோல்சுவாகன் கோல்ப் (2009) பற்சக்கரத்தில் உள்ள ஐந்து-வேகம்+ பின்புற பற்சக்கர கூடு.

பிரித்தானிய ஆங்கிலத்தில் சக்திமாற்றம் என்ற சொல் கிளட்சு எனப்படும் உரசிணைப்பி, பற்சக்கரக் கூடு, தாங்கு அச்சுத்தண்டு (பின் சக்கர இயக்கத்திற்காக பயன்படுவது), வேறுபட்ட மற்றும் இறுதி செலுத்துத்தண்டு ஆகியனவற்றை உள்ளடக்கிய உந்துதல் தொடர் முழுவதையும் குறிக்கிறது. அமெரிக்க ஆங்கிலத்தில் சக்திமாற்றம் என்ற சொல் குறிப்பாக பற்சக்கரக் கூட்டை மட்டுமே குறித்து அதன் விரிவான பயன்பாடு வேறுபடுத்தப்படுகிறது

பொதுவாக இயக்கூர்திகளில் சக்திமாற்றம் பயன்படுத்தப்படுகிறது. உள்ளெரி இயந்திரங்கள் வெளிப்படுத்தும் சக்தியை இச்சக்திமாற்ற அமைப்பு வாகனத்தின் சக்கரங்களுக்கு மாற்றித்தருகிறது. ஒப்பீட்டளவில் உயர் சுழற்சி வேகத்தில் இத்தகைய இயந்திரங்கள் செயல்பட்டாக வேண்டும். பயணத்தில் மேற்கொள்ளப்படும் துவக்குதல், நிறுத்துதல், மெதுவாகப் பயணித்தல் போன்றச் செயல்பாடுகளுக்கு நடுவில் இம்மாற்றச் செயல்பாடு பொருந்தாததாய் உள்ளது. இயந்திரத்தின் உயர் வேகத்தினை சக்திமாற்றம் வாகனத்தின் சக்கரங்களுக்கு ஏற்ப மெதுவாகக் குறைத்தும் முறுக்கு விசையை அதிகரித்தும் மாற்றித்தருகிறது. சக்தி மாற்ற அமைப்புகள் மிதிவண்டி, நிலையான இயந்திரங்கள் மற்றும் எங்கெல்லாம் வேறுபட்ட சுழற்சி வேகங்கள் மற்றும் முறுக்கு விசைகள் அவசியமாகிறதோ அங்கெல்லாம் பயன்படுகின்றன.

பெரும்பாலும், ஒரு சக்திமாற்ற அமைப்பில் பல விகிதங்களில் பற்சக்கரங்கள் அவற்றிற்கிடையே சக்தியை மாற்றிக் கொள்ளும் விதத்தில் அமைந்து வேகத்தை மாற்றிக் கொடுக்கின்றன. இந்நிலை மாற்றம் தானியக்கமாகவோ இயக்குபவரின் கையாலோ நிகழ்த்தப்படுகிறது. முன்னியக்க மற்றும் பின்னியக்க வழியமைந்த கட்டுப்படுத்தல்களுக்குமான வசதியையும் இவை அளிக்கின்றன. சாதாரணமாக வேகத்தையும் முறுக்கு விசையையும் மாற்றித்தருகின்ற தனித்தட்டு உரசிணைப்பி சக்திமாற்ற அமைப்புகளும் உண்டு. சிலசமயங்களில் இவை இயக்கூர்தியின் திசையையும் மாற்றுகின்றன.

மோட்டார் வாகனங்களில், வாகன அடித்தளக் கட்டுமானத்தில் உரசிணைப்பித் தொகுப்பிற்கும், இணைப்பூட்டும் அச்சுக்கும் இடையே சக்திமாற்றத் தொகுப்பு இணைக்கப்படுகிறது. சக்தி மாற்றத்திற்கு உதவும் இத்தொகுப்பு, பற்சக்கரத் தொகுப்பின் கூடாகவோ அல்லது சுழல்விசை மாற்றியுடன் இணைந்த திரவ இயக்கமாகவோ இருக்கலாம். சக்திமாற்ற வெளியீடானது, செலுத்துத் தண்டின் வழியாக சக்கரங்களை இயக்குவதற்கு உதவும் ஒன்று அல்லது அதற்கு மேலான வேறுபட்ட அமைப்புகளுக்கு மாற்றுகிறது. இதனால் சக்கரங்கள் இருசின் எந்த முனையிலும் தேவைக்கேற்ற வேகத்தில் சுழல அனுமதிக்கப்படுகின்றன.

வேகம் மற்றும் முறுக்குவிசை போன்ற சக்திகளின் பரிமாற்றத்திற்கு, பற்சக்கரம் / பட்டை போன்ற வழக்கமான சக்திமாற்ற அமைப்புகள் மட்டுமே வழிமுறையாக இல்லை. முறுக்குவிசை மாற்றிகள் மற்றும் சக்தி உருமாற்றிகள் முதலான மாற்று வழிமுறைகளும் உள்ளன. (உதாரணம்: டீசல் மின் திறனாக்கம் மற்றும் நீரியல் செலுத்தி அமைப்பு) கலப்பின வடிவமைப்பு சக்திமாற்ற அமைப்புகளும் உண்டு. பற்சக்கரங்களை உயர்த்த தானியங்கி சக்தி பரிமாற்றங்கள், அடைப்பிதழ்களைப் பயன்படுத்துகின்றன.இவ்வடைப்பிதழ்கள் இயந்திரக் கட்டுப்பாட்டுப் பெட்டகத்துடன் இணைந்துள்ள நீர்ம அழுத்தத்தைப் பயன்படுத்துகின்றன.

தனிநிலை பற்சக்கர குறைப்பி

மேற்கோள்கள் தொகு

உசாத்துணை தொகு

புற இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Transmissions
என்பதில் ஊடகங்கள் உள்ளன.