நாற்பெருங் குழு
நாற்பெருங்குழு என்பது சங்ககாலத்தில் அரசன் ஆளுகைக்குத் துணை புரிந்த குழுக்களில் ஒன்று. ஐம்பெருங்குழு அரசனுக்குத் துணை புரிந்த ஆட்சிக்குழு. நாற்பெருங் குழு என்பது ஆட்சிக்குழு அன்று. நாலாவகையான, அதாவது பல்வேறுபட்ட மொழிகளைப் பேசும் மக்களின் கருத்துகள் மன்னனுக்குத் தெரிந்த மொழியில் மொழிபெயர்த்து அறிவிக்கும் குழு. [1]
நான்மொழிக் கோசர் என்போர் நாலா வகையான மொழிகளையும் பேசும் கோசர் குடியினர். மதுரையை அடுத்திருந்த மோகூரில் இவர்கள் வாழ்ந்தனர். பல்வேறு மொழிகளைப் பேசும் பன்னாட்டு மக்களும் மதுரைக்கு வந்துபோயினர். கிரேக்க வணிகன் ஒருவன் பாண்டியனைப் பற்றி அறிந்து குறிப்பிடும் செய்தி பெரிப்ளசு என்னும் நூல் குறிப்பிடுவது இங்கு எண்ணத் தக்கது.
பாண்டிய நாட்டுத் தலைநகர் இந்த மதுரையில் வாழ்ந்தது போலவே சோழநாட்டுத் தலைநகர்களில் ஒன்றான புகார் நகரத்திலும் புலம் பெயர்ந்து வந்த பன்மொழி பேசும் மக்கள் அவ்வூர் மக்களோடு கலந்து வாழ்ந்த வரலாறு தமிழகத்துக்கு உண்டு. [2]
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ மழை ஒழுக்கு அறாஅப் பிழையா விளையுள்,
பழையன், மோகூர் அவையகம் விளங்க,
நான் மொழிக் கோசர் தோன்றியன்ன,
தாம் மேஎந் தோன்றிய நாற் பெருங் குழுவும் (மதுரைக்காஞ்சி 507-510) - ↑ பல் ஆயமொடு பதி பழகி,
வேறு வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல்
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு, (215)
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து, இனிது, உறையும்,
முட்டாச் சிறப்பின், பட்டினம் (பட்டினப்பாலை அடி 213 முதல்)