சமூக வகுப்பு
சமூக வகுப்பு (social class) என்பது, சமூக அறிவியல்களிலும், அரசியல் கோட்பாட்டிலும் சமூக அடுக்கமைவு மாதிரிகளை மையப்படுத்தித் தற்சார்பாக வரைவிலக்கணம் கூறப்படும் ஒரு தொகுதி கருத்துருக்கள் ஆகும். இதில் மக்கள், படிநிலை அமைப்புக் கொண்ட சமூகப் பகுப்புக்களில் குழுக்களாக அடக்கப்படுகின்றனர்.[1] மிகப் பொதுவான பகுப்பு உயர், நடுத்தர, தாழ்ந்த வகுப்புக்கள் ஆகும்.
"வகுப்பு", சமூகவியலாளர்கள், அரசறிவியலாளர்கள், மானிடவியலாளர்கள், சமூக வரலாற்றாளர்கள் போன்றோருடைய ஆய்வுப் பொருளாக உள்ளது. எனினும், "வகுப்பு" என்பதன் வரைவிலக்கணம் தொடர்பில் ஒருமித்த கருத்து இல்லை என்பதுடன், இதற்குப் பலவாறான, சிலவேளைகளில் முரண்படுகின்ற பொருள்களும் உள்ளன. பொதுவாக, "சமூக வகுப்பு" என்பது, "ஒரே சமூக, பொருளாதார, பண்பாட்டு, அரசியல், கல்வித் தகுதிநிலை கொண்ட மக்கள்" என வரைவிலக்கணம் கூறப்படும் "சமூக பொருளாதார வகுப்பு" என்பதற்கு ஒத்த பொருளில் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, "தொழிலாளர் வகுப்பு", "வளர்ந்துவரும் உயர்தொழில் வகுப்பு" போன்றவற்றைக் குறிப்பிடலாம்.[2] இருந்தாலும், கல்வியாளர்கள் சமூக வகுப்பையும், சமூக பொருளாதாரத் தகுதிநிலையையும் வேறுபடுத்துகின்றனர். முதலாவது உறுதியான சமூக பண்பாட்டுப் பின்னணி உடையதாகவும், பின்னது காலப்போக்கில் கூடுதலாக மாற்றமடையக்கூடிய ஒருவரின் தற்போதைய சமூக, பொருளாதார நிலையைக் குறிப்பதாகவும் உள்ளது.[3]
சமூகத்தில் சமூக வகுப்பபைத் தீர்மானிக்கும் அளவீடு காலத்துக்குக் காலம் மாறிவருகின்றது. உற்பத்திச் சாதனங்களுடனான தொடர்பே வகுப்பைத் தீர்மானிப்பதாக கார்ல் மார்க்சு கருதினார். சமூகவியலாளர் மக்சு வெபர், பொருளாதார நிலையாலேயே வகுப்பு தீர்மானிக்கப்படுகிறது என்றும் சமூகத் தகுதிநிலையால் அல்ல என்றும் கூறுகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Grant, J. Andrew (2001). "class, definition of". In Jones, R.J. Barry (ed.). Routledge Encyclopedia of International Political Economy: Entries A-F. Taylor & Francis. p. 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-24350-6.
- ↑ Princeton University. "Social class". WordNet Search 3.1. Retrieved on: 2012-01-25.
- ↑ Rubin, M., Denson, N., Kilpatrick, S., Matthews, K. E., Stehlik, T., & Zyngier, D. (2014). ""I am working-class": Subjective self-definition as a missing measure of social class and socioeconomic status in higher education research". Educational Researcher 43: 196–200. doi:10.3102/0013189X14528373. https://dx.doi.org/10.3102/0013189X14528373.