சார்வாகன் என்று இலக்கிய வட்டத்தில் அறியப்பட்ட மருத்துவர் ஹரி ஸ்ரீனிவாசன் (7 செப்டம்பர் 1929 - 21 திசம்பர் 2015 [1] ) ஒரு தொழுநோய் மருத்துவர் மற்றும் தமிழ் சிறுகதை எழுத்தாளர் ஆவார்.

வாழ்க்கை

தொகு

தமிழகத்தின் அன்றைய வடாற்காடு மாவட்டத்தின் வேலூரில் 1923ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை மருத்துவர் ஹரிஹரன், ஆரணியின் முதல் ஆங்கில மருத்துவர் ஆவார். ஆரணி நகரில் பள்ளியிறுதி வரை முடித்துவிட்ட ஹரி ஸ்ரீனிவாசன், சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். பிறகு, இங்கிலாந்தில் இரண்டு எஃப்ஆர்சிஎஸ் பட்டங்களை முடித்தார். 1954 ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகள் இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்தார். இலண்டனில் திருமணம் நடந்தது. எண்பதுகளில் மூன்று ஆண்டுகள் போர்ட்லண்ட் நகரில் இருந்தார்.

இந்தியாவில் மருத்துவப்பணிகள்

தொகு

இந்தியா திரும்பிய ஹரி சீனிவாசன் முதலில் முட நீக்கியல் வல்லுநராக தனது பணியைத் தொடங்கினார். 1960இல் மங்களூர் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றும்போது தொழுநோயில் இருந்து மீண்ட அப்துல்லா என்பவரின் கரங்களை ஒரு பிரத்யேக முறையில் முயன்ற சீரமைப்பு அறுவைச் சிகிச்சை வியக்கத்தக்க வெற்றியைக் கண்டது. தொழுநோயால் குணமடைந்த பின்னரும் மடங்கிய விரல்கள் நேராகாமல், உணர்ச்சி திரும்பாமல், செயலற்ற நிலையில் இருக்கும் விரல்களுக்கு இவர் கண்டுபிடித்த இந்த அறுவைச் சிகிச்சை முறை பலரது கைகள் செயங்பட உதவிகரமாக இருந்தது. இப்புதிய கர சீரமைப்பு அறுவைச் சிகிச்சை முறைக்கு ஐநா சபையின் அங்கமான உலக சுகாதார அமைப்பு ‘சீனிவாசன் முறை’ (SRINIVASAN TECHNIQUE) என்று இவரது பெயரையே சூட்டியது. இதற்காக இவருக்கு 1984 இல் இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனையில் பணியில் சேர்ந்து, அதன் இயக்குநராக உயர்ந்து 1984இல் இவர் பணி ஓய்வுபெற்றார். அதன் பிறகு, பல்வேறு நாடுகளின் மருத்துவக் கழகங்களிலும், உலக சுகாதார அமைப்பின் சார்பாக வருகைதரு பேராசிரியராகவும், எண்ணற்ற மருத்துவ முகாம்களை நெறிப்படுத்துபவராகவும் பணியாற்றினார்.[2]

இலக்கிய ஆர்வம்

தொகு

இவரது தாத்தா கிருஷ்ணய்யர் வேலூரில் காவல்துறையில் தமிழ் சுருக்கெழுத்தராக இருந்தார். அவர் பெரியதொரு நூலகத்தை வைத்திருந்தார்.அந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை சிறிய வயதில் படித்து தனது படிப்பு ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். எழுத்தில் ஆர்வம் கொண்ட இவர் கவிதைகளையும் சிறுகதைகளையும் சிற்றிதழ்களில் எழுதியுள்ளார். இவரின் கனவுக்கதை’ என்னும் சிறுகதை 1971-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்றது. இவருடைய சிறுகதைகள் சில, ஆங்கில மொழிபெயர்ப்பாகி வெளியாகியிருக்கின்றன.[3] இவர் எழுத்துக்கள் தொகுப்பாக 41 சிறுகதைகள் மற்றும் 3 குறுநாவல்கள் என 500 பக்கங்களுடன் சார்வாகன் கதைகள் என்ற பெயரில் புத்தகமாக நற்றிணை பதிப்பகத்தால் வெளியீடப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "அஞ்சலி: சார்வாகன் - எதற்காக எழுத வேண்டும், யார் படிக்கிறார்கள்?". பார்க்கப்பட்ட நாள் 28 திசம்பர் 2015.
  2. ஜி.குப்புசாமி (20 திசம்பர் 2018). "ஹரி சீனிவாசன்: பெருநோய்த் தடமழித்த பெருந்தகை". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 21 திசம்பர் 2018.
  3. "உத்தியோக ரேகை – சார்வாகன்". பார்க்கப்பட்ட நாள் 28 திசம்பர் 2015.
  4. "சார்வாகன்". பார்க்கப்பட்ட நாள் 28 திசம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்வாகன்&oldid=3577177" இலிருந்து மீள்விக்கப்பட்டது