மோகூர்
மோகூர் சங்ககாலத்து ஊர். இது இக்காலத்தில் திருமோகூர் என்னும் பெயரினைப் பெற்றுள்ளது. சங்ககாலக் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் காலத்தில் இந்த மோகூரின் அரசன் பழையன். செங்குட்டுவனின் நண்பன் அறுகையைச் சிறை பிடித்தவன். பழையனின் தம்பி இளம் பழையன் மாறன்.
- மோகூரில் வேந்தரும் வேளிரும் கூடிப் போரிட்டனர். செங்குட்டுவன் அவர்களை வென்றதோடு அவ்வூர் காவல்மரம் வேம்பையும் வெட்டி வீழ்த்தினான்.[1]
- தோற்று மாண்ட மோகூர்ப் படையினரின் மகளிர் களைந்த கூந்தலைக் கயிறாக்கி, வெட்டிய வேப்பந்துண்டத்தைத் தன் நாட்டுக்குக் கொண்டுவந்து செங்குட்டுவன் தனக்கு முரசு செய்துகொண்டான்.[2]
- மோகூர் அரசன் பழையன்.[3]
- மோகூர் அரசன் பழையன் அவைக்களத்தில் நான்கு மொழிகள் பேசவல்ல நான்மொழிக் கோசர் இருந்தனர். அதுபோலத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அவைக்களத்திலும் நாற்பெருங் குழு இருந்தது. [4]
- தேரில் வந்து, மோகூர் பொதுமன்றத்தில் இருந்த பழமையான ஆலமரத்தடியில் இருந்துகொண்டு முரசு அறைந்து போரிட்ட கோசருக்கு மோகூர் அரசன் பணியாததால் கோசருக்குத் துணையாக மோரியர் படை வந்தது.[5]
அடிக்குறிப்பு
தொகு- ↑
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து,
மொய் வளம் செருக்கி, மொசிந்து வரு மோகூர் ...
பலர் பட, 15
கருஞ் சினை விறல் வேம்பு அறுத்த
பெருஞ் சினக் குட்டுவன் (பதிற்றுப்பத்து 49) - ↑
மோகூர் மன்னன் முரசம் கொண்டு,
நெடுமொழி பணித்து, அவன் வேம்பு முதல் தடிந்து, 15
முரசு செய முரச்சி, களிறு பல பூட்டி,
ஒழுகை உய்த்தோய்! (பதிற்றுப்பத்து 44) - ↑
பழையன் காக்கும் கருஞ் சினை வேம்பின்
முழாரை முழு முதல் துமியப் பண்ணி,
வால் இழை கழித்த நறும் பல் பெண்டிர் 15
பல் இருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி (பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்து, பதிகம்) - ↑
பழையன், மோகூர் அவையகம் விளங்க,
நான் மொழிக் கோசர் தோன்றியன்ன,
தாம் மேஎந் தோன்றிய நாற் பெருங் குழுவும் (மதுரைக்காஞ்சி 508 முதல் - ↑
வெல் கொடித்
துனை கால் அன்ன புனை தேர்க் கோசர்
தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில்,
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,
தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர்
பணியாமையின், பகை தலைவந்த
மா கெழு தானை வம்ப மோரியர் (அகம் 251)