ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சங்க நூலான பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்து தொகுப்பில் பத்து பாடல்கள் உள்ளன. இவற்றை பாடிய புலவர் பரணர். பாடிப் பாராட்டப்பட்ட அரசன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்.
பாடல் 41 - சுடர்வீ வேங்கை
தொகு'கடல் பிறக்கு ஓட்டிய' பாங்கு இப்பாடலின் இறுதியில் கூறப்படுகிறது. காற்றுத்தேர் ஓடுவதால் கடலின் பிசிர் (நுரை) உடையும். அதன் பிறக்கில் (முதுகில்) செங்குட்டுவன் ஏறிவந்த குதிரை ஊர்ந்தது. அதனால் ஓசை முழக்குடன் கூடிய கடல் உழந்தது (துன்புற்றது). (கடற்கரையில் நடந்த போரால் நிறம் மாறிக் கடலலை மாறியதுதான் அது பெற்ற துன்பம்)
வசையில் நெடுந்தகை! நின் தாள் (கடலலையைத் துன்புறுத்திய செங்குட்டுவனின் முயற்சி) காண்கு வந்திசினே - என்று புலவர் பாடுகிறார்.
புலவர் பாணர் கூட்டத்தோடு வருகிறார். யாழ், முழவு, பதலை முதலான இசைக்கருவிகளைப் பையில் போட்டுத் தூக்கிக்கொண்டு பாணர் சுற்றம் வருகிறது. அவர்கள் கடவுளை வாழ்த்திப் பாடிக்கொண்டே வருகின்றனர். வழியில் யானை ஒன்று பூத்திருந்த வேங்கைமரத்தைப் புலி என்று எண்ணி அதன் கிளைகளைப் பிளந்து போட்டது. தண்டுப்படையுடன் (கதை) சென்ற குட்டுவனின் போர்மறவர் அந்த வேங்கைப் பூக்களைப் பறித்துத் தலையிலே சூடிக்கொண்டு தண்டோடு தண்டை மோதிப் பயிற்சி செய்துகொண்டனர். அவர்ளது முழக்கத்துக்கு எதிரொலி போல் வேங்கையைப் பிளந்த யானை வழைமரக் காட்டுக்குள்ளே இருந்துகொண்டு பிளிறிற்று. அந்தக் காட்டில் மழை பெய்யவில்லை. அதனால் மூங்கில் காய்ந்துபோயிற்று. இது போன்ற காடுகள் ஒன்று இரண்டு அல்ல, பல கடந்து பெரும! கடல் பிறக்கு ஓட்டிய நின் முயற்சியைக் காண வந்தேன் - என்கிறார் புலவர்.
பாடல் 42 - தசும்பு துளங்கு இருக்கை
தொகுகுட்டுவ! உன் படைவீரர் ஊர்ந்த குதிரைகளை எண்ணிட்டு அளந்தால் கடலலைப் பிசிரைவிட அதிக எண்ணிக்கை கொண்டதாக இருக்கிறது. அவர்களின் தலையில் பனம்பூ. காலில் கழல். கழல் அவர்களது ஈகையின் அடையாளச் சின்னம். மார்பில் வடு. குளத்தில் மூழ்கி மீனைக் கொத்திச் செல்லும் சிரல் பறவையைப் போல மார்பில் பட்ட காயத்தை ஊசியால் தைத்து ஆறிப்போன வடு அது.
குட்டுவன் இத்தகைய மறவர் சூழ்ந்த நாளவையில் தன் அரசியோடு வீற்றிருக்கிறான். அவனது மார்பு 'தசும்பு துளங்கு இருக்கை' (ஈரம் ஆடும் இருப்பிடம்). இஞ்சி (=கோட்டை) பல வென்றான். ஒவ்வொரு வெற்றிக்கும் அடையாளப்பூ செய்து பல 'இஞ்சிவீ ' கோத்த மாலையை மார்பில் அணிந்திருந்தான். சந்தனம் பூசியிருந்தான். அவனது நெஞ்சக ஈரத்தால் அவனது நெஞ்சின் மேல் இருந்த சந்தனமும் புலராமல் இருந்தது. இந்த ஈரந்தான் 'தசும்பு'
இந்தக் கோலத்தில் அரசவையில் இருந்துகொண்டு கோடியர் என்னும் யாழிசையாளர்க்கு 'மணிநீர் மட்டம்' வழங்கினான். இந்த மட்டம் wine பழச்சேற்றில் ஊறியது. அத்துடன் அவர்களுக்கு ஆடுநடைக் குதிரைகளையும் வழங்கினான்.
பின்னர் மன்னர்களின் வாழ்த்தொலியோடு யானைமீது உலா வந்தான். அப்போது அவனது சுற்றம் தேர்மேல் உலா வந்தது.
பாடல் 43 - ஏறா ஏணி
தொகுஏற உதவுவது ஏணி. ஏறாத ஏணி எது? கோக்காலி என்கிறது, பழைய உரை. மேலே உள்ள பொருளில் கோத்துத் தொங்கும் காலை உடையது கோக்காலி. (ஊசல்). செங்குட்டுவன் ஊசல். வயிரியர் அந்த ஊசலில் (உரியில்) நிறைந்து நெடிது வாழ்ந்திருக்கின்றனர். அந்த உரி நிரம்புவதும் இல்லை. நிரம்பியது அகல்வதும் இல்லை.
விருந்தின் வீழ்பிடி | மதம் கொண்ட யானைக்கு விருந்தாகும் பிடிகள் எண்ணில் அடங்கா. (இந்தக் காட்சியை ஊசலாடும் மகளிர் பார்த்தனர். அவர்கள் கவரிமான் மயிர்முடி வைத்து உச்சிக்கொண்டை போட்டில்லலருந்தனர்) அதுபோலச் செங்குட்டுவன் போரில் விழுந்த மன்னர் கணக்கில் அடங்கார். இமையத்துக்கும் குமரிக்கும் இடைப்பட்ட 'சொல் பல' நாட்டினர் அவர்கள்.
பேராறு (இக்காலத்தில் பெரியாறு என்கிறோம்) இவன் நாட்டில் ஓடிற்று. மழை இல்லாக் காலத்திலும் அதில் நீர்.
கடியேர் | 'நல்லேர்' விழாவில் கொன்றைப்பூ சூட்டி உழவு தொடங்கும்போது மழை பொழிவது வழக்கம். அந்த மழையைப் போலச் செங்குட்டுவன் துன்புற்றவர்களுக்கு உணவு வழங்கிய பின்னர் தான் உண்டான். நண்பர்களுக்கு நல்ல அணிகலன்களை வழங்கினான். யாழிசையோடு சேர்ந்து பாடும் விறலியர்க்குப் பெண்யானைகள் வழங்கினான். தான் வென்ற நாட்டிலிருந்து கொண்டுவந்த 'கொண்டி மள்ளர்'களுக்கு ஆண்யானைகளை வழங்குனான். அவைக்களத்திலே தோன்றி இவனை வாழ்த்தும் 'அகவல்' மகனுக்குக் குதிரைகள் வழங்கினான்.
கற்ப | இத்தகைய நற்பண்புகளை நன்கு கற்றவனே - என்பது புலவர் விளி
பாடல் 44 - நோய் தபு நோன் தொடை
தொகுஅறுகை என்பவன் இந்தக் குட்டுவனின் நண்பன். உழிஞைப்போரில் அறுகை என்பவன் மோகூர் மன்னனை வென்றான். என்றாலும் வென்ற அறுகையை மோகூர் மன்னன் பிடித்து ஒளித்து வைத்துவிட்டான். எனவே இந்தக் குட்டுவன் மோகூரைத் தாக்கினான்.
மோகூர் மன்னனின் காவல்மரம் வேம்பு. இந்தக் குட்டுவன் மோகூர் மன்னனை வென்றான். அவனது காவல்மரத்தை வெட்டி அதன் அடிமரத்தைத் தனக்கு முரசு செய்துகொள்வதற்காக முரச்சிக்கயிறு கட்டி பல யானைகளைப் பூட்டி இழுத்துவந்தான். பல அரசர்களை வென்று நல்லாட்சி புரிந்து இனிது மறைந்த மன்னர்களின் தாழி புதைக்கப்பட்டிருந்த வன்னிமர மன்றக் காட்டின் வழியே இழுத்துவந்தான்.
இதனால் இந்தக் குட்டுவன் 'ஆடுநடை அண்ணல்' ஆனான்.
இந்தப் போருக்காக நடந்த குட்டுவனின் கொடிப்படை நிலம் புடைத்து வருவது போலச் சென்றது. வெற்றியின் பயனாகக் கொண்டுவந்த அணிகலன்களைக் 'கனவிலும் கவலை ஒழிக' என்று சொல்லிக் குட்டுவன் வழங்கினான். 'பாடுமகளே' (பாடினியே) அவன் வழங்குவதைக் 'காணியர் காணிலியரோ' (பார்க்கிறீர்களா, பார்க்காமல் இருக்கிறீர்களா?)
பாடல் 45 - ஊன் துவை அடிசில
தொகுமழைமேகம் கொண்டால் குறையாமலும், மழைநீர் வந்தால் நிறையாமலும் இருக்கும் கடலை வேல் (வேலி) இட்டுத் தடுப்பார் யார் உளர்? இனியும் இல்லை. உனக்கு முன்னும் இல்லை. நீ கோட்டைக் கதவைத் தாழிடும் எழுமரம் போன்ற மார்பினை உடையவன். 'எழுமுடி மார்பின் எய்திய சேரல்'. அந்தத் திணிதோளை உயர்த்தி ஓச்சி நீ பிணம் அழுகும் காட்டில் துணங்கை ஆடினாய். உன் காலுக்குச் சோறு 'ஊன் துவை அடிசில்'. (துவை = காலால் மிதி) நீ பகைவரின் வில் விசையை அடக்கும் 'தோல்'(கவசம்). இத்தகைய பண்பினை உடைய தானை மன்னர் இனி யார் உளர்? முன்னும் இல்லை.
பாடல் 46 - கரைவாய்ப் பருதி
தொகுஇப்பாடலில் செங்குட்டுவன் கடல் அரிப்பைத் தடுக்க வேலியிட்ட செய்தி சொல்லப்படுகிறது. (வேல் = வேலி). முடிபுனை மகளிர் பேரியாழில் பாலைப்பண் அமைத்து செங்குட்டுவனின் பணியாத் தன்மை கொண்ட உழிஞைப் போரைப் பாடினர். செங்குட்டுவன் போருக்குச் சென்றபோது அவன் சென்ற தேரின் 'கரைவாய்ப் பரிதி' (மண்ணைக் கரையச் செய்யும் தேர்ச் சக்கரம்) உருண்டு அழித்த ஊர்களின் அழிவை எண்ணினால், குட்டுவன் மேல் 'செல்குவம்' (போர் தொடுப்போம்) என்று யாரும் எண்ணமாட்டார்கள்.
பாடல் 47 - நன்னுதல் விறலியர்
தொகுகுட்டுவன் பகைவரை அழித்து அழித்துப் பெரியவன் ஆனான். பரிசில் பெறுபவர்கள் அவன் பகைவரை அழிக்கும்போதெல்லாம் பரிசில் பெற்றுப் பெற்றுப் பெரியவர் ஆயினர். இந்தச் செய்திகளை மலையில் அருவி இறங்குவது போலக் கொடி பறக்கும் தெருக்களிலெல்லாம் விளக்கேற்றும் பெண்களின் வாய் சொல்லிச் சொல்லிப் பெரிதுபடுத்தியது.
பாடல் 48 - பேர் எழில் வாழ்க்கை
தொகுபல்பொறி மார்ப! உன் மலையில் தோன்றி உன் கடலில் மண்டும் ஆற்றில் நீ 'தீம் நீர் விழா' கொண்டாடுகிறாய். ஆறு சூழ்ந்த பொழிலில் தங்கிக் கொண்டாடப்படும் அந்த வேனில் விழாவில் நீ உன்னை விரும்பும் சுற்றத்தாலுடன் நுகர்வதுதான் நின் 'பேர் எழில் வாழ்க்கை'. இந்த வாழ்க்கை நின் காஞ்சியம் பெருந்துறை மணலைக் காட்டிலும் பலவாகப் பெருக வேண்டும். நீ பாணர்க்குப் பொற்றாமரையும் விறலியர்க்கு ஆரமும் பூட்டிய பின்னர் கடலுக்குள் புகுந்து போர் புரிந்த பரதவன். அங்கிருந்து கொண்டுவந்த கடல் வளங்களையெல்லாம் உனக்கென வைத்துக் கொள்ளமல் பாடுவோருக்கெல்லாம் வாரி வழங்குபவன். நெறி கல்லாத கொடையாளி நீ. போர்முகத்து நீ இட்ட தீயால் உன் மாலை வாடிள்ளது. உன் மார்புச் சந்தனம் வரிக்கோடுகளாக மாறியுள்ளது. இப்படிப்பட்ட பல்பொறி மார்பன் நீ.
பாடல் 49 - செங்கை மறவர்
தொகுவிறலியரே! வருக. குட்டுவனைக் கண்டு மீள்வோம். மோகூர்ப் போரில் இருபெரு வேந்தர்களும், வேளிரும் ஒன்றுகூடிக் குட்டுவனோடு மோதினர். நாற்படை நடத்திய குட்டுவன் அப் போரில் வெற்றி பெற்றான். மோகூர் மன்னனின் காவல்மரமாகிய வேம்பினை வெட்டி வீழ்த்தினான். மழைநீர் மேட்டுநிலத்தில் ஓடுவது போல போர் நடந்த மேட்டில் குருதி ஓடிற்று. போர்மறவர் அதனை அள்ளி மார்பில் பூசிக்கொண்டனர். இதனால் அவர்களின் கை செங்கை ஆயிற்று. இப்படிப் போர் நடத்திய குட்டுவனின் பெருஞ்சினத்தைக் கண்டு மீளலாம். வருக.
பாடல் 50 - வெருவரு புனல் தார்
தொகு(குட்டுவ) நீ கிழக்கு நோக்கிப் பாயும் காவிரி போலவும், பூ(மி) விரிந்து புனல் மூன்று கூடும் கூடல்(=குமரி) போலவும் புனல்தார் பூண்டவன். கோட்டைக்குள் இருந்துகொண்டு உனது போர்முரசைக் கேட்கும் வேந்தர்க்கு அது வெருவரு(=அச்சம் வருவிக்கும்) புனல்தார். பாசறையில் இருந்துகொண்டு தூங்காமல் இருக்கும் உன் கண் உனது மகளிர் கூந்தல் மெல்லணையில் எத்தனை நாள் துயின்றிருக்குமோ தெரியவில்லை.
பதிகம்
தொகுகடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனின் தந்தை - குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன். தாய் - சோழன் மணக்கிள்ளி என்பவனின் மகள். இந்தக் குட்டுவன் கடவுள் பத்தினிக்குக் கல் கொண்டுவருவதற்காகச் சென்றான். ஆரிய அண்ணலை வீழ்த்தினான். கல்லைக் கங்கையில் நீராட்டினான். எடுத்துக்கொண்டு வரும் வழியில் ஆனிரைகளைக் கவர்ந்துவந்தான். அவற்றை இடும்பில்புறம் என்னுமிடத்தில் விட்டுவிட்டான்.
வியலூர்க் கோட்டையை அழித்தான்.
அதன் எதிர்க் கரையிலிருந்த கொடுகூர் நகரையும் பாழாக்கினான்.
பழையன் (=மோகூர் அரசன்) காவல்மரம் வேம்பை வெட்டி வீழ்த்தினான்.
போரில் மாண்ட வீரர்களின் மனைவியர் களைந்த கூந்தலால் கயிறு திரித்து வேப்பந் துண்டைக் கட்டி யானைகளை வரிசையாகப் பூட்டி முரசு செய்துகொள்வதற்காக இழுத்துவரச் செய்தான்.
சோழர் குடிக்குள் போராடிக்கொண்டிருந்த 9 பேரை ஒடுக்கினான்.
உம்பற்காடு நிலப்பகுதி வருவாய் முழுவதையும் தன்னைப் பாடிய புலவர் பரணர் பெற்றுக்கொள்ளச் செய்தான். அத்துடன் அவருக்குத் தொண்டுசெய்யத் தன் மகன் 'குட்டுவன் சேரல்' என்பவனையும் கொடுத்தான்.