சஜிபு நோங்மா பன்பா

மெய்தி செரோபா அல்லது சஜிபு செரொபா என்றும் அழைக்கப்படும் சஜிபு நோங்மா பன்பா (Sajibu Nongma Panba), இந்திய மாநிலமான மணிப்பூரில் சனாமஹிச மதத்தைப் பின்பற்றும் மக்களின் சந்திர புத்தாண்டு விழாவாகும். [1] [2] சஜிபு நோங்மா பன்பா என்ற பெயர் மணிப்பூரி சொற்களிலிருந்து உருவானது: சஜிபு - வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் வரும் மெய்தி சந்திர நாட்காட்டியின் படி என்றும், நோங்மா - ஒரு மாதத்தின் முதல் தேதி என்றும், பன்பா - இருக்க வேண்டும் எனப் பொருள். உண்மையில், இதன் பொருள் சஜிபு மாதத்தின் முதல் நாள் என்பதாகும். இதேபோல், இந்து சந்திர நாட்காட்டியின்படி, சந்திர புத்தாண்டானது கருநாடகம், ஆந்திரா, மகாராட்டிரம் போன்ற பல இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. [3]

சஜிபு நோங்மா பன்பா
பிற பெயர்(கள்)மெய்தி செரோபா
கடைப்பிடிப்போர்மெய்தி மக்கள்
வகைஆசியத் திருவிழா
கொண்டாட்டங்கள்முதல் நாள்
தொடக்கம்சஜிபு மாத்தத்தின் முதல் நாள்
நாள்மார்ச் (பொதுவாக), ஏப்ரல் (எப்போதாவது)

இருப்பினும், சனாமஹிசத்தின் நம்பிக்கையைப் பின்பற்றுபவரின் கூற்றுப்படி, மெய்தி புத்தாண்டு / சஜிபு நோங்மா பன்பா என்பது மன்னர் மாலியா பம்பால்ச்சாவின் (கிமு 1359 கிமு -1329) ஆட்சியின் போது தொடங்கியது. இவர் கோய்-கோய் என்றும் அழைக்கப்பட்டார். கோய்கோய் தனது 25 வயதில் அரியணையில் ஏறினார். இந்த நாளிலிருந்து, மாரி-ஃபாம் என்பப்படும் மெய்தி நாட்காட்டி (செயிரோபா) அறிமுகப்படுத்தப்பட்டது. [4]

திருவிழா

தொகு

முதல் பிரசாத சடங்கு

தொகு

மெய்தி மக்கள் திருவிழாவை மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடுகிறார்கள். திருவிழாவின் அதிகாலையில் மெய்தி தெய்வமான இலைனிங்தூ சனாமஹிக்கு பழங்கள், காய்கறிகள், அரிசி மற்றும் பிற சமைக்காத உணவுப் பொருட்களை சடங்கு பிரசாதத்துடன் படைப்பதிலிருந்து அன்றைய நாள் தொடங்குகிறது. தங்கள் குடும்பத்துடன் ஒரு ஆடம்பரமான விருந்தும் நடைபெறுகிறது.

விருந்து தயாரித்தல்

தொகு

இலைனிங்தோ சனாமஹியிடமிருந்து ஆசீர்வாதம் பெற்ற பிறகு, பிரசாதங்களைப் பயன்படுத்தி பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. பாரம்பரியமாக, ஆண்களே உணவுகளை உருவாக்குகிறார்கள். பெண்கள் பொருட்களை நறுக்கி கழுவ உதவுகிறார்கள்.

இரண்டாவது பிரசாத சடங்கு

தொகு

விருந்துக்கான உணவுகள் தயாரிக்கப்பட்ட பிறகு, அவை வீட்டைச் சுற்றியுள்ள இரண்டு வெவ்வேறு பாரம்பரிய இடங்களில் சடங்கு முறையில் வழங்கப்படுகின்றன: ஒன்று வீட்டின் முன் வாயிலிலும் மற்றொன்று வீட்டின் பின்புற வாயிலிலும் வைக்கப்படுகின்றன. ஒரு பகுதியை (சுமார் 2x2 அடி) சுத்தம் செய்து மண், பூக்கள் மற்றும் இலைகளால் அலங்கரிப்பதன் மூலம் சடங்கிற்கு முன் இந்த இடங்கள் சிறப்பாக சுத்தப்படுத்தப்பட்டு புனிதப்படுத்தப்படுகின்றன. பாரம்பரியமாக, வீட்டின் மூத்த மகன் இந்த புனிதப்படுத்தப்பட்ட பகுதியில் கும்சனா கும்லிக்லாய் (தங்க ஆண்டின் இறைவன்), இலாம்சென்பா துசென்பா (நிலத்தின் பாதுகாவலர்) மற்றும் இலம்மாபா துமாபா (நிலத்தின் இறைவன்) என்ற மூன்று தெய்வங்களுக்கும் பிரசாதம் வழங்குவார் . [5] பிரசாதம் பாரம்பரியமாக வேகவைத்த அரிசி, ஒரு நாணயம், ஒரு மெழுகுவர்த்தி, ஒரு தூபக் குச்சி என ஒற்றைப்படையிலும், பழங்கள், பூக்கள், போன்ற அனைத்தும் ஒரு வாழை இலையில் வைக்கப்படுகின்றன. இந்த சடங்கு காலையில் செய்யப்படுகிறது.

விருந்து

தொகு

இந்த சடங்கிற்குப் பிறகு, விருந்துக்கு தயாரிக்கப்பட்ட உணவுகள் உறவினர்கள் / அண்டை வீட்டார்களுடன் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. இந்த வழக்கம் "மாதேல் லான்பா" என்று அழைக்கப்படுகிறது. அதன் பிறகு விருந்து தொடங்கும். புத்தாண்டு நாளில் அந்த நாளில் நடக்கும் எதுவும் ஆண்டு முழுவதும் நடக்கும் என்று நம்பப்படுகிறது. அதாவது அந்த நாளில் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால், ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம் என்ற நம்பிக்கையாகும்.

சிங் கோபா: மலை ஏறுதல்

தொகு

விருந்துக்குப் பிறகு, குடும்ப உறுப்பினர்கள் மலை தெய்வத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக அருகிலுள்ள ஒரு சிறிய மலையை ஏறுவது மரபு. இது தெய்வீகத்தை அடைய ஆன்மா செல்லும் உயரத்தை குறிக்கிறது. சிங்ஜமீயில் உள்ள "சின்-ந்கா" மற்றும் சிங்மேராங்கில் "சீராவ் சிங்" போன்ற மலையடிவாரங்கள் இந்த மலை ஏறும் சடங்கிற்காக சிறப்பாக தயாரிக்கப்படுகின்றன. மலை ஏறுபவர்களுக்கான பொம்மைக் கடைகள், உணவகங்கள் மற்றும் பலவகையான சிறிய கடைகள் அந்த நாளில் மலையடிவாரத்தில் அமைக்கப்படும். சிங் கோபா பொதுவாக சூரியன் மறையும் முன் மதியம் முதல் மாலை வரை நிகழ்த்தப்படுகிறது.

திருவிழாவிற்கு முன்னர் நிகழ்த்தப்படும் பாரம்பரிய நடவடிக்கைகள்

தொகு

திருவிழாவிற்கு முன்னர் மெய்தி மக்களின் அனைத்து குடும்பங்களிலும் துப்புரவு நடவடிக்கைகள் காணப்படுகின்றன. அவர்கள் உடைகள், பாத்திரங்கள், அனைத்து வீட்டுப் பொருட்கள், வீட்டைச் சுற்றிலும் பயன்படுத்தப்படாத பொருட்கள் போன்றவை அனைத்தையும் சுத்தம் செய்வார்கள். புதிய ஆண்டில் அணிய புதிய ஆடைகளை வாங்குவதும் பாரம்பரியமானது.

ஒரு திருமணமான பெண் பண்டிகை நாளுக்கு முன்பு தனது தந்தை மற்றும் சகோதரர்களுக்கு ஒரு பரிசை, வழக்கமாக ஒரு துணியை வழங்க வேண்டும் என்பதும் பாரம்பரியமானது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஜிபு_நோங்மா_பன்பா&oldid=3109538" இலிருந்து மீள்விக்கப்பட்டது