சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயம்

சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயம் என்னும் கோயில் இலங்கையின், தென்மராட்சிப் பகுதியில் வரணி என்னுமிடத்தில் உள்ளது.[1][2][3]

ஆலய நுழைவாயில்
சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயம்
நாடுஇலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலகம்சாவகச்சேரி


வரலாறு

தொகு

வரணிப் பகுதியில் மிகவும் புராதனம் மிக்க தலமாக இந்தக் கோயில் விளங்குகின்றது. பனை மரம் தோன்றிய காலத்திலேயே தோன்றி விட்டதாக அருளாளர்கள் குறிப்பிடுகின்றனர். சித்தர்கள் வேதித்த இடமாதலால் சிட்டிவேரம் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இப்பெயர் பிற்காலத்தில் மருவி சுட்டிபுரம் என அழைக்கப்படுகின்றது. பசுக்கள் நிறைந்து நின்று பால் பொழிவதால் இப்பெயர் பெற்றது போலவும் இது அம்பாளின் திருவருளோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் "புரம்" என்ற முடிபைக் கொண்டமையும் இடங்களெல்லாம் பிரசித்தி பெற்ற இடங்களாக விளங்குவதனை அவதானிக்கலாம். உதாரணமாக இந்தியாவிலே காஞ்சிபுரம், சமயபுரம், திருவனந்தபுரம், தோணிபுரம் (சீர்காழி) என்றவாறு இருப்பதையும் இலங்கையிலே சந்திரபுரம் (மட்டுவில்), அநுராதபுரம், புலஸ்திபுரம் (பொலன்னறுவை) துர்க்காபுரம் (தெல்லிப்பழை) என்றவாறு விளங்குவதனை சான்றாக கூறலாம். பழைய தாேம்புகளை ஆராய்ந்த பாேது ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் "எய்ப்பன்றிக்காடு" என்று இருப்பதனையும் காண முடிகின்றது. இன்று சுட்டிபுரம் என்ற பெயரே பிரசித்தி பெற்றுள்ளது.

சுவாமி ஞானப்பிரகாசர் கருத்துப்படி சிட்டி வேரம் என்பதிலுள்ள வேரம் என்பது சிங்களப் பெயரடி எனவும், அது வணக்கஸ்தலத்தைக் குறிக்கும் எனவும் குறிப்பிடுகிறார். ஆகவே சிங்கள மன்னர் ஆட்சிக் காலத்தில் இவ்வாலயம் அமைந்திருக்க வேண்டும் என்பது அவர் கருத்து.

தமிழ் அகராதியின் படி சிட்டி+வேரம் எனப் பிரித்து நோக்கும் போது சிட்டியென்பது ஒழுங்கு, கட்டளை, தூதுகாவற்றுச் செம்பு, படைப்பு என்ற பொருளைத் தருகிறது. வேரம் என்பது சரீரம், சலஞ்சாதித்தல், சோம்பு, மஞ்சள், முகில் என்பவற்றைக் குறிக்கின்றது. இவற்றைக் கண்டு ஆலய மூலஸ்தானத்தினிலே இருக்கும் நிலையில் தூதுகாவற்றுச் செப்புச் சரீரம் கொண்ட கண்ணகை உறையும் இடம் என்ற அடிப்படையின் பெயரில் இப்பெயர் இடம்பெற்றிருக்கலாம் என கருத முடியும்.

இவ்வாலயமானது சிவபூமி என அழைக்கப்படும் ஈழவள நாட்டிலே சைவமும் தமிழும் மேலோங்கி விளங்கும் தென்மராட்சிப் பதியிலே கிழக்காக கொடிகாமச் சந்தியிலிருந்து பருத்தித்துறை செல்கின்ற வீதியில் மூன்றுமைல் தூரத்திலே வரணி எனும் பழமை பேணுகின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வீதிக்கு மேற்காக சோலைகள் சூழ்ந்த இடத்திலே அமைந்துள்ளது. வரணிப் பகுதி முழுவதற்கும் பொதுவான பெரிய சக்தி ஆலயமாக விளங்குகின்றது. மூர்த்தி தீர்த்தம் தலம் என்பவை ஒருங்கே அமையப் பெற்ற சிறப்பைப் பெறுகின்றது.

·        மூர்த்தி – சிட்டிவேரம் கண்ணகை அம்பாள் என்பதாகும்.

·        தலம் - வரணி, சிட்டிவேரம் (சுட்டிபுரம்) என்பதாகும்.

·        தீர்த்தம் - தும்புருவில்

·        தலவிருட்சம் - பாலை என்பதாகும்.

 
புராதன ஐம்பொன் விக்கிரகம்
 
புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கருங்கல் விக்கிரகம்


தீர்த்தம்

தொகு
 
தும்புருவில் தீர்த்தக்கரை

இவ் ஆலயத்தின் தீர்த்தமானது மேற்காக எல்லாப் பக்கமும் வயல் சூழப்பட்டு தும்புருவில் பிள்ளையார் கோவிலிற்கு அண்மையிலுள்ள திருக்குளமாகும். முன்பு ஒரு காலத்தில் தும்புரு என்ற முனிவர் இக்குளத்தில் நீராடி அம்பாளைப் பூசித்ததாகக் கூறப்படுகிறது. இக்குளத்தில் மேலும் சித்தர்களும் யோகிகளும் நீராடி அம்பாளைப் பூசித்ததாகக் கூறப்படுகின்றது. அவர்களிற்கு இப்போதும் திருவிழா நடைபெற்று பைரவர் சாந்தி நடைபெறும் போது ஏழு படையல்கள் பாரம்பரிய முறைப்படி செய்யப்படுகின்றன. இக்குளத்தில் வெண்தாமரை, செந்தாமரை, நீலோற்பலம், செங்கழுநீர் போன்றவைகளும் மேலும் பல மூலிகை அம்சங்களும் உள்ளன. இத்தீர்த்தத்திற்கு அருகாமையில் வடக்காகப் பிள்ளையார் கோவில் உள்ளது. இதன் தலவிருட்சம் அரசாகும். அத்துடன் மருத மரங்களும் சூழவுள்ளன. இப்பிள்ளையார் மேற்கு நோக்கி அமைந்துள்ளார். செல்லப்பா கந்தையா அவர்கள் பல இலட்சம் ரூபா செலவு செய்து கிழக்கு நோக்கி ஆலயம் அமைக்க அடித்தளமிட்டார். ஆனால் பிள்ளையார் அதனை விரும்பாது தடுத்து விட்டார். எனவே மீண்டும் மேற்கு நோக்கி புதிய ஆலயம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகமும் செய்யப்பட்டுள்ளது.

கண்ணகை வழிபாடு

தொகு
 
ஆலய மூல விக்கிரக இருப்பிடம்

ஈழத்திலே கண்ணகை வழிபாட்டிற்குத் தனித்துவமான இடமுண்டு. இவ்வழிபாடு தாய் நாடாகிய தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அந்த வகையிலே கண்ணகி பாண்டி நாட்டிலே மன்னிடம் நீதி கேட்டு சிலம்பை உடைத்து உண்மையை நிலைநாட்டி மதுரையை எரித்தார். நல்லவர் தப்பினர் தீயவர் தீயுள் மாய்ந்தனர். இவ்வேளையில் கண்ணகி கடும் சீற்றம் கொண்டிருந்தார். அது தணிவதற்காக கடல் கடந்து ஈழம் வந்ததாகக் கூறப்படுகின்றது. அவ்வாறு வந்த கண்ணகைத்தாய் பத்து இடங்களிலே விசேடமாக தரித்திருந்ததாகக் கொள்ளப்படுகின்றத. அவற்றிலே முதலாவதாக மாதகல் பாணாக வெட்டி என்ற இடத்திலும் இரண்டாவதாக கந்தரோடைக்கு அண்மையில் அங்கணமைக்கடவை என்ற இடத்திலும் அமர்ந்ததாகக் கருதப்படுகின்றது.

அக்காலத்தில் தென்மராட்சியில் விசேடமாக மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயம் (3ம் இடம்), இலஞ்சியாரணியம்பதி கண்ணகை அம்மன் கோவில் (சோலையம்மன் (4வது இடம்), வரணி சிட்டிவேரம் கண்ணகை (5வது இடம்), கச்சாய் கண்ணகை (6வது இடம்), மிருசுவில் கொட்டிகை கண்ணகை (7வது இடம்) என்றவாறு இருந்து பத்தாவதாக முல்லைத்தீவு வற்றாப்பளை என அழைக்கப்படுகின்றது. (பத்தாம்பளை என்பது மருவி இவ்வாறு கூறப்படுகின்றது) இவ்வாறு இருந்த பின்பு தாயார் சேரநாடு சென்று கைலாய கிரியை அடைந்ததாகக் கொள்ளப்படுகின்றது. கண்ணகை உறைந்த பத்து இடங்களிலும் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் எழுச்சியடைந்துள்ளன. இவை பற்றிய விபரங்கள் 10 செப்பேடுகளில் இருந்ததாகவும் அவை வேற்று மதத்தவரினால் அழிக்கப்பட்டதாகவும் ஆதாரங்கள் கூறுகின்றன.

ஈழத்தில் கண்ணகைத்தாய் உறைந்த பத்து இடங்களை உற்று நோக்கினால் சோலைகளும், பொய்கைகளும், தாமரைக் குளங்களும், வயல் நிலங்களும் சூழ்ந்த எழில் கொஞ்சும் இடங்களாக விளங்குவதை அவதானிக்க முடிகிறது. அவை கண்ணகைத்தாயின் அகோரத்தை தணிப்பதாக அமைந்தன. தன்னைக் குளிர்ச்சிப்படுத்தியதால் இந்த இடங்களிலே எவ்வகையான விளைச்சல்களும் நிறையக் கிடைத்தது. வளம் பெருகிய இடங்களாக விளங்கி வருவதைக் காண்கிறோம். இவ்வாறான இடங்களில் உறைந்ததாய் ஒருகையில் தாமரை மலரும் மறுகரத்தில் நெற்கதிர்களையும் தாங்கியவாறு காட்சியளித்ததாகக் கூறப்படுகின்றது. இக்காட்சி கண்ணகைத்தாய் எமக்குத் தேவையான எல்லா வளங்களையும் போகங்களையும் தருகிறார் என்பதை தத்துவார்த்தமாகக் குறித்து நிற்கிறது என்பர்.

மேற்படி அம்சத்தியை சிட்டிவேரம் மூலமூர்த்தியில் காணலாம். தாய் உறைந்துள்ளது 5வது இடமாகையால் திருவைந்தெழுத்து வடிவாகிய நாயகியாகக் கொள்ளப்படுகின்றார். மூலமூர்த்தியை நோக்கும் போது வலது பாதத்தை மடித்து இடது பாதத்தினை தொங்க விட்ட மூர்த்தியாக சுகாசன நிலையில் விளங்குகின்றார். வலது கரத்தில் தாமரை மலரும் இடது கரத்தில் வரதமுத்திரையையும் கொண்டு விளங்குகின்றார். எனவே போகமூர்த்தி அம்சத்தில் இருப்பதைக் காணலாம். இவ்விக்கிரகம் சோழர் காலத்திற்குரியது என்பது பேராசிரியர் செ.கிருஷ்ணராசா, பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் ஆகியோரது கருத்தாகும். எனவே தான் திருவிழாவை மிகவும் பொருள், நிதி செலவு செய்து பிரமாண்டமாகச் செய்யும் போது அதனைவிடப் பன்மடங்கு செல்வத்தை அவர் வாரி வழங்குவதைக் காலம் காலமாகக் காண்கின்றோம்.

இவ்வாறு கண்ணகைத்தாய் உறைந்து அருளாட்சி செய்த இடங்களிற்கு இன்னொரு வகையிலும் சிறப்பு ஏற்பட்டதனைக் அவதானிக்க முடிகின்றது. அதாவது தமிழ் நாட்டிலே சேரன் செங்குட்டுவன் கண்ணகைக்கு விழா எடுத்தான். அதற்காக எல்லா தேசத்தவரும் அழைக்கப்பட்டனர். அந்தவேளை இலங்கையிலிருந்து முதலாம் கஜபாகு மன்னனும் சென்றிருந்தான். அவன் விழா முடிந்து இலங்கை திரும்பிய போது கண்ணகையின் சிலையையும் சிலம்பையும் எடுத்து வந்து கண்ணகை உறைந்த 10 இடங்களிலே வைத்து வழிபாடு செய்து பின்பு தனது தலைநகருக்கு கொண்டு சென்று சிங்கள மக்கள் மத்தியில் பத்தினி வழிபாட்டினை அறிமுகப்படுத்தினான். இன்றும் சிங்கள மக்கள் மிகவும் பயபக்தியுடன் கண்ணகை வழிபாட்டினை செய்து வருகின்றனர்.

சிட்டிவேரத்தில் முதலாம் கஜபாகு மன்னன் விசேட வழிபாடுகளைச் செய்திருக்கின்றான். வரணிப் பகுதியில் வரலாற்றாய்வாளர் சி.கா.கமலநாதன் அவர்களால் செய்யப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் போது ஜம்புகோளப்பட்டினத்திலிருந்து அநுராதபுரத்திற்கு ஒரு வீதி சென்றது அறியப்படுகின்றது. அது சிட்டிவேரம் அம்பாளிற்கு வடக்காக வரணிப் பகுதியூடாக சென்றமை அறியப்படுகின்றது. இதன் அகலம் 33அடியாக இருந்துள்ளது. இது ராஜவீதி என்று அழைக்கப்பட்டதை தோம்புகள் ஊடாக அறிய முடிகிறது. இதுவே பழைய கண்டிவீதி என்றும் கூறுவர். இந்த வகையிலும் சிட்டிவேரம் வரலாற்று பழமை மிக்கதாகக் கொள்ளப்படுகின்றது.

ஆலய அமைவிடம்

தொகு
 
ஆலய அமைவிடம்

தற்போது இருக்கும் ஆலயத்திற்கு ஈசான மூலையண்டியதாக (வடகிழக்கே) வரணி மகாவித்தியாலயத்திற்குக் கிழக்காக சின்னம் ஆலயம் என அழைக்கப்படும் ஓரிடம் உண்டு. அந்த இடத்தில் செய்யப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் போது ஒரு அடி அகலமும் ஒன்றரையடி நீளமும் கொண்ட ஏராளமான செங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த சின்னம்மன் ஆலயச் சூழலிலே தான் சுட்டிபுரம் அம்பாளைப் பரம்பரையாக பூசித்து வந்த முன்னைய ஞானிய பரம்பரையினர் இருந்ததையும் அறிய முடிகின்றது. முன்பு மூலஸ்தானத்தில் இருந்த அம்பாள் விக்கரகம் (ஐம்பொன் விக்கிரகம்) ஞானியர் பரம்பரையினரால் சின்னம்மன் ஆலயப் பகுதியில் வைத்துப் பூசிக்கப்பட்டு வந்ததாகவும் ஒவ்வொரு திங்கட் கிழமைகளிலும் வில்லு வண்டிலில் கொண்டு வந்து தற்போது கோயில் இருக்கும் சோலைக்குள் வைத்து வழிபாடுகள் செய்து விட்டு பின்பு சின்னம்மன் ஆலயத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்திருந்ததாகவும் அம்மரபினர் கூறுகின்றனர். காலஞ்செல்ல தற்போது தற்போது கோயில் உள்ள சோலைப் பகுதியிலேயே செங்கல், சுதை, சுண்ணாம்பு என்பவற்றைக் கொண்டு ஒரு கோயிலை அமைத்து நிரந்தரமாக அம்பாளின் விக்கிரகத்தை அங்கே வைத்து வழிபாடுகள் செய்து வரப்பட்டதாகவும் கூறுகின்றனர். அந்தப் பழைய கட்டடத்தின் எச்சங்கள் தற்போதும் உள்ளதைக் காணலாம்.

பொங்கல் வழிபாட்டு முறைகள்

தொகு

சிட்டிவேரம் கண்ணகை அம்பாள் ஆலயத்தில் அலங்கார உற்சவமே நடைபெற்று வருகின்றது.இது வைகாசிமாத விசாகப் பொங்கலுடன் ஆரம்பமாகின்றது. வற்றாப்பளை விசாகப் பொங்கலுடன் ஆரம்பமாகின்றது.வற்றாப்பளை அம்பாள் ஆலயத்தில் பொங்கல் நடைபெறும் அதேவேளை இங்கும் பொங்கல் நடைபெறுகின்றது.இந்தப் பொங்கலானது ஆகம முறைசாராத வகையில் பாரம்பரிய சடங்குகளுடன் பின்னிப் பிணைந்து பக்தி சிரத்தையுடன் செய்யப்பட்டு வருகின்றது. பொங்கலிற்கு முன்பாக 15 நாட்களிற்கு முன் ஊர் பொது அபிஷேகம் ஒன்று செய்யப்படும். இந்த ஊர் அபிஷேகம் நடைபெறுவதற்கு முதலில் இவ் ஆலயத்துடன் தொடர்புடைய வீரபத்திரர் கோயிலுக்கு மடை போடப்பட்டு வழிவெட்டி பரிகலங்கள் விடப்படும்.அங்கிருந்து தேவதைகள் அம்பாளின் ஆலயத்திற்கு வருவதாக நம்பப்படுகின்றது.இந்த ஊர் அபிஷேகம் நடைபெறுகின்ற போது அன்னதானம் நடைபெறுவதில்லை. முன்னோர்களின் கருத்துப்படி திருவிழாவிற்கு முன்பாக தேவதைகளை அகற்றுவதற்கு வசதியாகவே ஊர் அபிஷேகம் செய்யப்படுகின்றது.

பொங்கலிற்கு முன்பாக பண்டமெடுக்கும் நிகழ்வு நடைபெறும்.அம்பாள் ஆலயத்திற்குத் தெற்காக எருவன் பகுதியில் அமைந்துள்ள கொட்டிக்கான் முருகன் ஆலயத்திலிருந்தே பண்டம் எடுத்தல் நடைபெறும்.மேற்படி முருகன் ஆலயத்தின் வாசலில் நிற்கின்ற வேப்பமரத்தின் கீழே வைத்துப் பண்டம் எடுக்கப்படும்.முன்னைய காலங்களிலே ஏழிற்கு மேற்பட்ட வண்டில்களில் சந்தையிலிருந்து பண்டப் பொருட்கள் அங்கு கொண்டுவரப்படும். மூன்று மண்ணாலான வளந்துகளும் வைக்கப்படும்.

கலையாடுபவர்களாக சிலருடைய சிலருடைய விபரம் கிடைத்துள்ளது. கிட்னர்இவிநாயகர்இசின்னக்குட்டி(மணியப்பா)இபொன்னப்பாஇபூசாரி வி.சின்னத்தம்பி போன்றோர் முன்னைய காலங்களில் முறையாக செய்து வந்துள்ளனர்.தற்போது கந்தையாஇசிதம்பரப்பிள்ளை இத் தெய்வீகப் பணியை செய்து வருகின்றார். இவர்களிற்கு என்று விசேடமான ஆடையும் சலங்கைகளும் உண்டு.அவற்றை கட்டி பறை முழங்கப் பிள்ளையாருக்கும் முருகனுக்கும் தேங்காய் உடைத்து கற்பூரமேற்றி சலவைத் தொழிலாளியிடம் தூய வெள்ளைச் சேலை வாங்கி தூபம் காட்டி தெய்வங்களை வேண்டி நேர்ந்து கொள்வர்.வேம்பின் இரு கரைகளிலும் வெள்ளை சேலை விரிக்கப்பட்டு வண்டிலிலிருக்கும் பொருட்கள் இறக்கி வைக்கப்படும். இதன் பின்னர் நான்கு சூலங்கள் நேரப்படும். முதலாவது அம்பாளிற்குரியது (ஐமுகச் சூலம்) ஏனையவை முறையே வீரபத்திரர்இவைரவர்இமுனீஸ்வரர்என்றவாறு அமையும்.இதன் பின் பறை முழங்கப் பூசை இடம்பெறும்.கலையாடுபவர் உருக்கொண்டு சூழ இருக்கும் தெய்வங்களிற்குப் பல தேசிக்காய்கள்இ பச்சையரிசி எறிந்து திருப்திப்படுத்துவர்.

வேப்பம் பத்திரத்தினால் எல்லா வண்டில்களுக்கும் தண்ணீர் தெளித்து தூபம் காட்டி புனிதப்படுத்துவர்.இதன் பின் பறை அடிப்பவர் மேல் காடேறியை ஏற்றி உருக்கொள்ளச்செய்து காடேறி விழுத்துதல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பூசை முடிய பண்டம் எடுக்கப்பட்டு கோவிலடியை நோக்கிப் புறப்படும்.பண்டம் வரும் வீதியோரங்களில் நிறைகுடங்கள் வைத்து அடியவர்கள் அம்பாளை வரவேற்பார்கள்.அம்பாள் திருநடனம் புரிந்து அருள் வழங்குவார்.நிறைகுட நீர் சூலத்திற்கு அபிஷேகம் செய்யப்படும்.தும்புருவில் பிள்ளையார் கோவிலை அடைந்ததும் தேங்காய் உடைத்து மூன்று தேசிக்காய்கள் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடுகள் நடைபெறும்.விநாயகரின் அனுமதி பெற்று பண்டம் ஆலயத்தினை நோக்கிச் செல்லும்.ஆலய முகப்பில் வண்டில்கள் அம்பளைப் பார்த்தபடி நிற்க பண்டம் இறக்கப்பட்டு உள்வீதி வலம் வந்து ஆலய மண்டபத்தில் வைப்பர்.இந் நிகழ்வு திங்கட்கிழமை இரவு நடைபெறும்.

செய்வாய் காலையில் அபிஷேகம் நடைபெற்று வாசலில் சூலங்கள் நேர்ந்து நாட்டப்படும்.தெய்வங்களிற்குரிய ஆயுதங்களான பிரம்பு இசிலம்பு இவாள் இ கத்தி தண்டம் என்பனவும் வேம்பம்பத்திரிஇ சலங்கையும் வைக்கப்படும். பூசை நடைபெற்று மூன்று வளர்ந்து நேரப்படும்(கணபதிஇகண்ணகைஇவைரவர்) வாசலில் வைத்துப் பொங்கல் நடைபெறும்.நிருத்த மண்டபத்தின் இருபுறமும் மடை போடப்பட்டு ஏழு துலங்கங்கள் முக்கியமாக வைக்கப்படும்.இதனை விடப் பரிகலங்களிற்குரிய மடைகளும் தனித்தனியே இடம்பெறும்.அத்துடன் காடேறி விழுத்தலும் இடம்பெறும். மேலும் தீக்குளித்தலும் இடம்பெறும்.பின்பு ஆலயத்தின் கிழக்காகச் சென்று வழிவெட்டும் இடத்தில் சூலங்களை நாட்டி மேலும் கீழுமாக இரு வெள்ளைச் சேலைகள் பிடிக்க ஏழு உருண்டைகள்இபழவகைகள் வைக்கப்படும்.பின்பு பூசை நடைபெறும். ஏழு இளநீர்கள் வைத்து வழிவெட்டப்படும்இதேசிக்காய்இபச்சை அரிசி எறிந்து பரிகலங்கள் திருப்திப்படுத்தப்படும்.இதன் பின்பு கோயில் குருக்கள் மடை கலைத்து சண்டேஸ்வர பூசையுடன் விபூதிப் பிரசாதம் வழங்கப்படும்.

வழிபாடுகள்

தொகு

சிட்டிவேரம் கண்ணகை அம்பாள் ஆலயத்தில் ஆரம்ப காலங்களில் ஞானியர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ஆகம முறை சாராத சாதாரண வகையில் பக்திமார்க்கமாகப் பூசைகள் வழிபாடுகளைச் செய்து வந்தனர். திங்கட்கிழமைகளிலே அம்பாளுக்கு விசேட வழிபாடுகள் இடம் பெற்று வந்தன. பொங்கலைத் தொடர்ந்து15ஆம் நாள் வைகாசி விசாகம் வந்த முதற்திங்கட்கிழமையில் ஊர்மக்கள் எல்லோரும் பொங்கலிடத் திருவிழா ஆரம்பமாகும்.இதற்கு முன்பு வரும் சனிக்கிழமைபொது அன்னதானம் ஒன்று இடம்பெறும்.14 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. 8 ஆம் திருவிழா வேட்டையாகவும், 12 சப்பறமாகவும்,13 தேராகவும்,14தீர்த்தமாகவும் விளங்குகிறது.தீர்த்த திருவிழாவன்று அம்பாள் தும்புருவில் குளத்திற்கு எழுந்தருளி தீர்த்த மாடிய பின்பு பிள்ளையாரை நோக்கி எழுந்தருளிஇளைப்பாறுவார். இதனைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையில் வைரவர் மடை இடம்பெறும்.அன்றைய தினம் முன்னைய காலங்களில் அம்பாளைப் பூசித்துவந்த சித்தர்களிற்கும் முனிவர்களுக்கும் பன்னிரண்டு படையல்கள் செய்யப்படுவது சிறப்பிற்குரிய அம்சமாகும்.

பங்குனித் திங்கள் உற்சவமும் காலம் காலமாக விசேடமாகக் கொண்டாடப்படுகிறது.அம்பாளிற்கு விசேட அபிஷேகம், குளிர்த்தி போடுதல், அம்பாள் வீதி வலம்வருதல் என்பன இடம்பெறுகின்றன. அம்பாளின் சோலை முழுவதும் பெரும் திரளான அடியவர்கள் நீர்க்கஞ்சி உண்டு மகிழ்வர். ஒவ்வொரு நாளும் இரண்டு காலப் பூசைகள் நடைபெற்று வருகின்றன. நவராத்திரி விழா கும்பம் வைத்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.மானம்பூத்திருவிழா,வாழைவெட்டு,சுவாமி வீதியுலா வருதல் என்பனவும் சிறப்பாக நடைபெறுகிறது. தொடர்ந்து கேதாரகௌரி விரதம் 21 தினங்களும் விசேடஅபிஷேக பூசைகளுடன் சிறப்பாக நடைபெறுகிறது.பெருமளவு அடியவர்கள் கௌரிக்காப்பு வேண்டி அணிந்து கொள்கின்றனர். மேலும் கந்தசஷ்டி,பிள்ளையார்கதை, அபிராமிப்பட்டர் விழா,ஆடிப்பூரம்,வரலட்சுமி,விரதம்,பெளர்ணமிகள் தோறும் திருவாசக முற்றோதல்,அமாவாசை தோறும் அபிராமி அந்தாதி ஓதுதல்,தைப்பூசம்,தைப்பொங்கல்,சித்திரைவருடப்பிறப்பு, பெரியபுராணப்படிப்பு என்பனவும் முறையாக நடைபெறுகின்றன. முதலில் அம்பாளிற்கு பொங்கல் ஆரம்பித்து பின்பு எல்லா ஆலயங்களிலும் நடைபெற்றுப் பூர்த்தியாக ஞாயிற்றுக்கிழமை ஐயன் கோயிற் பொங்கலுடன் பரிகலங்கள் மற்றும் தேவதைகள் கதிர்காமத்திற்குச் சென்று தீர்த்தமாடுவதாகப் புராதன காலம் தொடக்கம் மரபாக இருந்து வருகிறது.திருவிழாக் காலங்களிலேயே கோவலன் கண்ணகி கதை படிக்கப்பட்டுத் தீர்த்தத்தன்று முடிவுறுவதையும் அறிய முடிகிறது.

அம்பாளின் அடியவர்கள் பல்வேறு நேர்த்திகளை வைத்து அவற்றை நிறைவேற்றித் தாயாரின் அருளைப் பெறுவர்.கண்மடல் கொடுத்தல்,கற்பூரச்சட்டி எடுத்தல்,காவடி எடுத்தல்,தீக்குளித்தல்,அங்கப் பிரதட்சணை செய்தல்,அடியளித்தல்,அன்னதானம் வழங்குதல்,ஸ்நபன, சங்காபிஷேகம் செய்தல் என்பன நடைபெறுகின்றன.புதிய கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து அம்பாளிற்கு அதிகமான அபிஷேகங்கள் இடம்பெறுவது தாயாரின் திருவருளேயாகும். தேர்த்திருவிழாவன்று அம்பாள் பச்சை சாத்திப் பன்னீர் மழை சொரிய ஆனந்தக் கூத்தாடி வரும் காட்சி மிகவும் அற்புதமானதாகும்.அதனைத் தொடர்ந்து இடம்பெறும் பிரயாச்சித்த அபிஷேகம் மிகவும் மகிமையுடையதாகும்.குடங்குடமாகப் பால் அபிஷேகம் செய்யப்படுவதும் பால் ஆறாக ஓடுவதும் அற்புதக் காட்சியாகும்.இவ் அபிஷேகத்தினைத் தவறாது செய்ய வேண்டும் என்பது எல்லோரும் கவனத்திற் கொள்ள வேண்டியதாகும்.

அம்பாளின் ஆலயத்திலே ஆரம்ப காலங்களில் சித்தர்கள் பூசித்தனர்.பின்பு பூசாரிமார் பூசைகளைச் செய்தனர்.1942 தொடக்கம் வரணி குருக்கள் குடியிருப்பைச் சேர்ந்த சைவக் குருமார்கள் நித்திய நைமித்தியங்களைச் செய்து வந்தனர்.சிவஸ்ரீ பொன்னையாக் குருக்கள்-ஐயாத்துரைக் குருக்கள் நீண்டகாலமாக நித்திய பூசை,திருவிழாக்கள் என்பவற்றைச் செய்து வந்துள்ளனர்.அவரைத் தொடர்ந்து தற்போது இருக்கும் சிவஸ்ரீ இ.குமாரசாமிக்குருக்கள் பிரதம குருவாக இருந்து நித்திய,நைமித்தியங்களை ஆகம முறைப்படி முறையாகப் பக்தி பூர்வமாகச் செய்து வருகின்றார்.இவருடைய பூசைச் சிறப்புகளால் ஆலயம் படிப்படியாக பெருவளர்ச்சி கண்டுள்ளது.இவர் இவ்வாலயத்திலேயே பூசகராக இருந்து குருப்பட்டம் இங்கேயே பெற்றுக்கொண்டவர் என்பது சிறப்பிற்குரியது.மேலும் அவருக்கு உதவியாக இருக்கும் சிவஸ்ரீ.க.ஐங்கரன் ஐயாவும் ஏனைய அச்சகர்களும் இவ்வாலய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

அற்புதங்கள்

தொகு

இவ்வாயத்துடன் தொடர்புடைய பல அற்புதங்கள் ஐதீகங்களும் உள்ளன . முன்னொரு காலத்தில் ஞானியர் பரம்பரையில் வந்த வரணி கரம்பைக் குறிச்சியில் வசிக்கும் கந்தர் என்பவர் கண்ணகையை வழிபடுவதில் பக்தி சிரத்தைஉடையவார். அவர் சின்னம்மன் ஆலயம் இருந்த இடத்தில் வழிபாடுகள் செய்து வந்தார். அவர் ஒரு நாள் தற்போது ஆலயம் உள்ள எய்ப்பன்றிக் காட்டுச் சூழலில் பனம்பழம் எடுக்கச் சென்றிருந்தார். கடகம் நிறைய பனம்பழம் எடுத்துவிட்டு தூக்க முடியாது நின்றார். அவ்வேளை இயற்கை நிறைந்த அந்தச்சுற்றாடலில் தலைநரை கோலமுடைய வெள்ளை சேலை உடுத்த மூதாட்டி ஒருவர் வந்து பனம்பழக் கடகத்தினைத் தூக்கி உதவினார். பின்பு திரும்பி பார்த்த போது அவரைக் காணவில்லை. கந்தர் அதிசயத்துடனும் பயத்துடனும் வீடு சென்று நடந்ததைக் கூறினார். அன்றிரவு காந்தரின் தாய்க்கு அம்பாள் கனவில் தோன்றி தன்னுடைய ஆதிகால இடம் சோலை சூழ்ந்த அப்பகுதியே என்றும் தன்னை அங்கே வைத்து வழிபடுமாறும் கூறினாராம். விடிந்ததும் கந்தர் இந்த விடயத்தினை ஊர் மக்ளுக்குக் கூறி எல்லோரும் ஒன்று சேர்ந்து தற்போது ஆலயமுள்ள இடத்தில பிரம்மாண்டமான நாவல் மரத்தின் கீழே அம்பாளை வைத்துப் பொங்கலிட்டு வழிபாடுளைச்செய்தனர். பின்பு எல்லோரும் சேர்ந்து மண்ணால் ஒரு கோயில் அமைத்தனர் . தல விருட்ச்சமாகப் பாலைமரம் விளங்குகிறது. அருட்கவி சீ.விநாசித்தம்பிப் புலவருக்கு அவ்விருட்ச்சத்திலேயே தாயார் தனது அருட்காட்சியைக் காட்டியருளினார்.

கந்தருடைய ஞானியர் பரம்பரையினர் தொடர்ந்து பூசைகளைச் செய்தனர்.இவர்கள் இந்தியாவினுடைய தமிழகத்துடன் தொடர்புடைவார்களாகும். அவர்கள் 1941 ஆம் ஆண்டுவரை பரம்பரையாக இவ்வாலயத்திணை ப் பரிபாலித்து வந்தமை அறியப்படுகின்றது. இன்னொரு அற்புத கதையும் உண்டு. ஒருவர் இந்த ஆலயச்சூழலில் வழிபாடு செய்துவிட்டுச் தனியாக அமர்ந்திருந்த போது வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் தனது தலையிலே அதிகமாக பேன் இருப்பதாகவும் அவற்றை எடுத்துத்தருமாறும் கூறினாராம். அங்கே நின்றவர் தலையை பார்த்த போது பேன் தெரியவில்லை. ஆயிரக்கணக்கான கண்கள் தலைக்குள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பேனைக் காணவில்லை தலையெல்லாம் கண்ணாய் இருக்கின்றதே என்று கூறினாராம் . அம்மூதாட்டி சிரித்துக்கொண்டே திடீரென மறைந்து விட்டார். இது கண்ணகையின் திருவிளையலாகும் . இந்த ஆலயத்திலே பொய்ச் சத்தியம் செய்த சிலர் கண்பார்வை இழந்து குருடர்களாகத் திரிவதை பலரும் அறிவர். மேலும் போராளிகள் இராணுவர்கள் பலரும் அம்பாளுடன் முரண்பாட்டுத் தண்டனைகளை அனுபவித்துள்ளனர். அம்பாள் ஆலயத்தில் சண்டையிட் டவர்கள் பலவித தாக்கங்களைப் பெற்றதுடன் அழிவடைந்துமுள்ளனர். முக்கியமாக ஒழுக்கத்தைக் காக்கும் தேவியாக அம்பாள் விளங்கி வந்திருப்பதை அறியமுடிகிறன்றது. பிழைவிடுபவர்களைத் தண்டித்து நல்வழிப்படுத்தி வைத்துள்ளார் .


ஆலய பரிபாலனம்

தொகு

ஞானியர் பரம்பரையினாலே இவ் ஆலயம் நீண்ட காலமாகப் பரிபாலிக்கப்பட்டு வந்துள்ளது. பிற்கலத்தில் அவர்களின் விருப்பத்தின் பேரில் பரிபாலனம் கைமாறியுள்ளதையும் அறிய முடிகின்றது .கி.பி 1812 ஆம் ஆண்டளவில் விநாயகர் குமரர் என்பவர் தமது முன்னோர் மண்ணால் அமைத்த கோவிலை செங்கற்களால் புனருத்தாரணம் செய்து பரிபாலித்தார் .கி.பி.1930 களின் பின்பு கிட்டினர் - விநாயகர் என்பவருடைய தலைமையில் ஊர்ப்பொதுவாக கற்றாளி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன . பொழிகல்லால் சிறப்பாக கோவில் அமைக்கப்படட்து 1938 ஆம் ஆண்டளவில் கருவறை ,அர்த்த மண்டபம் , மகா மண்டபம் நிருத்த மண்டபம் என்பன ஆகம முறைப்படி கற்றளியாக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டன. இவை ஊர்ப்பொது உபயமாக எல்லா அடியவர்களின் நிதியையும் கொண்டு அமைக்கப்பட்டது என்பதைக் கருவறையின் பின்சுவரில் உள்ள கல்வெட்டு உறுதிப்படுத்துகின்றது . வெகுதனிய வருடம் வைகாசி மாதம் திங்கட்கிழமை கன்னிலக்கின சுபமுகூர்த்தத்தில் 1938.06.13 இல் முதலாவது கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது . மூலஸ்தானப் பண்டிகை ஆரம்பத்தில் பத்மமாகவே அமைக்கப்பட்டிருந்தது.

விநாயகர் பரிபாலித்துவரும் போது அவரது தயார் அல்வாயில் இருந்தமை அறியப்படுகிறது. விநாயகர் இறக்க அவருடைய மகன் கிருஸ்ணபிள்ளை சிறுவனாக இருந்ததால் ஆலய பரிபாலனம் வரணி இயற்றாலையைச் சேர்ந்த வேதாரணியர் சிதம்பர நாதர் (மணியப்பா )அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட்து .(1946) அவர் மிகுந்த கட்டட வேலைகளைச் செய்து கோவிலைப் பரிபாலித்து வந்தார். சிதம்பர நாதரின் பின்பு சட்டநாயகம் குலநாயகம் (குலம் விதானையார் ) என்பவரிடம் பரிபாலனம் ஒப்படைக்கப்பட்ட்து (கி.பி 1983) அவரே முகாமையாளராக இருந்து கோயிலைப் பரிபாலித்தார் . கோயிலில் இருந்த சில பிரச்சனைகளை தமது மதிநுட்பத்தால் தீர்த்து வைத்தார் . இவருடைய காலத்தில் விநாயகர் சந்நிதி, வசந்த மண்டபம்,தம்ப மண்டபம், தரிசன மண்டபம், மடைப்பள்ளி , களஞ்சியம் என்பன அமைக்கப்பட்டன.

புதிய திருப்பணி வரலாறுகள்

தொகு

அம்பாளினுடைய திருவருளால் ஆலயம் புதுப்பொலிவு பெறுவதற்கு காலம் கனிந்தது. குலம் விதானையார் முகாமையாளராக இருந்த காலத்தில் சில திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. வசந்த மண்டபம், தம்ப மண்டபம், மடைப்பள்ளி, களஞ்சியம் என்பவை செய்யப்பட்டன. மேலும் விநாயகர் பரிவார சந்நிதியும் அமைக்கப்பட்டன. ஆனால் இதன் பின்பு திருப்பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை. இந்த வேளையில் அருட்கவி சீ.வினாசித்தம்பிப்புலவர் அவர்களிடம் செல்கின்ற வேளை அங்கே அவர் பிள்ளையாருடைய ஆலயம் பிழையான இடத்தில் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். அதமஸ்தானத்தில் இருப்பதாக குறிப்பிட்டார். ஆலய பரிபாலகர்களிடம் இதனைத் தெரிவித்து அதனைச் சரியான இடத்தில் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால் அவர் குலம் விதானையார் என்ன கூறுகின்றாரோ தெரியாதென்று இதனைத் தெரிவிக்கவில்லை. ஆனால் வினாசித்தம்பிப்புலவர் அவர்கள் மேலும் இரண்டு தடவைக்கு மேல் இது தொடர்பாக எடுத்து கூறியிருந்தார். குலம் விதானையார் அவர்கள் அதனை தட்டிக் கழிக்காது அராலியூர் சிற்பாசாரியார் ஸ்தபதி நவரத்தினம் அவர்களிடம் தெரிவித்து அளந்து பார்ப்போம் என்று முடிவெடுக்கப்பட்டது. இதன் பிரகாரம் அளக்கப்பட்ட போது அருட்கவி ஐயா கூறியது போன்று குறிப்பிட்ட சில அடி தூரம் சந்நிதானம் பின்னோக்கி செல்ல வேண்டியிருந்தது.

அருட்கவி ஐயா அவர்கள் கோவிலுக்கு வராமலேயே அளவெட்டியில் இருந்துகொண்டு இந்த உண்மைகளை வெளிப்படுத்தியமை அற்புதமாகவே கருதப்படுகின்றது. அத்துடன் அருட்கவி ஐயா இன்னொரு விடயத்தை கூறியிருந்தமை அதிசயமானது. அதாவது பிள்ளையார் ஆலயத்தை கட்டியிழுத்து உரிய இடத்தில் விடுகின்ற வழிகளையும் கூறியமையாகும்.சிற்பாசாரியவர்கள் கட்டி இழுப்பதற்கு சம்மதித்தார். ஆனால் ஆலயம் சரிந்தால் அதனை இடித்துப் புதிதாகக் கட்டவேண்டிவரும் எனக் கூறியிருந்தார். அம்பாளுடைய திருவருளை வேண்டி பொருளாளராக இருந்த வ.சின்னத்தம்பி தலைமையில் அம்பாளின் பல தொண்டர்களை ஒன்றிணைத்து பிள்ளையார் சந்நிதானத்தின் அடித்தளம் வரை சுற்றி மண் அகழ்ந்து பின்புறம் வர வேண்டிய தூரம் அளவுக்கு கிடங்கு எடுக்கப்பட்டு விநாயகரையும் அம்பாளையும் வேண்டி விநாயகர் சந்நிதானத்தைக் கட்டியிழுத்தனர். என்ன அதிசயம் அருட்கவி ஐயா கூறியது போல உரிய இடத்தில் பிள்ளையார் சந்நிதானம் வந்து நின்றது. தொண்டர்கள் ஆனந்தம் அடைந்தனர். அம்பாளின் திருவருளை நினைத்துப் பக்திப் பரவசம் அடைந்தனர். அதன் பின்பு ஆலயம் வளர்ச்சி அடையத்தொடங்கியது. இப்பெயர்வால் ஆலய வளர்ச்சி சிறிது காலம் தடைப்பட்டுப் போனதும் மக்கள் 2002ல் மீளக்குடியமர்ந்த பின்பு ஆலயம் புதுப்பொலிவு பெறத்தொடங்கியது.

ஆலய நிவாகத்திற்காகப் புதிய பரிபாலனசபை அமைந்த போது திருவிழா உபயகாரர்கள் எல்லோரும் சேர்ந்து ஆலய திருப்பணிகளைச் செய்வதென்று முடிவெடுத்துக் கொண்டனர். தொடர்ந்து அம்பாளிற்குக் கும்பாபிஷேகம் ஒன்றைச் சிறப்பாக நடத்துவது என்று உறுதியெடுத்துக் கொண்டனர். ஆலய திருப்பணிகளைச் செய்வதற்கு அராலியூர் ஸ்தபதி நவரத்தினம் குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களும் பக்திபூர்வமாக பூரணமாக அம்பாளின் ஆலயக் கட்டட வேலைகளைச் செய்வதற்கு உறுதி பூண்டனர். அம்பாளினுடைய உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தொண்டர்கள் பெருமளவு நிதியை வாரி வழங்கினர். மற்றும் ஊர்மக்கள் கல், மண், உழவு இயந்திரம் சரீர உதவி என்றவாறு பல பங்களிப்பைச் செய்தனர்.

சிற்பாசாரி அவர்கள் பிள்ளையார் சந்நிதானத்திலே பண்டிகை இருப்பதால் அம்பாளினுடைய கருவறைக்கு மேலும் பண்டிகை அமைக்க வேண்டுமென்று ஆலோசனை கூறினார். ஆலயத் தொண்டர்களுக்கு அது விருப்பமாக இருந்தது. ஆனால் ஆலயத்தின் கருவறைக்கு மேல் முன்பு பத்மமே இருந்து வந்துள்ளது. இதனால் அளவையூர் அருட்கவி விநாசித்தம்பி ஐயா அவர்கள் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். அவர் ஆலயத்துக்கு வந்த போது அம்பாள் பாலைமரத்தில் அவருக்கு காட்சி கொடுத்தார். அதுவே தலவிருட்சம் என்றும் அதனை பத்திரமாக பேணி வழிபட்டு வரவேண்டும் என்றும் எடுத்துக்கூறினார். மேலும் ஆலயத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களை திருமடம் அமைக்க வேண்டிய இடத்தையும் சரியாக எடுத்துக் கொடுத்தார். அவருடைய ஆசீர்வாதத்துடன் ஆலயத் திருப்பணிகள் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கு முன்பாக அம்பாளை பாலஸ்தானம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. விமானம் துவி தளமாக அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

சித்திரை மாதம் 14ம் நாள் புதன்கிழமை(27.04.2015) பார்த்தீப வருடத்தில் அதிகாலை 5.00 மணி தொடக்கம் 6.19 மணி வரையுள்ள அனுச நட்சத்திர சுப மூர்த்தத்தில் பாலஸ்தாபன கும்பாபிசேகம் நடைபெற்றது. பாலஸ்தாபனம் பிரதம குரு சிவஸ்ரீ.இ.குமாரசுவமிக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது. அன்றைய தினம் குருக்கள் சிற்பாசாரி பரிபாலன சபையினர் ஊர்மக்கள் எல்லோரும் ஒரு சங்கல்ப்பம் செய்து கொண்டார்கள். அதாவது அடுத்த வருடத்தில் கும்பாபிஷேகம் செய்தல் வேண்டும் என்பதே அதுவாகும். அதற்கு அம்பாளினுடைய திருவருளையும் வேண்டிக் கொண்டனர். இதே வேளை ஆலயத்தில் உள்ள தவறுகளையும் நீக்கி திருப்பணி சிறப்பாக நடைபெறுவதற்கு பெரிய புராணம் படித்தல் வேண்டும் என்பதை வடமராட்சி கிழக்கு குடாரப்பு திருவருட் சித்தர் செல்லையா செகசேகரம் (புன்னையடி சாஸ்திரியார்) கூரியதற்கேற்ப அன்றைய தினமே அவரால் அந்தப் புண்ணிய கைங்கரியம் தொடங்கப்பட்டது. பெரியபுராணம் பூர்த்தியடைந்து 63 தனியடியார்களும் 9 தொகையடியார்களும் சேக்கிழாருக்கும் திருவமுது படைத்து வழிபாடுகள் செய்யப்பட்டு அன்னதானம் கொடுக்கப்பட்ட பின்பு திருப்பணிகள் மிக வேகமாக நடைபெற்றன.

1938 ஆம் ஆண்டு ஊர்ப் பொதுமக்களால் நிறைவு செய்யப்பட்ட கருவறைக் கற்றளி தளத்திலிருந்து பண்டிகை அமைக்கப்பட்டது. துவி தளம் கொண்ட பண்டிகை நிர்மாணிக்கப்பட்டது. அத்துடன் முருகன் சந்நிதானம், சண்டேஸ்வரர் சந்நிதானம், பைரவ சந்நிதானம், யாகசாலை மணிக்கூட்டுக் கோபுரம், நந்தி, பலிபீடம், ஆகமசாலை, வெளியில் பரிவார் சந்நிதி என்பன புதிதாக அமைக்கப்பட்டன. உள்வீதி சுற்று மதிலும் நிர்மாணிக்கப்பட்டன. பண்டிகைகளிற்கு உரிய சிற்பங்கள் தென்னிந்தியாவின் சீர்காழி பாலகிருஷ்ணன் குழுவினரால் செய்யப்பட்டன. கூரை வேலை மந்துவில் கெளதமி மரக்காலை உரிமையாளரால் திரு.க.ஜெகபாலன் குழுவினரால் செய்யப்பட்டது. இவ்வேலைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்ட பின்பு மகா கும்பாபிஷேகம் செய்வதற்கு அம்பாள் திருவருள் வேண்டப்பட்டது. திருப்பணிகளுக்கு அடியவர்கள் பல்வேறு வகையிலும் பேருதவிகளை வழங்கினார்கள்.

புல்லினால் வருடம் கோடி புதுமணலால் நூறுகோடி

துல்லிய செங்கல்லாலே தூயமுந்நூறு கோடி

அல்லியங் கோதே கேளாய் அரும்தரும் ஆலயங்கள்

கல்லினால் செய்த பேர்கள் கையை விட்டகலார்தாமே

என்ற அருளாளர் வாக்கிற்கேற்ப உண்மையை உணர்ந்து திருவருளை அறிந்து பலரும் திருப்பணி உதவி புரிந்தால் ஒரு வருட காலத்திற்குள்ளே கோயில் திருப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கைகூடியது.

அம்பாளினுடைய மகா கும்பாபிஷேகம் விஜய வருஷம் சித்திரைத் திங்கள் 21ம் நாள் (04.05.2006) வியாழக்கிழமை காலை 6.45 க்கும் 7.55 இக்கும் இடையில் பூர்வ ஷப்தமித்திதியும் பூசநட்சத்திரமும் அமிர்தசித்தயோகமும் கூடிய வேளையில் நடைபெற்றது. அதனை சிவஸ்ரீ இ.குமாரசாமிக் குருக்கள் பிரதம குருவாக இருந்து நவகுண்டபக்ஷமாக நடாத்தி வைத்தமை சிறப்பிற்குரியது. தொடர்ந்து 45 தினங்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்றது. அடியார்களே திரவியங்களை சேர்த்து உத்தமோ உத்தமமான முறையில் விரிவாகச் செய்யப்பட்ட மிகச் சிறப்பான கும்பாபிஷேகம் இதுவென்று அருளாளர்களால் கூறப்பட்டுள்ளது.மண்டலாபிஷேக பூர்த்தியன்று பிரதம குருக்களிற்கு ஸ்ரீ சக்திக் கிரியா குருமணி என்று பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மேலும் அராலியூர் கங்கை கலாலய ஸ்தபதி கு.நவரத்தினம் அவர்களிற்கு சாஷ்த்திரோத்தம சிற்ப செம்மல் எனும் பட்டம் வழங்கி 11ம்திருவிழா உபயகாரர் சார்பில் ஆலய வளர்ச்சிக்கு மூலகர்த்தாவாக விளங்கிய பொருளாளர் வ.சின்னத்தம்பியால் தங்கப்பதக்கம் சூட்டிக் கௌரவிக்கப்பட்டார். அத்துடன் ஏனைய கலைஞர்களும் சிவாச்சாரியார்கள், அர்ச்சகர்களும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.

அம்பாளின் புராதன விக்கிரகம் கலவாடப்பட்டதால் புதிய கருங்கல் விக்கிரகம் அம்பாளின் திருவருளுடன் ஆறாவது நிர்வாக சபை பிரதிஸ்டை செய்வதற்கு ஒழுங்குகளைச் செய்தனர். அந்த வகையில் மகா கும்பபிஷேகமானது சம்புரோக்ன அட்டபந்தன நவ குண்டபக்க்ஷமாக புனராவர்த்தனமாக அமைந்தது. இதற்கான கிரியைகள் ஜய வருஷம் ஆனி மாதம் 20ம் நாள் (04.07.2014) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின. (மாலை 7.30 முதல் 9.15 வரை) பிரதமகுருவாக ஸ்ரீசக்தி கிரியா குருமணி சிவஸ்ரீ.இ.குமாரசுவாமிக் குருக்கள் கிரியைகளைப் பொறுப்பாக இருந்து நடத்தினர். எண்ணெய் காப்பு ஆனி மாதம் 24ம் நாள் (08.07.2014) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. விநாயகர், கண்ணகை அம்பாள், சுப்பிரமணியர், தல விருட்ச அம்பாள், உற்சவ மூர்த்தி, பைரவர், சண்டேஸ்வரர், முனீஸ்வரர் ஆகிய தெய்வங்கள் எல்லாவற்றிற்கும் மங்கள கரமான ஜய வருஷம் ஆனித் திங்கள் 25ம் நாள் (09.07.2014) புதன்கிழமை பூர்வ துவாதசி திதியும் அனுஷ நடசத்திரமும் அமிர்த சித்த யோகமும் கூடிய காலை 8.37 மணி முதல் 9.57 மணி வரையான சிங்கலக்கின சுப மூகூர்த்த வேளையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து 45 தினங்கள் மண்டலாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

அன்னதான மடம்

தொகு
 
அன்னதான மடம்

அம்பாளின் சந்நிதானத்திலே அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.பங்குனித் திங்கள் பூசை, திருவிழாக்கால மகேஸ்வர பூசை,இன்னும் இன்னும் விசேட உற்சவகால பூசை என அன்னதான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.அன்னதானத்தின் போது அடியவர்கள் இடையூறு இன்றி செளகரியமாக இருந்து உண்டு மகிழவும்,விரதங்களை இங்கேயே நிறைவேற்றிக் கொள்வதற்கும் இலகுவாக அன்னதான மடம் நிறுவப்பட்டது.மண்டபம் அமைப்பதற்கு முன்னர் மரச்சோலைகளின் கீழும், வீதி ஓரத்திலும் இருந்து அடியவர்கள் பசியாற்றி வந்தனர்.மண்டபம் இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு 2007 ஆம் ஆண்டு இதற்கான திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.இத்திருப்பணி ஊர் பொது உபயமாக எல்லோருடைய நிதி உதவியுடனும் நிறைவேற்றப்பட்டது.இப்போது ஒரே நேரத்தில் பல அடியவர்கள் அமர்ந்து அன்னதான நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடிய வகையில் வசதிகளோடு காணப்படுவது அம்பாளின் அனுக்கிரகமாகும்.

கலாமண்டபம்

தொகு
 
2011ம் ஆண்டு இசைப்பாடகி நித்தியஸ்ரீ மகாதேவா சிட்டிவேர ஆலயத்தில்

"இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் கொடுத்த வரம் ... ஆகும் " என்பதற்கமைய அம்பாளின் சந்நிதானத்தில் கலைகள் சங்கமிக்கும் இடமாக அம்பாளின் தெற்கு வீதியில் ஒரு கலாமண்டபம் அமைக்கபட்டுக் காலங்காலமாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தமை சிறப்பிற்குரியதாகும்.இந்தக் கட்டடத்தை முன் நின்று அமைப்பித்தவர் அமரர்.க.யோகராசா (ஓய்வு பெற்ற வாங்கியாளர்) அவர்களாகும். அம்பாளின் திருவிழாவின் நிறைவு நாளான தீர்த்த திருவிழா அன்று இரவு தொடக்கம் விடியும் வரை நாடகம் இடம்பெறுதல் முக்கியமானதாகும்.அரிச்சந்திர மாயனகாண்டம்,நல்ல தங்காள் நாடகம்,காத்தவராயன் கூத்து,கோவலன் கண்ணகி நாடகம்,இராமாயாண நாடகம்,சத்தியவான் சாவித்திரி நாடகம் என்று பல்வேறு நாடகங்கள் அரேங்கேறியிருக்கின்றன.இன்னும் இசைக்கச்சேரிகள்,பரத நாட்டிய நிகழ்வுகள்,வில்லிசை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.இன்றும் நடை பெறுகின்றன.ஆனால் மரபுக் கலைகள் இன்று கையறு நிலையில் போவதும் இளைய தலைமுறை இவற்றில் கரிசனை காட்டாமையும் கவலைக்குரியது.

மாறாக இன்று இன்னிசை கானங்கள் பிரத்தியேக மேடை அமைப்புக்களுடன் ஆலய முன்றலில் நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் பல கலைஞர்கள் வெளியுலகிற்கு அறிமுகமாகியிருக்கின்றனர்.இவ்வாறு யாழ்ப்பாணக் குடா நாட்டிலே கலை வளர்ச்சிக்குப் புகழ்மிக்க ஆலயமாக சிட்டிவேரம் அம்பாள் ஆலயம் விளங்குகின்றது.அத்துடன் கலைஞர்களைக் கெளரவிப்பதும் சிறப்பம்சமாக இருக்கின்றது.2011ம் ஆண்டு 3ம் திருவிழாவிற்கு தென்னிந்தியாவிலிருந்து பிரபல கர்நாடக இசை மேதை நித்தியஸ்ரீ மகாதேவா அவர்கள் அழைத்துவரப்பட்டு இசைக்கச்சேரி வைக்கப்பட்டமை மிகவும் சிறப்பிற்குரியதாகும்.சீர்காழி கோவிந்தராஜனை அடுத்து தென்னிந்திய இசைப்பாடகர் ஒருவர் இவ்வாலயத்தில் கால் பதித்த நிகழ்வு இதுவாகும்.அவரும் அம்பாள் மீது பாடலை இயற்றி பாடினார்.அத்துடன் கர்நாடக இசையிலேயே பாடல்கள் பாடப்பட்டமை சிறப்பம்சமாகும்.அவர் மூன்றாம் திருவிழா உபயகாரரினால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.2013ம் ஆண்டு அலங்கார உற்சவத்தின் போது பதினோராம் திருவிழா உபாயகாரரினால் இந்தியாவில் இருந்து "சூப்பர் சிங்கர் " இசைக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

அறநெறிப் பாடசாலை

தொகு

வரணிப் பகுதியில் பிள்ளைகளின் அறநெறிக்கல்வியை வளர்த்து உயர்ந்த சைவத்தமிழ் ஒழுக்கத்தையும் பண்பாடுகளையும் பேண வழிசெய்ய வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்துடன் அம்பாளின் திருவருள் உத்தரவுடன் 21.01.2000ஆம் ஆண்டு நன்னாளில் சைவப்புலவர் சி.க.கமலநாதன் அவர்களால் வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலய அறநெறிப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.இதற்கு அதிபராக அவரே விளங்கி வருகின்றார்.காப்பாளராக சிவஸ்ரீ.இ.குமாரசுவாமிக் குருக்கள் இருந்து வருகிறார்.இப் பாடசாலை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் 12.03.2007இல் பதியப்பட்டது.பதிவு இலக்கம் HA/7/56/14/155 என்பதாகும்.இதன் மகுடவாசகம் "அறமே வெல்லும் " என்பதாகும்.திணைக்களமும், அரச பரீட்சைத் திணைக்களமும் நடாத்தும் பரீட்சைகளில் மாணவர்கள் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுவருகின்றனர்.பண்ணிசை,கூட்டுப் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.அரசினதும் பரிபாலன சபையினுடையதும் உதவியுடன் அறநெறிப் பாடசாலைக்கென ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் 2011இல் நாள் அடிக்கல்லானது காப்பாளராலும்,அதிபர் மற்றும் சபை உறுப்பினர்களாலும் நாட்டப்பட்டு புதிய கட்டிடம் அமைக்கப்பட்டது.

இந்து சமய கலாசார அலுவல் திணைக்களம் வழங்கிய நிதி 75000/= வாக இருந்தது.ஆனால் மிகுதிப் பெரு நிதியை ஆலய பரிபாலனசபை செலவு செய்து புதிய கட்டடத்தை அமைத்திருந்தது.2013 தைப்பூச நன்னாளில் படம் வைத்து பால் காய்ச்சி இப் புதிய கட்டடம் அதிபர் மற்றும் குருக்கள் பரிபாலன சபையினர் இணைந்து திறந்து வைத்தனர்.தொடர்ந்து வகுப்புகள்,பஜனைகள்,சமய அறிவுப் போட்டிகள்,குருபூசைத் தினங்கள் என்பன விமர்சையாக நடைபெற்று வருகின்றன.

ஆலயத்தின் பரிவார தெய்வங்கள்

தொகு
 
விநாயகர் விக்கிரகம்
 
வள்ளி தெய்வயானை சமேதராய் முருகன் விக்கிரகம்
 
தலவிருட்சத்தில் (பாலை) அம்மன் விக்கிரகம்
 
சண்டேஸ்வரி விக்கிரகம்
 
முனீஸ்வரரும் பரிவாரங்களும்
 
வைரவர் விக்கிரகம்


ஆலய பதிவுகள் சில

தொகு
 
தேர்த்திருவிழா
 
பக்தர்களின் நேர்த்திக்கடன்கள்
 
அம்பாள் சப்பரத்தில் காட்சி
 
அம்பாளிற்கு பச்சை சாத்துதல் (தேர்த்திருவிழா)
 
வசந்தமண்டபக்காட்சி





உசாத்துணை நூல்

தொகு
[4]
  1. "TamilNet: 23.07.10 Kurumpachiddi, Vizhichiddi, Thu'raddaiyiddi". TamilNet. July 23, 2010. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=32283. 
  2. "TamilNet: 03.02.14 Eyp-pan'rik-kaadu". TamilNet. February 3, 2014. https://tamilnet.com/art.html?catid=98&artid=37027. 
  3. "Siddiveram Kannakai Ammman (Official Website)". https://siddiveram.com/. 
  4. சிட்டிவேரம் கண்ணகை அம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர்.