சங்ககாலத்திலேயே நன்னன் என்னும் பெயருடன் பல மன்னர்கள் ஆங்காங்கே ஆண்டுவந்தனர். அவர்கள் வேளிர் குடியைச் சேர்ந்தவர்கள். மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த நாடுகளில் அவர்கள் ஆண்ட நாடுகள் அமைந்திருந்தன.

நன்னன் பற்றிய குறிப்புகளைத் தரும் சங்கப்பாடல்கள்

தொகு

நன்னன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைத் தந்துள்ள புலவர்கள்

தொகு

ஆங்காங்கே நன்னன்

தொகு

பேரிசை நன்னன்

தொகு
மதுரையில், சங்ககாலத்தில் 'மாயோன் மேய ஓண நன்னாள்'[3] விழாவும், 'பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாள்'[4] விழாவும் இரவெல்லாம் மகிழ்ச்சி ஆரவாவாரத்துடன் கொண்டாடப்பட்டது.

செங்கண்மாத்து வேள்நன்னன் சேய்நன்னன்

தொகு
மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன் இவன். புலவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் இவனைப் பாடியுள்ளார். இவன் சிறந்த கொடைவள்ளல்.[5]

பாரத்துத் தலைவன் ஆர நன்னன்

தொகு
  • பாரம் என்பது இவன் நாடு
  • பாழி இவன் தலைநகர்
  • ஆரம் என்னும் சந்தனம் இவனது காவல்மரம்
"பாரத்துத் தலைவன் ஆர நன்னன் ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பு" [6]
இயல்தேர் நன்னன் பொன்படு மலையின் கவாண்(மலைப்பிளவு) பகுதியையும் ஆண்டுவந்தான்.[7]
பாழிநகர நன்னனிடம் சூழி என்னும் முகப்படாம் அணிந்த யானைமேல் செல்லும் பழக்கம் உடையவன்.[8]
நன்னனுடைய பாழி நகரில், கோசர்படைத் தலைவனான மிஞிலி என்பவன், அதிகன் என்பவனை அந்நகரிலுள்ள பேய்த்தெய்வத்துக்குக் காவு கொடுத்தான்.[9]
இந்த அதிகன் காட்டுப் பறவைகளைப் பேணிப் பாதுகாத்துவந்தவன். மயிலுக்குப் போர்வை அளித்த பேகன் போன்று கொடைமடம் பட்டவன். அதிகன், அதியமான் என்னும் பெயர்களால் குறிப்பிடப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவனோ என எண்ணவேண்டியுள்ளது.

நன்னன் உதியன்

தொகு
  • பாழி அரசன். பாரத்துத் தலைவன் ஆர நன்னனின் மகன்.
இவன் மேலே கண்ட பாரத்துத் தலைவன் ஆர நன்னனின் மகன் ஆவான். தொன்முதிர் வேளிர் தாம் சேமித்த பொற்குவியல்களை இவனுடைய பாழிநகரில் சேமித்துப் பாதுகாத்துவந்தனர். பரணர் பாடிய இந்தப் பாடலின் தலைவன் தன் காதல்தலைவியைப் பற்றி நினைக்கும்போது பாழிநகரில் வேளிர் பாதுகாக்கும் பொன்னைவிட அரியள் எனக் குறிப்பிடுகிறான்.[10]

பொன்படு கொண்கான நன்னன்

தொகு
  • ஏழில்குன்ற அரசன்
நன்னனின் கொண்கான நாட்டில் ஏழில் குன்றம் இருந்தது. அது பொன் பாதுகாக்கப்பட்ட இடம். பொருள் தேடச் சென்றவர் அந்தக் குன்றத்தையே ஈட்டினாலும் அங்குத் தங்கமாட்டார் என்று தோழி தலைவிக்குச் சொல்கிறாள். [11]
கொண்கான நன்னன் போர்முனைகள் பலவற்றை வென்றவன். வென்று கொண்டுவந்த பொருளைத், தன்னை நாடிப் பாடிவரும் பாணர் கூட்டம் உற்றார் உறவினருடன் நிறைவாக வாழ, அவர்கள் கேட்காவிட்டாலும், தான் உள்ளப் பெருமிதம் பொங்கி, ஊற்றுப்போல் சுரந்து ஊட்டியவன். அத்துடன் ஞெமன்கோல்(எமனின் தராசுக்கோல்) போல் 'செயிர்தீர் செம்மொழி' பேசும்படியான வாக்குத் தவறாதவன்.[12]

பெண்கொலை புரிந்த நன்னன்

தொகு
  • இவனது காவல்மரம் - மா மரம்
நன்னனது காவல்மரத்து மாம்பழம் ஒன்றை ஆற்றுவெள்ளம் ஆடித்துக்கொண்டுவந்தது. அது இன்னாருடையது என அறியாமல் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த கோசர்குடிப் பெண் அதனை எடுத்துத் தின்றுவிட்டாள். இதனை அறிந்த நன்னன் அந்தப் பெண்ணுக்குக் கொலைதண்டனை விதித்தான். கோசர்குடியினர் நன்னனிடம் முறையிட்டனர். அவனது மாம்பழத்தைத் தின்ற தவற்றுக்காக அவளது எடைக்கு எடை பொன்னும், 81 யானைகளும் தண்டமாக ஏற்றுக்கொண்டு அவளை விட்டுவிடும்படி மன்றாடினர். நன்னன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்காமல் அவளைக் கொன்றுவிட்டான். அதனால் புலவர் இவனைப் 'பெண்கொலை புரிந்த நன்னன்' எனக் குறிப்பிடுகிறார். [13]
பாழிப்பறந்தலை என்னுமிடத்தில் போர். ஆய் எயினனை மிஞிலி பிழைக்க முடியாத அளவுக்குக் வெட்டிப் புண்ணாக்கினான். ஆய் எயினன் வேளிர்குடி வீரன். நன்னன் வேளிர் குடி அரசன். மிஞிலி கோசர் குடி வீரன். மிஞிலியைத் தூண்டியவன் நன்னன். ஆய் எயினன் அதிகனைப் போலப் பறவைகளின் பாதுகாவலன். போர்க்களத்தில் தம்மைப் பாதுகாத்த ஆய் எயினன் காயம் பட்டுக் கிடப்பதைப் பார்த்த பறவைகள் அவனது புண்களைக் கொத்தித் தின்னாமல் வானத்தில் சிறகடித்துப் பறந்து அவனுக்கு நிழல் செய்தன. இந்தக் காட்சியைக் காணக்கூட நன்னன் வரவில்லையாம். இதனைக் கண்ட வேளிர்குடி மகளிர் ஓலமிட்டு அழுதனர். அகுதை பாண்டியன் கால்வழியில் வந்த சிற்றரசன். இவன் வேளிர்குடி மகளிரின் துன்பத்தைப் போக்கினான். [14]
கோசர் சூழ்ச்சி செய்து நன்னனது மாமரத்தை வெட்டிப் பழிதீர்த்துக்கொண்டனர். [15]

சேரனை எதிர்த்த பெருவாயில் நன்னன்

தொகு

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலோடு போரிட்டவன்

தொகு
இவனது தலைநகர் பெருவாயிலில் கடம்ப மரங்கள் மிகிதியாக இருந்தன. அதன் பூக்கள் இவ்வூரில் உருள்வது கண்கொள்ளாக் காட்சி. அதனால் இந்த ஊரைக் கடம்பின் பெருவாயில் என்றே குறிப்பிடலாயினர்.
சேரருக்கும் இந்த நன்னனுக்கும் நெடுநாள் பகை. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் இவனோடு நீண்டநாள் போரிட்டு இந்த நன்னனின் ஆற்றலை அழித்தான். அத்துடன் அவனது காவல் மரமான வாகை மரத்தையும் வெட்டி வீழ்த்தினான். [16]
வாகைப்பெருந்துறை என்னுமிடத்தில் போரிட்டு நன்னன் போர்களத்திலேயே மாண்டான். [17]

சேரன் இளஞ்சேரல் இரும்பொறையோடு போரிட்டவன்

தொகு
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் பெருவாயில் நன்னனை வென்று அவன் காவல்மரத்தை வெட்டி வீழ்த்தி அவனது பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் நன்னன் பரம்பரை மீண்டும் தலைதூக்கிச் சேரர் ஆட்சிக்கு இன்னல் விளைவித்துவந்தது. எனவே இளஞ்சேரல் இரும்பொறை அவனது காவல்மரம் வாகையை வெட்டி வீழ்த்தி அவர்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தினான் (தேய்த்தான்). [18]

சோழனோடு போரிட்டவன்

தொகு
எழுவர் கூட்டணியில் ஒருவன் - இந்த நன்னன் எழுவர் கூட்டணியில் ஒருவனாயிருந்து பெரும்பூட்சென்னியை எதிர்த்தவன். கட்டூர்ப் போரில் சோழர்படையின் தலைவன் பழையனை இந்த எழுவர் கூட்டணி கொன்றது. சென்னி படைக்குத் தலைமை தாங்கிப் போரிட்டபோது திரும்பி ஓடிவந்துவிட்ட ஆறு பேருள் இவனும் ஒருவன். [19]
'கான்அமர் நன்னன்' என்று கூறப்படுபவன் வேந்தன் (சோழன்) பெரும்படையுடன் போர்க்களம் புகுந்தபோது அவனை எதிர்த்துப் போரிட முடியாமல் ஏந்திய வேலுடன் தன் மூங்கில் காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டான்.[20]
நன்னன் மருகன் - விச்சிமலை அரசன் விச்சிக்கோ. இவன் தம்பி இளவிச்சிக்கோ. கண்டீரமலை அரசன் கண்டீரக்கோப்பெருநள்ளி. இவன் தம்பி இளங்கண்டீரக்கோ, இளவிச்சிக்கோவும், இளங்கண்டீரக்கோவும் விச்சிமலை அரண்மனையில் ஒன்று கூடி மகிழ்ந்திருந்தனர். அவர்களை நேரில் கண்ட புலவர் வன்பரனர் இளங்கண்டீரக்கோவை ஆரத் தழுவினார். இளவிச்சிக்கோவைத் தழுவவில்லை. தழுவாமைக்குக் காரணம் என்ன என்பதை இளவிச்சிக்கோவுக்குத் தெரிவிக்கிறார். இளங்கண்டீரக்கோ கடையெழு வள்ளல்களில் ஒருவனான கண்டீரக்கோப்பெருநள்ளியின் தம்பியாம். வள்ளலின் தம்பி என்பதால் அவனைத் தழுவினாராம். இளவிச்சிக்கோவும் தழுவத் தகுதியுடையவன்தானாம். ஆனால் அவன் நன்னன் மகளைத் திருமணம் செய்துகொண்டு அவனது மருகனாக ஆகிவிட்டானாம். இவன் மாமனார் நன்னன் பாடிச் செல்வோருக்கு எதுவும் தரமாட்டானாம். அதனால் இளவிச்சிக்கோவைப் புலவர் தழுவவில்லையாம்.[21]

வேந்தர் ஓட்டிய நன்னன்

தொகு
வேந்தர் என்று சிறப்பிக்கப்படுவோர் சேர, சோழ, பாண்டியர். அவர்களை முறியடித்து அவர்களது குதிரை மயிரால் கயிறு திரித்துப் பயன்படுத்திக்கொண்டவன் இவன். [22]

நன்னன் ஆய்

தொகு
புலவர் பரணர் தம் பாடல்தலைவியின் கூந்தல் இவன் நாட்டில் அருவி கொழிக்கும் முன்றுறையில் வளர்ந்துள்ள பிரம்பு போல் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். [23]
குறிப்பு - இவன் ஆய் வள்ளலின் தந்தை என்பது பெயரமைதியால் உணரக் கிடக்கிறது. ஆய்நாடு பொதியமலைநாடு என்பதும், அருவி குற்றாலம் அருவி எனபதும் பல்வேறு பாடல்களை இணைத்து ஒப்புநோக்கும்போது புலனாகும்.

நன்னன் வேண்மான்

தொகு
மாமூலனார் இவனது நாட்டில் சிறந்து விளங்கிய வியலூர் அழகைத் தன் பாடல்தலைவியின் முலைமுகட்டுக்கு உவமையாகக் காட்டியுள்ளார். [24]

மேற்கோள்கள்

தொகு
  1. தொகுத்துக் காட்டியுள்ள நூல் - INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு)
  2. தொகுத்துக் காட்டியுள்ள நூல் - சங்க இலக்கியம் பாட்டும் தொகையும், பேராசிரியர் சு. வையாபுரிப்பிள்ளை, 1967(இரண்டாம் பதிப்பு)
  3. மதுரைக்காஞ்சி - அடி 591
  4. மதுரைக்காஞ்சி - அடி 618
  5. மலைபடுகடாம் - அடி 64, 467
  6. பரணர் - அகநானூறு 152
  7. முள்ளியூர்ப் பூதியார் - அகநானூறு 173
  8. மாமூலனார் - அகநானூறு 15
  9. பரணர் - அகநானூறு 142
  10. பரணர் - அகநானூறு 258
  11. பாலைபாடிய பெருங்கடுங்கோ - நற்றிணை 291
  12. மாமூலனார் - அகநானூறு 349
  13. பரணர் - குறுந்தொகை 292
  14. பரணர் - அகநானூறு 208
  15. பரணர் - குறுந்தொகை 73
  16. காப்பியாற்றுக் காப்பியனார் - பதிற்றுப்பத்து 40, (பதிகம் 4)
  17. கல்லாடனார் - அகநானூறு 199
  18. பெருங்குன்றூர் கிழார் - பதிப்புப்பத்து 88
  19. குடவாயில் கீரத்தனார் - அகநானூறு 44
  20. மோசிகீரனார் - அகநானூறு 392
  21. வன்பரணர் - புறநானூறு 149
  22. பரணர் - நற்றிணை 270
  23. பரணர் - அகநானூறு 356
  24. மாமூலனார் - அகநானூறு 97
"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்னன்&oldid=4038206" இலிருந்து மீள்விக்கப்பட்டது