சங்க கால வானியல்

சங்க கால தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாகக் கொண்டவர்கள். வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகுக்கு எடுத்தியம்பியவர்கள். தமிழகத்தில் வானியல் துறையில் சிறந்து விளங்கிய பலர் வாழ்ந்தனர் என்பதை கணியன் பூங்குன்றனார், கனிமேதாவியார், பக்குடுக்கை நன்கணியார் முதலிய பெயர்கள் சான்று பகர்கின்றன. சிலேட்டர் என்னும் வானியல் அறிஞர் தமிழருடைய வானநூற்கணித முறையே வழக்கிலுள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்னும் கருத்து ஈண்டு நோக்கத்தக்கது.

சங்கத் தமிழர் ஐம்பெரும் பூதங்களின் தோற்றங்களை வெளிப்படுத்தும்போது பரந்து விரிந்த வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றியுள்ள அறிவியல் உண்மையை இவ்வுலகுக்குப் பதிவு செய்துள்ளனர். சித்தர்கள் எனப்படுவோரே அக்கால விஞ்ஞானிகள் ஆவர்

இலக்கியத்தில் வானியல் தொகு

புறநானூறு தொகு

இன்று வானியலாலர்களால் கருதப்படும் துர்தேவதை என்னும் சூரியனின் கோள்கள் ஒன்றைச் சங்க கால தமிழர் மைம்மீன் என்றும் தூமம் என்றும் கண்டனர். [1]

பரிபாடல் தொகு

பரிபாடல் பாடலடிகள் முறையாகத் தோன்றும் ஊழிக் காலங்களை வெளிப்படுத்துகிறது. முறையே வானம் முதல் ஊழிக் காலத்திலும், காற்று இரண்டாம் ஊழியிலும், தீ மூன்றாம் ஊழியிலும், நீர் நான்காம் ஊழியிலும், நிலம் ஐந்தாம் ஊழியிலும் தோன்றிய நிகழ்வு இன்றைய அறிவியலாரும் உடன்படு கருத்தாகும். [2]

திருமுருகாற்றுப்படை தொகு

தமிழர் இவ்வுலகிலுள்ள உயிர்கள் நிலைத்து வாழ ஞாயிறே முதன்மைக் காரணம் என்பதை உணர்ந்திருந்தனர். தமிழரின் பொங்கல் திருநாள் ஞாயிற்றை முதன்மைப்படுத்துவது ஈண்டு நோக்கத்தக்கது. திருமுருகாற்றுப்படையின் தொடக்க வரிகள், உயிர்கள் மகிழ ஞாயிறு எழுவதாக நக்கீரர் பதிவு செய்கிறார். [3]

நற்றிணை தொகு

நற்றிணையில், உலக உயிர்கள் ஞாயிறின் கதிர்களால் உயிர் வாழ்கின்றன. இல்லையேல் இவ்வுலகம் பனிமண்டி உலக அழிவு ஏற்படும் என்ற உண்மை புலப்பட்டு நிற்கிறது. மேலும், நற்றிணை பாடலொன்று, ஞாயிறு இருளைப்போக்க அதன் உட்பகுதி நெருப்பினால் எரிந்து கொண்டிருக்கிறது என்றும் அதைச் சுற்றிலும் ஒளிப்படலம் உள்ளது என்றும் கூறுகிறது. அப்பாடலடிகள் வருமாறு. [4]

சிறுபாணாற்றுப்படை தொகு

சிறுபாணாற்றுப்படை மூலம், சங்கத்தமிழர் ஞாயிற்றை நெருப்புக் கோளம் என்கின்றனர். இன்றைய அறிவியல் அறிஞர்களும் ஞாயிறு வடிவமற்று எரிந்து கொண்டிருக்கின்ற நெருப்புக் கோளம் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். இன்றைய வானியலறிஞர்கள் ஞாயிற்றை ஒன்பது கோள்கள் சுற்றுவதாகக் கண்டறிந்துள்ளனர். இந்நிகழ்வின் எச்சத்தை சிறுபாணாற்றுப்படையில் காணமுடிகிறது. [5]

பதிற்றுப்பத்து தொகு

பதிற்றுப்பத்தின் வரிகள், ஞாயிற்றைச் சுற்றிலும் கோள்கள் சூழ்ந்துள்ள உண்மைப் பதிவைப் புலப்படுத்துகின்றன. இதன் மூலம் பல கோள்கள் ஞாயிற்றைச் சுற்றிவந்தன என்று தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பூமியை ஞாயிற்றின் கோளாக இவர்கள் கண்டறியவில்லை. மாறாக காட்சிப் பார்வையின் அடிப்படையில் பூமியை ஞாயிறும் சந்திரனும் சுற்றுவதாக நம்பினர். இதை, [6] இங்கு, ஞாயிறு கிழக்கில் தோன்றி, மேற்கில் மறைவதையும், பூமி நிலையாக ஓரிடத்திலேயே இருப்பதாகவும் காட்சிப் பார்வையின் அடிப்படையில் அறிவியல் உண்மையை அறியாது இருந்த செய்தியும் வெளிப்பட்டு நிற்கிறது.

மற்ற பாடல்கள் தொகு

மேலும், திருப்பாவை 13,[7] புறம்:25:1-3[8] 26:1-2,[9]; பதிற்றுப்பத்து 13:25-26[10] ஆகிய பாடல்கள் மூலமும் அறியமுடிகிறது. சங்க காலத் தமிழரின் வானியல் அறிவு இன்றைய அறிவுசார் உலகுக்கு ஒரு முன்னோடி என்பதில் ஐயமில்லை.

மேற்கோள் தொகு

  1. மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும்,
    தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,
    வயல்அகம் நிறையப், புதற்பூ மலர,
    மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
    ஆமா நெடு நிறை நன்புல் ஆரக்,
    கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்,
    பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே;
    -புறநானூறு-117
  2. விசும்பில் ஊழூழ் செல்லக்
    கருவளர் வானத்திசையில் தோன்றி
    உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
    செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
    தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
    நுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு
    - பரிபாடல்-2
  3. உலக முவப்பு வலனேர்பு திரிதரு
    பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
    ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
    - திருமுருகாற்றுப்படை:1-3
  4. வானம் மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க்
    கதிர்காய்ந்து எழுந்தகங் கனலி ஞாயிறு
    - நற்றிணை:163
  5. வாணிற விசும்பின் கோண்மீன் சூழ்ந்த
    விளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து
    - சிறுபாணாற்றுப்படை: 242-43
  6. குடதிசை மாய்ந்து குணமுதல் தோன்றிப்
    பாயிருள் அகற்றும் பயங்கெழு பண்பின்
    - பதிற்றுப்பத்து: 22:33-34)
  7. வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
    புள்ளும் சிலம்பினகாண் போதரிக் க்ண்ணினாய்
    -திருப்பாவை-13
  8. மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல
    ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது
    உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு,
    -புறநானூறு(25:1-3)
  9. நளி கடல் இருங் குட்டத்து
    வளி புடைத்த கலம் போலக்,
    -புறநானூறு(26:1-2)
  10. அழல்சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
    மழைவேண்டு புலத்து மா஡஢ நிற்ப
    -பதிற்றுப்பத்து(25-26)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்க_கால_வானியல்&oldid=2893136" இலிருந்து மீள்விக்கப்பட்டது