சாரியை என்பது தமிழில் பெயர்ச்சொல்லையோ, வினைச்சொல்லையோ சார்ந்து வரும் இடைச்சொற்களே சாரியை எனப்படும். தனி எழுத்தினைக் குறிக்கவும் இது பயன்படுத்தப்படும். ஒரு சொல்லைப் பிரிக்கும்போது பொருளை உணர்த்தாமல் சார்ந்துவரும் இடைச்சொல்லையும் நன்னூல் சாரியை எனக் குறிப்பிடுகிறது. சார்பெழுத்து, சாரியை என்னும் சொற்கள் ‘சார்’ என்னும் வினைச்சொல்லிலிருந்து தோன்றியவை.

எழுத்துச் சாரியை

தொகு
எழுத்தின் சாரியைப் பற்றி தொல்காப்பிய நூற்பா (புணரியல் 135):
காரமுங் கரமுங் கானொடு சிவணி[1]
நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை
எழுத்துச் சாரியை என்றும் ஒருவகை உண்டு. அவை கரம், காரம், கான் ஆகிய மூன்று சொற்கள். இவ் எழுத்துச் சாரியைகள் எழுத்துக்களை எளிதாகக் கூறுவதற்காகப் பயன்படுத்துவன. குறில் எழுத்துக்களாகிய அ, க முதலியவற்றைக் குறிக்க அகரம், ககரம் என்று "கரம்" என்னும் சாரியை சேர்த்துச் சொல்ல உதவுகின்றது. நெடில் எழுத்துக்களாகிய ஆ, ஊ, கா ஆகிய சொற்களைக் குறிக்க ஆகாரம், ஊகாரம், காகாரம் என்று காரம் என்னும் சாரியை சேர்த்து வழங்குவர். இதே போல கான் என்னும் சாரியை , ஐ, ஔ என்னும் எழுத்துக்களைக் குறிக்க ஐகான், ஔகான் என்று பயன்படுத்துவர்.

பகுபதச் சாரியை

தொகு
செய்தனர் என்னும் சொல்லை செய்+த்+அன்+அர் எனப் பகுப்பர். இப் பகுப்பில்
செய் என்பது பகுதி, வினைச்சொல்
த் என்பது இறந்தகாலம் காட்டும் விகுதி
அன் என்பது சாரியை
அர் என்பது பலர்பால் வினைமுற்று விகுதி

புணர்ச்சிச் சாரியை

தொகு
சாரியை என்பது தமிழில் ஒரு சொல் தானே நின்று பொருள் தராமல் பிறசொற்களோடு சேர்ந்து வரும்பொழுது மட்டும் பொருள்தரும் ஒரு வகைச் சொல் ஆகும். தமிழில் சில சொற்களைச் சேர்த்துக் கூறும்பொழுது ஒலிப்பதற்குக் கொஞ்சம் எளிமையாக இருக்கும் பொருட்டு, இடையே இடப்படும் சொற்கள் சாரியை எனப்படும்.
எடுத்துக்காட்டுகள்:
மரம் என்னும் சொல்லொடு இரண்டாம் வேற்றுமையாகிய சேரும் பொழுது இடையே அத்து என்னும் ஒரு சொல் இட வேண்டும். இந்த அத்து என்னும் சொல் சாரியை எனப்படும். எனவே
மரம் + அத்து + ஐ = மரத்தை
படம் + அத்து + க்+ கு = படத்துக்கு.
இந்த அத்து என்னும் சாரியை ஒரு சொல்லின் இறுதியில் மகர ஒற்று இருந்தால், அதனுடன் சேரும் வேற்றுமை உருபுக்கு முன்பு வரும் சாரியை. பிற இடங்களில் வேறு சொற்கள் சாரியையாகப் பயன்படும்
பல + வற்று + ஐ = பலவற்றை (வற்று என்னும் சாரியையின் பயன்பாடு).

தொல்காப்பியர் குறிப்பிடும் சாரியைகள்

தொகு
தமிழில் பொதுவாக சாரியையாகப் பயன்படும் சொற்கள்:அக்கு, அத்து, அம், அன், ஆன், இக்கு, இன், ஒன் என்பனவும் பிறவும் ஆம். இவற்றைச் சொற்களுக்கு இடையே வரும் சொற்சாரியை என்பர். [2]

கண்ணோட்டம்

தொகு
உயிர்முன் உயிர் வந்து புணரும்போது இடையில் தோன்றும் உடம்படுமெய் எழுத்துக்களையும் புணர்ச்சியில் வரும் சாரியையாகவே கொள்ளவேண்டும்.

ஒன்றுக்கு மேலான சொற்கள் சாரியைகளாக வருதல்

தொகு
சில இடங்களில் தமிழில் ஒன்றுக்கு மேலான சொற்களும் சாரியையாக வரும்.
எடுத்துக்காட்டு:
மரம் + அத்து + இன் + உ +க்+ கு = மரத்தினுக்கு (கு என்பது நான்காம் வேற்றுமை உருபு).

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. சிவணி என்றால் சேர்ந்து, புணர்ந்து என்று பொருள்
  2. சாரியை பற்றி தொல்காப்பியம் புணரியல் நூற்பா 120:
    அவைதாம் இன்னே வற்றே அத்தே அம்மே
    ஒன்னே ஆனே அக்கே இக்கே
    அன்னென் கிளவி உளப்படப் பிறவும்
    அன்ன என்ப சாரியை மொழியே

வெளிப் பார்வை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரியை&oldid=3528318" இலிருந்து மீள்விக்கப்பட்டது