சாத்தூர் பிச்சைக்குட்டி

| image =

ச.பா. பிச்சைக்குட்டி
வில்லிசை வேந்தர் சாத்தூர் ச.பா. பிச்சைக்குட்டி
பிறப்பு27 நவம்பர் 1922 (1922-11-27) (அகவை 102)
சோழபுரம், (தற்போது
தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா
இனம்தமிழர்
குடியுரிமைஇந்தியர்
பணிவில்லிசைக் கலைஞர்
பெற்றோர்சங்கர வடிவு (தாய்)
பார்வதி நாதன் (தந்தை)
வாழ்க்கைத்
துணை
பார்வதி அம்மையார்
villisai stage programme

சாத்தூர் பிச்சைக்குட்டி தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வில்லிசை கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு:

தொகு

இன்றைய தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகில் உள்ள சோழபுரத்தில் ச.பார்வதிநாதபிள்ளை, சங்கரவடிவு அம்மையார் ஆகியோரின் மகனாக 27.11.1922இல் பிறந்தவர். மனைவி பார்வதி அம்மையார்.

வில்லிசை வாழ்க்கை:

தொகு

சாத்தூரிலுள்ள ஆயிர வைசிய நடுநிலைப் பள்ளியில் 1948ஆம் ஆண்டு முதல் 1952ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

திருநெல்வேலி வில்லிசைப் புலவர் அய்யன்பிள்ளை சாத்தூரில் நிகழ்த்திய வில்லுபாட்டு கச்சேரிக்கு தற்செயலாக தன் நண்பர்களுடன் வந்த பிச்சைக்குட்டி அதில் மனதை பறி கொடுத்தார். அதை தொடர்ந்து அவரின் நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் அங்கு சென்று வில்லுப்பாட்டின் கலை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார்.

அவர் பணியாற்றி வந்த பள்ளி மாணவர்களைக் கொண்டு ஒரு மாணவர் கலைக்குழுவினை அமைத்தார். அம்மாணவர் குழு மூலம் பிச்சைக்குட்டி இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்றினை முதன்முதலில் “ சுதந்திர உதயம் ” எனும் தலைப்பில் வில்லுப்பாட்டை அரங்கேற்றினார்.

1949ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் நாள் எட்டையபுரத்தில் நிகழ்ந்த பாரதி விழாவில் இம்மாணவர்கள் பாடினர். எட்டையபுரத்தில் நிகழ்ந்த இவ்வில்லுப்பாட்டைக் கேட்ட கல்கி கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார், கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

ஆங்கிலேயரது ஆட்சியை எதிர்த்துப்போரிட்ட மாவீரன் கட்டபொம்மனின்  வீரவரலாற்றை வில்லுப்பாட்டுநிகழ்ச்சியாக  8.6.1952 அன்று திருச்சி வானொலி ஒலிபரப்பியது.

1953ஆம் ஆண்டு மக்கள் தலைவர் கப்பல் ஓட்டிய செம்மல் வ.உ. சிதம்பரனாரின்  தியாக வரலாற்றினைச் 'சுதந்திரக் கப்பல்' என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டை   திருச்சி வானொலி ஒலிபரப்பியது.

1953 நவம்பர் 5ஆம் நாள் வியாழக்கிழமை 'தர்மத்தின் வெற்றி' என்னும் தலைப்பில் இம்மாணவர்கள் திருச்சி வானொலியில் பாடினர்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் அளவிலேயே முடங்கிக் கிடந்த வில்லிசையினைத் தமிழகம் முழுவதும் சென்று பாடி  இக்கலைக்குப் புத்துயிர் ஊட்டி அனைவரும் ஏற்றுப் போற்றும்படி செய்தார்.

இந்தியாவின் வடபுலத்தில் பம்பாய், ஆமதாபாத், கல்கத்தா, புதுதில்லி, ரிசிகேசம் முதலிய தமிழர் வாழும் இடங்களுக்கும், இலங்கை, மலேயா, சிங்கப்பூர், பினாங்கு ஆகிய அயல்நாடுகளுக்கும் தம் குழுவினருடன்  சென்று

சுமார் 2000க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளைப் பல்வேறு இடங்களில் செய்திருக்கிறார் பிச்சைக்குட்டி.

வில்லிசையில் பிச்சைக்குட்டி செய்த மாற்றங்கள்:

தொகு

வில்லுப்பாட்டுக் கலையில் கதைப் பொருளில் மாற்றம், கதையமைப்பில் மாற்றம், கால அளவில் சுருக்கம் போன்ற பல்வேறு மாறுதல்கள் செய்த முன்னோடிகளில் ஒருவர் பிச்சைக்குட்டி.

வீரதேவதைகளின் கோவில்களில் பாடப்பெற்ற ரத்தம் சிந்தும் கதைகள், பழிவாங்கப்பட்டவரின் கதைகளாக மட்டுமே என்றிருந்த வில்லிசையை எல்லாக் கதைகளுக்குமானதாக மாற்றினார்.

விடிய விடிய வில்லுப்பாட்டுப் பாடிய நிலையினையும் பகலில் வில்லுப்பாட்டுப் பாடிய நிலையினையும் பிச்சைக் குட்டி மாற்றி, மூன்று மணி நேரத்திற்குள் பாடி முடிக்கும் நிலையினை உண்டாக்கினார். குடம், உடுக்கு, சிங்கி, தாளக்கட்டை ஆகிய பின்னிசைக் கருவிகளுடன்  தோலிசைக் கருவியான ஆர்மோனியம் பிச்சைக்குட்டி அவர்களால் புதியதாகச் சேர்க்கப்பட்டது.

சிறப்பு:

தொகு

வில்லிசைக்கு முதன்முதலில் கலைமாமணி விருது வாங்கியவர்.

கோவில் கொடைகளில் மட்டும் நிகழ்த்தப்பட்ட வில்லிசையை பல சங்கீத சபைகளிலும்,கர்நாடக இசையோடு பாடப் பெரும் தமிழ்க் கீர்த்தனைகளுக்கு இடம் கொடுத்து வரும் சென்னை அண்ணாமலை மன்றத்திலும் பாடபெரும் நிலைக்கு உயர்த்தியவர்.

இயற்றிய வில்லிசை கதைகள்:

தொகு

சுதந்திர உதயம், காந்தி மகான் கதை, கட்பொம்மு கதை, பார்வதி கல்யாணம், சீதா கல்யாணம், அய்யப்பன் கதை, கடவுள் முன் காந்தி, புதுமைப்பித்தன் கதை, வாலி மோட்சம், கண்ணகிக் கதை, கண்ணன் தூது, வள்ளித் திருமணம், தருமிக்குப் பொற்கிழியளித்த கதை, பிட்டுக்கு மண் சுமந்த கதை, ஏகலைவன் கதை, மந்தரை சூழ்ச்சி, விராட பருவம், அனுமன் தூது, ஆண்டாள் கதை, அப்பர் கதை, பாஞ்சாலி சபதம், ஆதிசங்கரர் கதை, கவி பாரதியார் கதை, மானிடர் மீட்பு, ரேணுகாதேவி சரிதம்,  தமிழ்வேள் சர்.பி.டி.இராஜன் கதை, பி.எஸ்.குமாரசாமி ராஜா கதை ஆகிய இருபத்தி எட்டு கதைகளைத் தன் வாழ்நாளில் இயற்றியுள்ளார்.

விருதுகள் மற்றும் பட்டங்கள்:

தொகு

புது டெல்லி வானொலி சங்கீத சம்மேளனம் வழங்கிய விருது – 1957

1970 – ல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கிய கலைமாமணி விருது.

இமயமலை ரிசிகேசம் வேதாந்தப் பல்கலைக்கழகத்தின் அதிபர் சிவானந்த மகராஜ் 1957 ல் வழங்கிய வில்லுப்பாட்டு பிரவீணா, வில்லுப்பாட்டு விசாரதா என்னும் இரு பட்டங்கள்.

திருநெல்வேலி சங்கீத சபை வழங்கிய வில்லிசை சொல்லுநர், வில்லிசை அரசு என்னும் பட்டங்கள்.

திருவாடுதுறை ஆதினம் பிச்சைக்குட்டியை ஆஸ்தான வித்துவான் ஆக்கி அவரை பெருமைபடுத்தியது.

மறைவு:

தொகு

தன் 49  ம் வயதில் 1971 இல் இயற்கை எய்தினார்.

பிச்சைக்குட்டி பற்றிய நூல்கள்:

தொகு
  • எழுத்தாளர் சோ. தர்மன் சாத்தூர் பிச்சைக்குட்டியை பற்றி வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி என்னும் வாழ்க்கை வரலாறு நூல் எழுதியுள்ளார்.
  • பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி பேராசிரியர்  வி.கே. துரை அரசு  என்பவர்  வில்லிசை வேந்தர் கலைமாமணி சாத்தூர் பிச்சைக்குட்டி  என்ற தலைப்பில் ஆய்வு செய்துள்ளார் .

வெளி இணைப்புகள்:

தொகு
  • 1.வில்லிசைக் கலைஞர் சாத்தூர் பிச்சைக்குட்டி (1922 - 1971), அ.கா. பெருமாள், கீற்று.காம், ஆகஸ்ட் 2022

https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-aug22/44258-1922-1971

  • 2. அஹிம்சா மூர்த்தி - மகான் காந்தி வில்லுப்பாட்டு, சாத்தூர் பிச்சைக்குட்டி, யூடியூப்.காம், மே 09, 2020

https://www.youtube.com/watch?v=fFg-UYWvY54

  • 3. சீதா கல்யாணம் வில்லிசை வேந்தர் சாத்தூர் டாக்டர் பிச்சைக்குட்டி

https://www.youtube.com/watch?v=WO35OKKRNWc&t=32s

  • 4. வில்லிசை வேந்தர் சாத்தூர் டாக்டர் பிச்சைக்குட்டி வழங்கும் மகாபாரத சூதாட்டப் படல வில்லுப்பாட்டு

https://www.youtube.com/watch?v=NXzZsE3GH_o&t=92s