வியலூர்
வியலூர் சங்கப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு ஊர்.
வயலை வேலி வியலூர்
தொகுநன்னன் வேண்மான் என்னும் அரசனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஊர் இந்த வியலூர். மாமூலனார் பாடல் இதனைத் தெரிவிக்கிறது (அகநானூறு 97). மாமூலனார் தன் பாடல் தலைவியின் முலைமுகட்டின் வனப்புக்கு இவ்வூரை உவமையாகக் காட்டியுள்ளதால் இவ்வூர் மலைமுகட்டில் இருந்தது எனத் தெரிகிறது. இவ்வூருக்கு வயலைக்கொடி படர்ந்த வேலி இருந்ததாம். இவ்வூரில் நறவுக்கள் மிகுதியாம்.
சிறுகுரல் நெய்தல் வியலூர்
தொகுபதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தைப் பாடியவர் பரணர். பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் ஒவ்வொரு பத்துக்கும் ஒரு பதிகப்பாடலை இணைத்துள்ளார். இந்தப் பத்தின் பதிகப்பாடல் இந்த ஊரைக் குறிப்பிகிறது. கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் தன் வடநாட்டு வெற்றிக்குப் பின் இடும்பில்புறம் என்னும் இடத்தில் தங்கினானாம். அப்போது அங்கு வந்து புலிபோல் தாக்கிய வயவர்களைத் துரத்திச் சென்று அவர்களின் வியலூரைத் தவிடுபொடி ஆக்கினானாம். இதனை அடுத்து ஓடிய ஆறு வியலூர் ஆறு. ஆற்றின் ஒரு கரையில் வியலூர். மற்றொரு கரையில் கொடுகூர். இந்தக் கொடுகூரையும் செங்குட்டுவன் அழித்தான்.