சாலப்பரிந்து
சாலப்பரிந்து என்னும் நூல், தமிழ் எழுத்தாளரான நாஞ்சில் நாடன் எழுதிய சிறுகதைகளில் தேர்தெடுத்த 25 சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். இந்நூல் காலச்சுவடு பதிப்பகத்தின் செம்பதிப்பு வரிசையில் வெளியானது. 25 சிறுகதைகளை தேர்ந்தெடுத்து தொகுத்தவர் க. மோகனரங்கன்.
சாலப்பரிந்து | |
---|---|
நூல் பெயர்: | சாலப்பரிந்து |
ஆசிரியர்(கள்): | நாஞ்சில் நாடன் |
வகை: | சிறுகதைத் தொகுப்பு |
காலம்: | 2012 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 239 |
பதிப்பகர்: | காலச்சுவடு |
தொகுப்பிலுள்ள சிறுகதைகள்
தொகு- விரதம்
- உப்பு
- ஐந்தில் நான்கு
- இடலாக்குடி ராசா
- ஆங்காரம்
- விலாங்கு
- கிழிசல்
- தேடல்
- துறவு
- ஒரு முற்பகல் காட்சி
- பாலம்
- பேய்க்கொட்டு
- வாலி சுக்ரீவன் அங்கதன் வதைப்படலம்
- சாலப்பரிந்து...
- பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படித்தவர்
- வளைகள் எலிகளுக்கானவை
- யாம் உண்போம்
- பரிசில் வாழ்க்கை
- சூடிய பூ சூடற்க !
- செம்பொருள் அங்கதம்
- எண்ணப்படும்
- பார்வதி சன்மான்
- பேச்சியம்மை
- கான்சாகிப்
- வங்கணத்தின் நன்று வலிய பகை
நூலிலிருந்து
தொகுகால் துண்டு ரொட்டியும் கொஞ்சம் சப்ஜியும் இலையில் மீதம் இருந்தன. ஒரு துண்டு ரொட்டியை சப்ஜியுடன் விரல்கள் கவ்விப் பிடித்திருந்தன. வாய்க்குக் கொண்டுபோகும் நேரம். பாபுராவின் உயர்த்திய கையை, முதிய, தோல் சுருங்கிய நாற்றேயின் கை எட்டிப்பிடித்து வெடவெடத்தது. குலைந்து ஒலித்த குரலால் அதிர்வுற்று பாபுராவ் நிமிர்ந்து பார்த்தான்
'அமி காணார்... அமி காணார்'
'எனக்குத் தா' என்றல்ல. 'நான் தின்பேன்' என்ரல்ல, நாம் உண்போம் என. தூய சங்கத் தமிழில் பெயர்த்தால் 'யாம் உண்போம்' என.
கண்கள் பெருகிக் கிளைத்துத் தழைத்த பசியின் மொழி பாபுராவைத் திடுக்கிடச் செய்தது. மறுபடி மறுபடி சோர்ந்து தொய்ந்த குரல். யாசகத்தின் இரங்கிய குரல் அது. பசியின் பாய்ச்சலை உணர்த்திய குரல்.
தொகுப்பாளர் குறிப்பு
தொகு“ | நாஞ்சில் நாடன் கதை என்பது கண்ணால் கண்ட காட்சியையோ காதால் கேட்ட செய்தியையோ மனதால் விவரித்துக்கொண்ட கற்பனையையோ மாத்திரம் நம்பி எழுதப்பட்ட புனைவு அல்ல. மாறாக அவருடைய கதைகளின் சாராம்சத்தில் உள்ளுறைந்திருப்பது தொன்மையான ஒரு நிலமும், அதன் மொழியும் அவற்றின் தொகை விரிவான பண்பாட்டுச் செழுமையும் ஆகும். பின்னைப் புதுமையைத் தாவிப் பற்றும் நாட்டத்தால் உயிர்ப்பான மரபினின்றும் தன் வேர்களைத் துண்டித்துக்கொண்டு விடாத தன்மையால், காருண்யத்தை நீதியுணர்வை விழுமியங்களை வலியுறுத்தும் வகைமையால் தனித்து நிற்பவை இவரது கதைகள். நாஞ்சிலின் எழுத்து நாற்பது வருடத்திற்கும் மேலான எழுத்து. வாழ்வின் தடத்தைப் பிரதிநிதிப்படுத்தும் இத்தொகுப்பில் அவருடைய ஆகச்சிறந்த கதைகள் இடம் பெற்றுள்ளன. | ” |
என தொகுப்பாசிரியர் க. மோகனரங்கன் குறிப்பிடுகிறார்.
விமர்சனம்
தொகுதமிழ், ஆங்கில மொழிகளில் எழுத்தாளரான பி.ஏ. கிருஷ்ணனின் இந்நூலுக்கான விமர்சனம்.
“ | நாஞ்சில் நாடனின் சிறுகதைகள் அக உலகைத் தேடும் முயற்சியில் இறங்காதவை. மனிதருக்கும் - குறிப்பாக ஆணுக்கும் - அவனைச் சூழ்ந்திருக்கும் உலகத்திற்கும் இடையே தொடந்து இடைவேளையே இல்லாமல் நடைபெறும் மோதல்களையும் , உராய்வுகளையும், கொஞ்சல்களையும், சிணுங்கள்களையும் எல்லாவற்றிற்கும் மேலாக முயக்கங்களையும் நேரடியாக, பாசாங்குகள் இன்றி சித்தரிப்பவை. அசாதாரணமானவை. எப்படி இவரால் முடிந்தது என நம்மை வியக்க வைப்பவை. அனேகமாக எல்லாச் சிறுகதைகளிலும் மானுடம் வெல்கிறது. வெற்றியை நமக்குத் திகட்டாமல் செய்ய முடிந்ததே நாஞ்சில் நாடனின் வெற்றி. | ” |