சங்ககால நீதிமன்றங்கள்
சங்ககாலத்தில் முறையீடுகள் அரசனிடம் மட்டுமல்லாமல் ஊர்மன்றங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டன. அரசனோ, மன்றத்தாரோ தீர்ப்பு வழங்குமிடம் அவையம் எனப்பட்டது. ஊர்த்தலைவர்கள் ஒன்றுகூடித் தீர்ப்பு வழங்குமிடம் பொதியில் எனப்பட்டது.
பெண்ணைக் கெடுத்தவனுக்குத் தண்டணையாக அவன் தலையில் கொதிக்கும் சுண்ணாம்பு-நீறு கொட்டிக் கள்ளூர் அவையத்தார் வேதனைப்படுத்தியிருக்கிறார்கள்.
அடுத்தவன் கொல்லையில் மாடு மேய்ந்த குற்றத்திற்காக மாட்டுக்காரனின் கண்ணைத் தோண்டியிருக்கிறார்கள். கண் தோண்டப்பட்டவன் அன்னி மிஞிலி என்னும் பெண்மணியின் தந்தை. தீர்ப்பளித்துத் தண்டணை வழங்கியவர்கள் ஊர்முது கோசர்.
அரசனின் காவல்மரத்து மாம்பழத்தை உண்ட குற்றத்துக்காக உண்ட பெண்ணின் உயிரைப் பறித்த மன்னனைப் பெண்கொலை புரிந்த நன்னன் என்று பழித்திருக்கிறார்கள்.[1]
ஆராயாமல் கோவலனைக் கொன்ற குற்றத்திற்காக நெடுஞ்செழியன் கொலைக்குக் கொலை என்று தன்னைத்தானே மாய்த்துக்கொண்டிருக்கிறான்.
காவல் பணியின்போது கதவைத் தட்டிய குற்றத்திற்காகப் பொற்கைப்பாண்டியன் தன் கையைத் தானே வெட்டிக்கொண்டிருக்கிறான். உலாச் சென்ற தேர்க்காலில் கன்று விழுந்து மடிந்தது என்பதற்காக உயிருக்கு உயிர் என்ற முறையில் தன்மகன்மேல் தன் தேரை ஏற்றி மனு திருவாரூரில் கொன்றிருக்கிறான்.
புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி தன் உடலின் தசையை அறுத்துக் கழுகுக்கு இரையாகத் தந்திருக்கிறான்.
அரசன் இளையவன் ஆயிற்றே எவ்வாறு தீர்ப்பு வழங்குவானோ என்று கவலைப்பட்டபோது முதியவன்போல் நரைமுடியுடன் தோன்றிக் கரிகாலன் நல்ல-தீர்ப்பு வழங்கியிருக்கிறான். [2]
தன் அவையத்துத் திறனில்லாத ஒருவனை நாட்டி மெலிகோல் செய்வது தனக்கு இழுக்கு என்று பாண்டியன் கருதியிருக்கிறான். [3]
உறையூர் அறம் துஞ்சும் உறந்தை என்னும் சிறப்பினைப் பெற்றிருந்தது.