சசிவர்ண போதம்
சசிவர்ண போதம் என்பது மோகவதைப் பரணி என்னும் நூலின் ஒரு பகுதி. மோகவதைப் பரணி தத்துவராயர் நூல்களில் ஒன்று. காலம் 15ஆம் நூற்றாண்டு. பரணி நூலில் இது பேய்களுக்குத் தேவி கூறியதாக வருகிறது.
சசிவர்ண போதம் தனி நூலாகப் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. வேதாந்தம் கற்போர் முதலில் இதனைக் கற்பது வழக்கமாக இருந்துவந்தது.
சூத சங்கிதை என்னும் வடநூலில் முத்திக்காண்டத்தில் கூறப்படும் செய்திகளை இது தன்னகத்தே கொண்டது. அந்நூலில் பரமேசுவரன் திருமாலுக்குச் சசிவர்ணன் கதையைச் சொல்வதாக அது வருகிறது. குருசேவையின் மகிமையை விளக்குவது.
சமசுகிருத மொழியில், சசிவர்ணன் எனில் வெள்ளை நிறம் கொண்டவன். போதம் எனில் ஞானம் எனப்பொருள். பாக எக்கியன் என்னும் அந்தணனின் மகன். எல்லா வகையான தீய செயல்களையும் செய்து நோயுற்று உழன்றான். தந்தை முயற்சியால் நல்ல குருவிடம் அருளுரை(உபதேசம்) பெற்று நல்லவனாகி வீடுபேறு அடைந்தான்.
பரணி நூலின் பகுதி ஆதலால் பாடல்கள் தாழிசைகளாக அமைந்துள்ளன. இதன் 30 பாடல்கள் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட விருதாசல புராணம் என்னும் நூலின் இறுதிப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005.