சங்க இலக்கியங்களில் இருந்து தமிழ் வரலாறு

பண்டைய தமிழகத்தை வரையறுக்க சங்க இலக்கியங்கள் முக்கியமான வரலாற்று மூலங்களாக உள்ளன. சங்க இலக்கியப் பாடல்கள் பல்வேறு மன்னர்களையும் இளவரசர்களையும் குறிப்பிடுகின்றன. அவை தொல்லியல் ஆதாரங்கள் மூலம் நிரூபனம் ஆகியுள்ளது. சேரர் சோழர், பாண்டியர் ஆகியோரின் வரலாற்றிற்கான முக்கியக் குறிப்பாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன.

சங்க காலம்

தொகு

சங்கம் என்பது பல்வேறு தமிழ்ப் புலவர்கள் கூடித் தங்கள் பாடல்கைளை வெளியிடப் பயன்படுத்திய ஒரு பழைய அமைப்பாகும். பாண்டிய மன்னர்களின் ஆதரவோடு அவர்கள் மதுரையில் அடிக்கடி கூடியிருந்துள்ளனர். சங்க காலம் என்பது கி.மு. 400 லிருந்து கி.பி.300 வரை உள்ள காலம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சங்கம் பற்றியக் குறிப்புகள் முதன் முதலில் எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த இறையனார் அகப்பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று சங்கங்கள் நடைபெற்று இருந்திருக்கின்றன. சங்க இலக்கியம் காதல், வீரம், போர், அரசியல், வணிகம் போன்றவற்றை உள்ளடக்கியது. பல்வேறு சங்க கால தமிழ் இலக்கியங்கள் கிடைக்காமல் போயுள்ளன. சங்க கால இலக்கியத்தில் ஒரு சிறு பகுதியே நமக்கு இப்போது கிடைத்துள்ளது.

சங்க காலத்தில் தான் தமிழ் மொழி வளர்ச்சி உச்சம் பெற்று இலக்கிய வெளிப்பாட்டிற்கு மிகச் சிறந்த மொழியாக இருந்துள்ளது. சமூக வாழ்வியல் முறைகளை மிகத் தெளிவாக சங்க இலக்கியங்கள் வரையறுக்கின்றன.

தென் மேற்குத் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் மூன்று தலைமுறை சேர மன்னர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இம்மூன்று பெயர்களும் சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து பாடலில் வருகிறது. இக்கல்வெட்டுக்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவையாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஸ்டரேபோ, டோலமி, பிளினி போன்ற பயணிகள் கிரேக்கம் ரோம் மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான வர்த்தகம் பற்றி விவரித்துள்ளனர். பல்வேறு ரோமன் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் மண்பாண்டங்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து கண்டெடுக்கபபட்டுள்ளது.

சங்கம்-வரலாற்று ஆதாரம்

தொகு

சங்க கால படைப்புகளின் காலத்தைக் கணக்கிடுவது மிகவும் கடினமாக உள்ளது.

இலக்கியங்களில் கூறப்பட்ட மன்னர்கள், தலைவர்கள், இலக்கியங்கள் வெளியிடும் செய்திகள் இவற்றை ஒப்பிட்டு ஆராய்கையில் சங்க இலக்கியம் நான்கு அல்லது ஐந்து தலைமுறை 120 அல்லது 150 ஆண்டுகள் நடந்த நிகழ்வுகளைப் பிரதிபலிக்கிறது.

கி.பி மூன்றாம் நூற்றாண்டில் வடக்கில் இருந்து வந்து களப்பிரர்கள் படையெடுப்புக்குப் பின்னர் சங்க காலம் முடிவுற்றது.

மேற்கோள்கள்

தொகு