சதங்கை (சிற்றிதழ்)

சதங்கை என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், நாகர்கோவிலில் 1970 ஆம் ஆண்டுகளில் வெளியான ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும்.

வரலாறு தொகு

சதங்கை நாகர்கோயிலில் 1971 நவம்பரில் இருந்து இருந்து வெளியானது. இதன் ஆசிரியரும் வெளியிட்டாளரும் வனமாலிகை ஆவார்.[1] தரமான வாசகர்களை ஊக்குவிப்பது அவருடைய நோக்கமாக இருந்தது. அதனாலேயே, சதங்கை - இலட்சிய வாசகர்களின் வழிகாட்டி என்று பல ஆண்டுகள் இந்த சிற்றிதழில் பொறிக்கப்பட்டு வந்தது. பின்னர் அது இலக்கிய வாசகனின் நண்பன் என்று மாற்றப்பட்டது.[2]

சதங்கை அக்கால விகடன் அளவில் (தற்போதைய குமுதம் அளவில்) வெளியானது. துவக்க காலத்தில், 48 அல்லது 56 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. பிறகு காகித விலை உயர்வு, பொருளாதார நெருக்கடி காரணமாக, பக்கங்கள் குறையலாயிற்று. மாதப் பத்திரிகை முதல் இரண்டு வருடங்கள், ஒவ்வொரு மாத முதல் வாரத்திலும் வெளிவந்தது. பின்னர் கால தாமதமும், சில மாதங்களுக்கு (மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு) ஒரு இதழ் என்று வெளிவருவதும் தவிர்க்க இயலாத நிலை ஆயிற்று. பின்னர், நீண்ட காலம் வெளிவராமல் இருந்து, திடீரென்று இது புத்துயிர் பெற்று மிக மெலிந்த தன்மையில் வெளிவருவதும் இயல்பான ஒன்றாக இருந்தது.[2]

துவக்கத்தில், சதங்கை சிறப்பான அட்டை வடிவமைப்பை பெற்றிருந்தது. கலைச் சிலைகளின் ஒளிப்படங்கள் வசீகரமாக அச்சிடப் பெற்றிருந்தன. பிறகு நவீன ஓவியங்கள் வந்தன. வர வர, சாதாத் தாளில் எழுத்தாளர்களது பெயர்கள் அச்சிடப்பட்டன. சில சமயம் பத்தே பத்துப் பக்கங்கள் ஒரே ஒரு கட்டுரை அல்லது கதை, இரண்டு கவிதைகள் தாங்கி இதழ் வந்தது.[2]

சதங்கை அவ்வப்போது சிறிய அளவில் ( தீபாவளி மலர் என்றோ, பொங்கல் மலர் என்றோ) சிறப்பு மலர் தயாரித்துள்ளது. 1976 ஆகத்து 'சதங்கை' கிருஷ்ணன் நம்பி நினைவு மலராக வந்தது. 14 பக்கங்களில், 'நம்பி எனும் நண்பர்' என்று வனமாலிகை ஒன்றரைப் பக்கம் எழுதியிருந்தார். நம்பியின் 'இரண்டு முன்னுரைகள் -மறு பிரசுரம். 'கிருஷ்ணன் நம்பியின் கதைகள்' பற்றி நகுலன் எழுதிய பக்கக் கட்டுரை வெளியானது. இதன் பல ஆண்டு ஆயுளில் வேறு எந்தப் படைப்பாளி பற்றியும் 'சதங்கை' மலர் தயாரித்ததில்லை.[2]

சதங்கை 1982 வரை வந்து கொண்டு இருந்தது. 1971இல் தோன்றிய பத்திரிகையின் 75 வது இதழ் 1982 செப்டம்பரில் வரவிருக்கிறது- சிறப்பு மலராக என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதன் எழுபத்தைந்தாவது இதழ் வெளிவரவேயில்லை.[2]

படைப்புகள் தொகு

வனமாலிகை, தரமான தமிழ் வாசகர்களிடம் நம்பிக்கையும் பெரு மதிப்பும் கொண்டவர் என்பதை ‘சதங்கை'யின் பல வருட இதழ்கள் நிரூபிப்பதாக உள்ளன. எழுத்தாளர்களையும், படைப்பாளிகளையும் செவ்வி கண்டு, அவர்களது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதே வழக்கமாக உள்ள நிலையில் இருந்து வருகிற நிலையில். வனமாலிகை தரமான வாசகர்களைப் பேட்டி கண்டு, அவர்களது கருத்துகளை விரிவாக வெளியிட்டார். தனித் தன்மை கொண்ட இந்தப் பகுதி சதங்கையில் முதல் ஆண்டில் தொடர்ந்து இடம் பெற்றது. இந்த ‘வாசகர் பேட்டி' நாலைந்து பக்கங்கள் வரை வந்துள்ளது.

கருத்து மேடை என்ற பகுதியும் குறிப்பிடத் தகுந்தது. ஐந்தாறு பேர் ( முக்கியமாக வாசகர்கள் ) கூடி குறிப்பிட்ட ஒரு எழுத்தாளரின் படைப்புகள் பற்றி விவாதிப்பது. இரண்டாவது இதழில் ஜெயகாந்தன் கதைகளை அலசி ஆராய்ந்த உரையாடல் வந்தது.

துவக்க ஆண்டுகளில் மரபுக் கவிதைகளே இதில் இடம் பெற்றன. பிறகு புதுக் கவிதைகள் மட்டுமே சதங்கையில் வெளியாயின.[2]

குறிப்புகள் தொகு

  1. "சதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-05.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 94–98. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதங்கை_(சிற்றிதழ்)&oldid=3599746" இலிருந்து மீள்விக்கப்பட்டது