சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி

(சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி (Chavakachcheri Drieberg College) என்பது இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவின் தலைநகரமான சாவகச்சேரியில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும். தென்மராட்சியில் நிறுவப்பட்ட முதல் கல்லூரி இதுவே. இது ஆண், பெண் இரு பாலாரும் கல்வி பயிலும் கலவன் பாடசாலையாகும்.

டிறிபேக் கல்லூரி
Drieberg College
அமைவிடம்
கண்டி வீதி, சாவகச்சேரி
வட மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°39′36″N 80°9′3.599″E / 9.66000°N 80.15099972°E / 9.66000; 80.15099972
தகவல்
Funding type1AB
குறிக்கோள்வாழ்வின் ஒளி
(Lamp of Life)
நிறுவல்ஏப்ரல் 8, 1875
நிறுவனர்ஜேம்ஸ் ஸ்டுவர்ட் டிறிபேக்
பள்ளி மாவட்டம்தென்மராட்சி கல்வி வலயம்
ஆணையம்கல்வி அமைச்சு
பள்ளி இலக்கம்0212270737 / 0212270738
பள்ளிக் குறியீடு1003001
அதிபர்செ.பேரின்பநாதன்
ஆசிரியர் குழு53
பணியாளர்கள்60
தரங்கள்1 முதல் 13
கல்வி ஆண்டுகள்149
பால்கலவன்
மாணவர்கள்600 -700
மொழிதமிழ், ஆங்கிலம்
பரப்பு3 ஏக்கர்[1]
கீதம்ஞானமே உருவாம் டிறிபேக் கல்லூரியை நாடியே நாம் துதிப்போமே..

வரலாறு

தொகு

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கிறித்தவ மதத்தைப் பரப்புவதற்காக இலங்கை வந்த அமெரிக்க மிசனைச் சேர்ந்தவர்கள் 1875 ஆம் ஆண்டு 04 (ஏப்பிரல்) மாதம் 08ஆம் திகதி "டிறிபேக் ஆங்கிலக் கல்லூரி " என்ற பெயரில் இப்பாடசாலையை நிறுவினர்.[1][2] அக்காலத்தில், தென்மராட்சி நீதிமன்றத்தில் பொலிஸ் நீதவானாகப் பணியாற்றிய ஜேம்ஸ் ஸ்டுவர்ட் டிறிபேக் என்பவர் இதற்குத் தேவையான நிதியின் பெரும் பகுதியை வழங்கினார். [சான்று தேவை]இதன் காரணமாகவே இப்பாடசாலைக்கு அவருடைய பெயர் இடப்பட்டது. இவருடைய பெயர் பாடசாலைக்கும் மட்டும் இன்றி ஒரு இல்லத்திற்கும் வழங்கப்பட்டது. இவரின் பின் வண டி. பி. ஹண்ட் அவர்களுடைய உற்சாகமும் அர்ப்பணிப்புமே இக் கல்விப்பணி நிலை பெற துணை புரிந்தன.[2] 77 மாணவர்களுடனும் 2 ஆசிரியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையின் முதலாவது தலைமையாசிரியராக ஆர். எஸ். முத்தையா என்பவர் பணியாற்றினார.[2]

இப்பாடசாலையின் வளர்ச்சியில் அடுத்த கட்டம் 1913 ஆம் ஆண்டு ஆரம்பமாயிற்று. [எவ்வாறு?] அப்பொழுது இக் கல்லூரியின் நிர்வாகத்தை வண. ஜே. கே. சின்னத்தம்பி பெறுப்பேற்றார். இப்போதும் சின்னத்தம்பி இல்லம் என்ற ஓர் இல்லம் பாடசாலையில் காணப்படுகிறது. இவருடைய முயற்சியினால் கல்லூரி வளர்ச்சியுற்று 1915 ஆம் ஆண்டில் ஆங்கிலப் பாடசாலை தரத்தில் Senior School Leaving Certificate - (S.S.L.C ) சான்றிதழ் வழங்கும் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. வண. சின்னத்தம்பி அவர்களும் நீதவான் டிறிபேர்க் குடும்பத்தினரும் இணைந்து நிதியைத் திரட்டி பல்வேறு கட்டடங்களை உருவாக்கினர்.[சான்று தேவை]

1920 ஆம் ஆண்டில் 300 மாணவர்களுடன் இப்பாடசாலை இயங்கியது. இவர்களில் 30 பேர் பெண்கள் ஆவர். 1923 இல் இப்பாடசாலை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் நேரடி நிருவாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1931 இல் இது கல்லூரி மட்டத்துக்கு தரமுயர்த்தப்பட்டது.[2]

யாழ்ப்பாணக் கல்லூரியுடன் இணைப்பினை பெற்றுக்கொண்ட பின்னர், யாழ்ப்பாண கல்லூரியில் அதிபராகவிருந்த பேரறிஞர் ஜோன் பிக்னல் இப்பாடசாலை வளருவதற்கு பலவழிகளிலும் உந்து சக்தியாக விளங்கினார். [சான்று தேவை] இக் கால கட்டத்தில் டிறிபேர்க் கல்லூரியின் அதிபராக விளங்கியவர் ஈ. எஸ். ஏபிரகாம். இவர் 1931 ஆம் ஆண்டு மறைந்தார். இவருடைய பெயரில் ஒரு இல்லம் இயங்கிவருகிறது. இவரைத் தொடர்ந்து கே. எஸ். சரவணமுத்து டிறிபேர்க் கல்லூரிக்கு அதிபரானார். தென்மராட்சியில் ஆங்கிலக் கல்வியின் தேவை அதிகமாக உணரப்பட்டது. 1940 இல் யாழ்ப்பாணக் கல்லூரி இயக்குநர் சபையிடம் இருந்து எஸ்.எஸ்.சி வகுப்புக்களையும், இலண்டன் மெட்ரிக்குலேசன் வகுப்புக்களையும் நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டது. பெருந்தொகையான மாணவர்கள் ஆங்கிலக் கல்வி பெற்று அரசாங்கத்திலே சிறந்த உத்தியோகங்களைப் பெற்றனர். [சான்று தேவை]லண்டன் மற்றிக்குலேசன் பரீட்சைக்கு முதன்முதலாக 1941ஆம் ஆண்டு மாணவர்கள் தேற்றினர். அப்பொழுது கல்வித்துறையில் மேதைகளாக விளங்கிய யாழ்ப்பாண கல்லூரியின் துணை அதிபர் ஜே.வி.செல்லையா, உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் எல்.ஜி.புக்வோல்ட்டர் (L.G.Bookwalter) ஆகியோர் இக் கல்லூரியின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவி செய்திருந்தனர். 1941 ஆம் ஆண்டு நீதவான் டிறிபேர்க்கினுடைய மருமகள் அலன் டிறிபேர்க் இப்பாடசாலையில் தமது மாமனாரின் நினைவாக ஒரு நிலையமும் வாசிப்புக் கூடமும் அமைப்பதற்கு நன்கொடை ரூ.2000/= வழங்கினார்.[சான்று தேவை]

1950ஆம் ஆண்டு இந்த வளாகத்தில் இயங்கிய ஆரம்ப தமிழ்ப் பள்ளியும் டிறிபேர்க் ஆங்கில பாடசாலையும் ஒன்றாக இணைந்தன. இப் பாடசாலையில் முன்னர் இருந்த ஒல்லாந்த தேவாலயம் இடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அதனுடைய கற்கள் புதிதாக அமைக்கப்பட்ட நவமணி படமாளிகையை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டன. 1950 இல் கல்லூரி மண்டபம் திருத்தி அமைக்கப்பட்டது.

1875 இல் இருந்து அமெரிக்க மிசனால் நிர்வாகம் செய்யப்பட்டுவந்த இப்பாடசாலை 1962 இல் இலங்கைப் பாடசாலைகள் நாட்டுடைமை ஆனபோது இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1975 இல் இப்பாடசாலை தனது நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடியது.

சாவகச்சேரி நகரின் மையப் பகுதியில் அமைந்திருந்த காரணத்தால், இப்பாடசாலை ஈழப்போர்க் காலப்பகுதியில் இராணுவத்தினரின் எறிகணை வீச்சுக்கும், விமானத் தாக்குதல்களுக்கும் உள்ளானது. இதன் பல கட்டடங்கள் சேதமடைந்தன. 1995 ஆம் ஆண்டில் இடம்பெற்ற யாழ்ப்பாண இடம்பெயர்வின் போது, இப்பாடசாலை அகதி முகாமாக இயங்கியது. 2000களின் ஆரம்ப காலத்தில் ஈழப்போரின் உச்சக்கட்டத்தில் இப்பாடசாலை முற்றாக சேதமடைந்த நிலையில்,[1] கைவிடப்பட்டு, சில ஆண்டுகள் கோண்டாவிலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தற்காலிகமாக இயங்கி வந்தது. ஏப்ரல் 2002 இல் மீண்டும் சாவகச்சேரியில் இருந்து இயங்கி வருகிறது.

அதிபர்கள்

தொகு
  • ஜேம்ஸ் ஸ்டுவர்ட் டிறிபேக்
  • தாமஸ் பீட்டர் ஹன்ட்
  • வண. சின்னத்தம்பி
  • ஈ. எஸ். ஏபிரகாம்
  • கே. எஸ். சரவணமுத்து
  • ஏ. கே. சபாபதிப்பிள்ளை
  • N. சபாநாயகம்
  • கே. பாலச்சந்திரன்
  • சிவபாதசுந்தரம்
  • எம். நாகேந்திரராசா
  • கே. அருந்தவபாலன்
  • ந. ஜெயக்குமாரன்
  • செ.பேரின்பநாதன்

இங்கு படித்தவர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Postconflict School rehabilitation, Drieberg College Chavakachcheri, Thenmaradchi, Jaffna District - Humanitarian Aid construction group". www.shacc.ch. பார்க்கப்பட்ட நாள் 16 August 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 2.2 2.3 "Drieberg College Chavakachcheri has produced outstanding personalities". சண்டே டைம்ஸ். 11 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 17 August 2017.[தொடர்பிழந்த இணைப்பு]