சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு

சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகத்தை தீட்சதர்களிடமிருந்து 1982-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, 1987-ஆம் ஆண்டில் கோயிலை நிர்வகிக்க ஒரு செயல் அலுவல்ரை நியமித்தது. தமிழ்நாடு அரசின் இச்செயலை இரத்து செய்யக் கோரி, தீட்சதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

2006-ஆம் ஆண்டு இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 2009ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் அளித்த தீர்ப்பின்படி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், அறநிலையத்துறை சார்பில், மீண்டும் செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார்.

செயல் அலுவலரின் நியமனத்தை எதிர்த்து, பொது தீட்சிதர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சார்பில் தனித் தனி மனுக்கள், இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இதற்கிடையே பொது தீட்சிதர்கள், இந்து சமய அறநிலைய சட்டம் தங்களுக்குப் பொருந்தாது என்றும், ஏனென்றால் தாங்கள் இந்து சமயத்துக்குள்ளேயே தனியான சைவ சமய உட்பிரிவினர் என்று கூறி ஒரு மேல் முறையீட்ட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. எனவே இது குறித்து முடிவு எடுத்த பின்னரே இறுதித் தீர்ப்பு வழங்க இயலும் எனக்கூறி டிசம்பர் 2013-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்து வைத்தது.[1]

இந்த வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம் 7 சனவரி 2014 அன்று சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகத்தை பொது தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என்றும், அக்கோயிலுக்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை மூலம் நியமித்த செயல் அலுவலர் நியமனம் செல்லாது எனவும் தீர்ப்பு வழங்கியது.[2][3]

இத்தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற அமர்வில் மேல் முறையீடு செய்ததது. சிதம்பரம் நடராசர் கோயிலை தீட்சதர்களே நிர்வாகம் செய்து கொள்ளலாம் என்றும், கோயில் நிர்வாகத்தில் தமிழ்நாடு அரசு தலையீடு செய்யக்கூடாது என 8 ஏப்ரல் 2019 அன்று உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியது.[4]

வழக்கின் வரலாறு

தொகு

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை யார் நடத்துவது என்பது தொடர்பாக 1885ஆம் ஆண்டிலேயே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் தி. முத்துச்சாமி ஐயர் மற்றும் செப்பர்டு, “சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் தனிச் சொத்து என்று சொல்வதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை” என்று கூறியுள்ளனர் ( A.S.Nos.108 and 159 of 1888 Dt 17.3.1890). அதன் பின்னர் 1951-ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் சிதம்பரம் கோயில் தீட்சதர்களின் தனிச் சொத்து அல்ல; பொதுவான கோயில்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

குமாரசாமி ராஜா முதல்வராக இருந்தபோது, கோயிலை அரசின் சட்ட வரம்புக்குள் கொண்டுவருவதற்கு எனப்பிறப்பிக்கப்பட்ட ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் இரத்துசெய்தது. அவருக்குப் பிறகு பொறுப்பேற்ற சக்ரவர்த்தி இராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில், தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அவருக்குப் பிறகு முதல்வரான காமராஜரின் ஆட்சியின் போது, அந்த மேல்முறையீட்டு மனு திரும்பப் பெறப்பட்டது. அதனால் அந்தக் கோயிலின் நிர்வாகம் தீட்சிதர்கள் வசமே தொடர்ந்தது.

எம்.ஜி.ஆர் நடவடிக்கை

தொகு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்றுவந்த பல்வேறு முறைகேடுகள் குறித்துப் புகார்கள் தெரிவிக்கப்பட்டது. அதனால் எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு, சிதம்பரம் கோயிலுக்கு நிர்வாக அதிகாரி ஒருவரை நியமித்தது. அந்த உத்தரவை இரத்து செய்யும்படி தீட்சிதர்கள் கோரியபோது, சென்னை உயர் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. 1997-ல் மு. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, தீட்சிதர்களின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் மீது தீட்சிதர்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுவும் 2006-ல் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் மேல்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதன் மீது 2009 பிப்ரவரியில் தீர்ப்பளித்த நீதிபதி பானுமதி, கோயில் நிர்வாக அதிகாரியை தமிழக அரசு நியமித்தது செல்லும் எனத் தெளிவுபடுத்தியதோடு, நிர்வாக அதிகாரிக்கு ஒத்துழைப்புத் தருமாறு தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால், அந்தத் தீர்ப்பையும் தீட்சிதர்கள் ஏற்காமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனு மீதுதான் இப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

மேற்கோள்கள்

தொகு