சான் வில்லியம் ஸ்ட்ரட்

சான் வில்லியம் ஸ்ட்ரட், மூன்றாம் பாரன் ராலே (John William Strutt, 3rd Baron Rayleigh, 12 நவம்பர் 1842 – 30 சூன் 1919) என்பவர் இங்கிலாந்து இயற்பியலறிஞர். ஆர்கன் என்ற அரிய தன்மையுள்ள வாயுவைக் கண்டறிந்தவர். வாயுக்களின் அடர்த்திகளைப் பற்றிய ஆய்வுகளுக்காகவும், அதன் மூலம் ஆர்கன் வாயுவைக் கண்டு பிடித்ததற்காகவும் இவருக்கு 1904 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. வானம் ஏன் நீலநிறமாக உள்ளது என்பதற்கு இவருடைய ஒளிச்சிதறல் (Scattering of Light) பற்றிய 'ராலே கொள்கை' சரியான விளக்கமாக இருந்தது. ஓம் (Ohm) என்ற அலகினைத் தரப்படுத்தியவர்.

சான் வில்லியம் ஸ்ட்ரட்
சான் வில்லியம் ஸ்ட்ரட்
மூன்றாம் பாரன் ராலே
பிறப்பு(1842-11-12)12 நவம்பர் 1842
Langford Grove, Maldon, Essex, இங்கிலாந்து
இறப்பு30 சூன் 1919(1919-06-30) (அகவை 76)
Terling Place, Witham, Essex, இங்கிலாந்து
தேசியம்ஐக்கிய இராச்சியம்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்கேம்பிரிச் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிச் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்Edward John Routh
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஜெ. ஜெ. தாம்சன்
George Paget Thomson
ஜகதீஷ் சந்திர போஸ்
அறியப்படுவதுஆர்கான் கண்டுபிடிப்பு
Rayleigh waves
Rayleigh scattering
Rayleigh criterion
Duplex Theory
ஒலியியல்
Rayleigh flow
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1904) Copley Medal (1899)

இளமை

தொகு

சான் ஸ்ட்ரட் 1842ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாள் இங்கிலாந்தில் எசெக்சு என்ற ஊரில் உள்ள லாங்க்போர்டு குரோவ் என்ற இடத்தில் பிறந்தார். மூத்த மகனாகப் பிறந்த இவருடைய தந்தை இரண்டாவது பாரன் ராலே ஆவார். இவர் உழவரும் நிலக்கிழாரும் ஆவார். சான் ஸ்ட்ரட் இளம் வயதிலேயே கணிதத்தில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார். இவர் சிறுவனாயிருந்த போது இவரின் உடல் நலம் அடிக்கடி சீர்கேடு அடைந்தது. பத்து வயதான போது பள்ளியிலேயே அமைந்திருந்த உடல்நல வாழிடத்தில் இருந்துகொண்டே இவருடைய இளமைக் கல்வியைப் பெறவேண்டியிருந்தது. அதன்பின் மூன்று ஆண்டுகள் தனியார் பள்ளி ஒன்றில் சேர்ந்து தன்னுடைய கல்வியைத் தொடர்ந்தார். வார்னர் என்ற பாதிரியாரின் அரவணைப்பில் சில ஆண்டுகள் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

1861-ல் டிரினிட்டிக் கல்லூரியில் நேர்ந்தார். எட்வர்டு.ஜெ, ரூத் என்ற மிகச் சிறந்த ஆசிரியருடைய பயிற்சி இவருக்குக் கிடைத்தது. இவருடைய அறிவியல் ஆர்வத்திற்கும் அவருடைய பயிற்சி அடித்தளமாக அமைந்தது. ஸ்டோக்ஸ் என்ற லூகேசியன் கணிதப் பேராசிரியர் அக்கல்லூரியில் அவ்வப்போது சொற்பொழிவுகளை நிகழ்த்திவந்தார். சொற்பொழிவுகளின் இடையே அவர் சில ஆய்வுகளையும் செய்து காட்டி விளக்கியது ராலேவை மிகவும் கவர்ந்தது. அந்த காலத்தில் மணவர்கள் தனியே ஆய்வுகளைச் செய்து பார்க்க இயலாத சூழ்நிலையில் ஸ்டோக்சின் ஆய்வுக் காட்சிகள் இவரைக் கவர்ந்தன. பிற்காலத்தில் இவர் சிறந்த அறிவியலறிஞராக விளங்கிய போது, ஸ்டோக்ஸ் தன்னைக் கவர்ந்த விதத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

1864-இல் இவருக்கு வானியல் துறையின் உதவித்தொகை கிடைத்தது. 1865-இல் நடைபெற்ற டிரைபாள் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். அதன் மூலம் சுமித் பரிசையும் வென்றார். 1865-ல் மாக்ஸ்வெல் என்ற அறிவியலறிஞர் வெளியிட்ட மின்காந்தக் கொள்கை பற்றிய ஆய்வறிக்கையை ஆர்வமுடம் படித்தார். அது தொடர்பான முக்கியக் கருத்துக்களை இவர் தன்னுடைய ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். அது போலவே 1860-ல் ஹெல்ம் ஹோல்ட்ஸ் அவர்களால் எழுதப்பட்ட "ஒலி அனுநாத இயற்றி" (Acoustic resonator) பற்றிய ஆய்வுகளையும் தன்னுடைய ஆய்வில் பயன்படுத்திக்கொன்டார்.

1866-ல் கேம்பிரிட்ஜ் டிரினிடி கல்லூரியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாட். அதே காலத்தில் அமெரிக்கா நாட்டிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். தன்னுடைய வாழ்க்கைக்காக எந்தப் பணியிலும் ஈடுபட்டுப் பொருளீட்ட வேண்டிய தேவை இவருக்கு இல்லாமல் இருந்தது. அமெரிக்காவிலிருந்து திரும்பியது. தன்னுடைய அறிவியல் ஆய்வுகளுக்குத் தேவையான பல்வேறு கருவிகளை வாங்கி இவருடைய குடும்பப் பண்ணைத் தோட்டம் அமைந்துள்ள டெர்லிங்(டெர்லிங்) என்ற இடத்தில் தனக்கான ஆய்வுக் கூடம் ஒன்றை அமைத்துக் கொண்டார். கால்வனா மீட்டர் பற்றிய ஆய்வினை மேற்கொண்டார். 1868-ல் ஆங்கிலச் சங்கக் கூட்டம் ஒன்றில் அது பற்றிய தன்னுடைய முடிவுகளை அறிவித்தார்.

1871-ல் ஒளிச்சிதறல் பற்றிய ராலே கொள்கையை வெளியிட்டார். வானம் நீல நிறத்தில் காட்சியளிப்பதற்கான சரியான விளக்கமாக இவருடைய கொள்கை அமைந்தது. 1872-ல் கடுமையான காய்ச்சலால் தாக்கப்படார். அப்போது இவர் எகிப்திலும் கிரீசிலும் தன்னுடைய வாழ்க்கையைக் கழிக்க நேர்ந்தது. 1873-ல் சொந்த ஊருக்குத் திரும்பினார். அப்போது இவருடைய தந்தை காலமானார். எனவே 7600 ஏக்கருள்ள நிலங்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு இவர் தலைமேல் விழுந்தது. பொது அறிவியலில் இவர் பெற்ற கல்வி, பட்டறிவில் இவர் பெற்ற வேளாண்மை அறிவுக்குப் பல வகைகளில் தூண்டுதலாக அமைந்தது. இவர் "மூன்றாம் பாரன் ராலே" ஆனார். 1876-ல் இப்பொறுப்பைத் தன் தம்பியிடம் கொடுத்துவிட்டு விலகினார்.

1877-ல் அறிவியல் முறையில் ஆராய்ந்து இவரால் எழுதப்பட்ட 'ஒலிக் கொள்கை' (Theory of Sound) பற்றிய முதல் நூல் தொகுதி வெளியிடப்பட்டது. இதில் ஒலியை உருவாக்கும் அதிரும் ஊடகத்தின் எந்திரவியல் (Mechanics of vibrating medium) பற்றி விளக்கமாக எழுதியிருந்தார். அடுத்த ஆண்டில் இரண்டாம் தொகுதியாக ஒலி அலைகளின் இயக்கம் பற்றி எழுதி வெளியிட்டார்.

இவற்றையும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_வில்லியம்_ஸ்ட்ரட்&oldid=2993754" இலிருந்து மீள்விக்கப்பட்டது