சிதம்பர சுவாமிகள்
சிதம்பர சுவாமிகள் என்பவர் சாந்தலிங்க சுவாமிகளின் சீடராவர். இவர் சாந்தலிங்க சுவாமிகள் வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோதவுந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது போன்ற நூல்களுக்கு உரை நூல்களை எழுதியுள்ளார். [1]
இவரை சிதம்பரதேவர் என்றும் அழைக்கின்றனர். மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா, நெஞ்சு விடு தூது, திருப்போரூர்ச் சன்னதிமுறை, பஞ்சாதிகார விளக்கம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவரது சரித்திரம் புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் என்ரவரால் எழுதப்பெற்றுள்ளது. [2]
மேலும் இவர் உபதேச உண்மை, உபதேசக் கட்டளை, திருப்போரூர் சந்நிதி முறை, தோத்திர மாலை, திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம், கிளிப்பாட்டு, குயில்பாட்டு, தாலாட்டு, திருப்பள்ளி எழுச்சி, ஊசல், தூது போன்றவற்றையும் எழுதியுள்ளார். [3]
ஊசல்
சுந்தரமா கந்தொடு மண்டபத்தி னூடே சுரர்தருக்கள் நாற்றிசையு மிருத்தி நாப்பண் முந்திய சாம்பூன தசங்கிலிகள் பூண்ட முதிர்கதிர் வீசுங்குலிசப் பலகை மீது சிந்தைமகிழ்ந் தினிருந்தே யரம்பை மாதர் செங்கரங்கள் கொண்டுசிறப் பொடுநின் றாட்ட தந்திமுகற் கிளையவரே யாடீர் ஊசல் சமரபுரி நாயகரே ஆடீர் ஊசல்.
வடவரையோர் பன்னிரண்டின் முடியின் மீதே மார்த்தாண்டர் பன்னிருவர் உலாவல் போலுஞ் சுடர்மணிவீ சுங்குழைகள் புயங்கள் மீதே தோய்ந்தாட மார்பிலகு மதாணி ஆடக் கடகநிரை அசைந்தாட மகுடம் மின்னக் கமலபதச் சிலம்பொடுகிண் கிணிகள் ஆடத் தடவரைகள் கிடுகிடென மயில்ந டாத்துஞ் சமரபுரி நாயகரே ஆடீர் ஊசல். 2
கங்கைமுடித் தாதையளத்(து) உவகை பூப்பக் கணபதியா கியதமையன் களித்து நோக்கப் புங்கநவ வீரரெனும் இளவ லானோர் புடையின்நின்று பணிகேட்ப இடைவிடாமே’ செங்கண்மா லெனுமாமன் வியந்து போற்றச் செழுமறைமைத் துனன்தரிசித் தங்கை கூப்பத் தங்கமணிச் சிலம்படியென் சென்னி சூட்டுஞ் சமரபுரி நாயகரே ஆடீர் ஊசல். 3
இந்திரன்வேத் திரங்கொடுகட் டியங்கள் கூற இரவிசசி யிருபாலுங் கவரி வீசக் சுந்தரமா மதனுருக்கொண் டடைப்பை யேந்தத் துணையுடனேழ் திசையவரூ ழியங்கள் செய்யக் கந்தருவர் தும்புருநா ரதரும் யாழின் கனஇசையும் மிடற்றிசையுங் கலந்து பாடச் சந்தமுறு புழுகுமண மெங்கும் வீசச் சமரபுரி நாயகரே ஆடீர் ஊசல். 4
நவமேவு பூதகண நாத ராட நாடரிய தேவர்கள்பூ மாரி வீசச் சிவமேவு முனிவரர்பல் லாண்டு கூறத் திகழுரகர் மாணிக்க மாரி தூவப் பவவேலை மூழ்காத அடியர் நாடிப் பரிந்துபர மானந்தக் கடலின் மூழ்கத் தவமேவும் அந்தணர்கள் வேதம் ஓதச் சமரபுரி நாயகரே ஆடீர் ஊசல். 5
இமயமலை தனிற்பிறந்த நற்றாய் வாழ்த்த ஏழிற்சடையிற் குடியிருந்த பெருந்தாய் வாழ்த்தக் கமலமலர் மாமியுளங் களித்து வாழ்த்தக் கலைவாணித் தங்கைபுயம் புகழ்ந்து வாழ்த்த அமரர்புகழ் சசிமுதலாம் அரம்பை மாதர் ஆலத்தி யெடுத்தேத்த அருகில் நின்று சமைவுறுநற் றேவிமா ரிருவர் போற்றச் சமரபுரி நாயகரே ஆடீர் ஊசல். 6
அருணகிரி நாதன்மகிழ்ந் தோது பாடல் அருந்தமிழ்நூல் தெளிந்திடுநக் கீரன் பாடல் இருள்நையமெய் யன்பர்குழாம் இடைந்து பாட இன்னியங்கள் ஐவகையின் சும்மை யார்ப்பக் கருணைபெறும் அரசர்வணி கேசர் மேலாங் காராளர் முதலெவருஞ் சேவை செய்யத் தருணவளம் மாறாத பெருமை மேவுஞ் சமரபுரி நாயகரே ஆடீர் ஊசல். 7
மகளிரினம் மயிலினம்போல் நடனம் ஆட வண்டினங்கள் அவர்குழல் மாலையின்நின் றாடப் புகரறுமெய் யன்பர்இன்ப நடன மாடப் பொன்னுலகோர் மண்ணுலகோர் புகழ்கொண்டாட இகலுறுபொய் அவுணருளம் நளிதிண் டாட இலைவேலின் வலியலகை பாடி யாடத் தகைமைசெறி அளகைநிகர் வளமை மேவுஞ் சமரபுரி நாயகரே ஆடீர் ஊசல். 8
கோழிஎழு தியவிருதும் வேலும் தோகைக் குரகதமும் உடையவரே ஆடீர் ஊசல் ஊழியனற் சினச்சூரன் சேனை எல்லாம் ஒருங்கறுத்த சேவகரே ஆடீர் ஊசல் ஆழியலைத் துயரமெல்லாம் அகற்றி என்னை ஆண்டுகொண்ட தேசிகரே ஆடீர் ஊசல் தாழியளை களவுகொண்டோன் மருக னாரே சமரபுரி நாயகரே ஆமர் ஊசல். 9
பொதியமுனி குருபரரே ஆடீர் ஊசல் புவிவாழ அருள்பவரே ஆடீர் ஊசல் முதியதமிழ் உரைத்தவரே ஆடீர் ஊசல் முத்திஎன் களித்தவரே ஆடீர் ஊசல் அதிகவடி வழகினரே ஆடீர் ஊசல் அகிலமழை நிகர்ப்பவரே ஆடீர் ஊசல் ததையமலர்த் தாரினரே ஆடீர் ஊசல் சமரபுரி நாயகரே ஆடீர் ஊசல்.
10
ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள்.
கருவி நூல்
தொகுஉரையாசிரியர்கள் - மு.வை.அரவிந்தன்