மிஞிலி
நன்னனின்படைத்தலைவன்
தொகுமிஞிலி என்பவன் அரசன் நன்னனின் படைத்தலைவன். சங்ககாலத்தில் நன்னன் என்னும் பெயருடன் ஆங்காங்கே அவ்வப்போது பல மன்னர்கள் இருந்தனர். அவர்களில் இந்த நன்னன் பெண்கொலை புரிந்த நன்னன் எனக் கொள்வது பொருத்தமானது.
மிஞிலி என்னும் இவனைச் சில பாடல்களின் வேறு பதிப்புகள் ஞிமிலி என்றும் குறிப்பிடுகின்றன. மிஞிலியைப் பற்றிய செய்திகளை நற்றிணை 265, அகம் 142, 148, 181, 208, 396, ஆகிய பாடல்கள் தெரிவிக்கின்றன.
பாரம் என்னும் நகர் காவலன் -- வில்லோர் பெருமகன்
தொகுமிஞிலி பாரம் என்னும் நகரைக் காவல்புரிந்துவந்தான். அவன் வில்லோர் பெருமகன் என்று போற்றப்படுகிறான். இந்த வில்லோர் அம்பு விட்டால் அது வீளை என்னும் வாய்விசில் ஓசைபோன்ற ஓலியுடன் பாயுமாம். மிஞிலி கட்டான தோள்களை உடையவனாம். [1]
வாய்மொழி மிஞிலி
தொகுமிஞிலி “வாய்மொழி மிஞிலி” என்று போற்றப்படுகிறான். சத்தியம் தவறாதவன் என்பது இதன் பொருள். ஆய் எயினனைப் போலவே அதிகன் என்பவனும் பறவைகளைப் பாதுகாத்துவந்தான். மிஞிலி நன்னுக்குத் தான் கொடுத்த வாக்குத் தவறாமல் பெரும்படையுடன் வந்து தாக்கிய அதிகனைப் பாழி நகரில் இருந்த பேய்த்தெய்வத்துக்கு (காளிக்கு) உயிர்ப்பலி கொடுத்தான். [2]
கூகைப் பறவை இரவில் மேயும். பகலில் வெளிவராது. இதற்குக் காரணம் அன்று ஆய்-எயினன் போர்க்களத்தில் புண்பட்டுக் கிடப்பதைப் பார்க்க விரும்பாமல் பகலில் வரவில்லையாம். அதுமுதல் பகலில் வராத பழக்கத்தை மேற்கொண்டுள்ளதாம். இது ஒரு தற்குறிப்பேற்றம்.[3]
வாகைப்பறந்தலை போர்
தொகுஆய்-எயினன் என்பவன் வெளியன் வேள் என்பவனின் மகன். வேண்மான் என்பது வேள் மகன் என்னும் பொருளைத் தரும். [4] வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் நடந்த போரில் இந்த ஆய்-எயினன், மிஞிலி என்பவனால் கொல்லப்பட்டான். புன்னாட்டின் தலைநகரம் வாகை. [5] இந்த வாகைநகரை மீட்கும் போர் இவ்வூரில் நடைபெற்றதால் இதனை வாகைப்பறந்தலை என்றனர். போர்க்களத்தில் வீழ்ந்துகிடந்த ஆய்-எயினன் உடலில் வெயில் படாவண்ணம் அவன் வளர்த்த பறவைகள் வானில் பறந்து அவனுக்கு நிழல் செய்தனவாம். போருக்கு வழிகோலிய உருவினை நன்னன் பறவை நிழல் செய்த காட்சியைக்கூடக் காண வரவில்லையாம். இதனால் வாகை நகரில் வாழ்ந்த “வேள்-மகளிர்” நன்னன்மேல் ஆத்திரம் கொண்டு மார்பில் அடித்துக்கொண்டு சென்று அகுதை என்பவனிடம் முறையிட்டுக்கொண்டனர். அகுதை தன் படையுடன் வந்து புன்னாட்டை வேளிர்க்கே மீட்டுத் தந்தான்.[6] [7]
புன்னாடு என்பது கொள்ளு விளையும் நாடு. இது புன்செய் நாடு ஆதலால் புன்னாடு எனவும் வழங்கினர். தேர்ப்படையுடன் வந்த பொலம்பூண் நன்னன் இதனைத் தனதாக்கிக்கொண்டான். நன்னனின் படைத்தலைவன் மிஞிலி. இவன் ‘இகல் அடு கற்பு’க் கலையில் வல்லவன். புன்னாட்டு அரசனை “அஞ்சவேண்டாம்” என்று கூறிக்கொண்டு ஆய்-எயினன் என்பவன் மிஞிலியைத் தாக்கினான். ஆனால் ஆய்-எயினன் போரில் மாண்டான். [8]
சான்று தரும் பாடல்கள்
தொகு- ↑ வீளை அம்பின் வில்லோர் பெருமகன் பூந்தோள் யாப்பின் மிஞிலி – பரணர் நற்றிணை 265
- ↑ பரணர் அகம் 142
- ↑ பரணர் அகம் 148
- ↑ ஒப்புநோக்குக: பெருமான் = பெருமகன்
- ↑ இதனை இப்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்திலுள்ள வாகையூர் என்று சிலர் கருதுகின்றனர். இது பொருத்தமாகத் தெரியவில்லை.
- ↑ பரணர் அகம் 208
- ↑ பரணர் அகம் 181
- ↑ பரணர் அகம் 396