சிதைவு விளைபொருள்

சிதைவு விளைபொருள் (Decay product) என்பது கதிரியக்கச் சிதைவின் இறுதியில் எஞ்சியிருக்கும் ஒரு வேதிப்பொருளைக் குறிக்கிறது. மகள் விளைபொருள், மகள் ஓரிடத்தான், மகள் ஐசோடோப்பு, மகள் நியுக்ளைடு என்ற பெயர்களாலும் இப்பொருள் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் கதிரியக்கச் சிதைவுகள் ஒரு நிரலொழுங்குடன் பல்வேறு படிநிலைகளில் நிகழ்கின்றன. உதாரணமாக, 238U சிதைவுற்று 234Th ஆகவும், பின்னர் இது சிதைவுற்று 234mPa ஆகவும், இது மேலும் சிதைவுற்று நிலைப்புத்தன்மை உடைய 206Pb ஆகவும் மாற்றம் அடைகின்றன.

ஈயம்-212 சிதைவடைந்து ஈயம்-208 ஆக மாற்றமடையும் சிதைவுச் சங்கிலி வினை, இடைநிலை சிதைவு விளை பொருட்களை காட்டுகிறது

இந்த எடுத்துக்காட்டில்,

  • 234Th, 234mPa,…,206Pb என்பவை 238U இன் சிதைவு விளைபொருட்கள்
  • 238U இன் மகள் விளைபொருள் 234Th, ஆகும்
  • 234mPa (234 சிற்றுறுதி) 238U இன் பெயர்த்தி விளைபொருள் ஆகும் [1].

பொதுவாக இவையனைத்தும் 238U இன் மகள் விளைபொருட்கள் என்ற பெயரால் குறிக்கப்படுகின்றன. கதிரியக்கச் சிதைவை புரிந்து கொள்ளவும், கதிரியக்க கழிவுகளை மேலாண்மை செய்யவும் சிதைவு விளைபொருட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஈயத்தைக் காட்டிலும் அதிகமான அணு எண் கொண்ட தனிமங்களின் சிதைவுச் சங்கிலிகள் தாலியம் அல்லது ஈயம் தனிமத்தில் முடிவடைகின்றன.

பல நிகழ்வுகளில் கதிரியக்கச் சங்கிலியின் உறுப்பினர்கள் அசல் நியுக்ளைடை விட அதிகமான கதிரியக்கத்தை வெளிப்படுத்துவனவாக உள்ளன. இதன்படி யுரேனியம் தூய்மையான நிலையில் ஆபத்தில்லாத கதிரியக்கத் தனிமமாக உள்ளது. இயற்கையாகத் தோன்றும் பிட்சுபிளெண்ட்டு போன்ற யுரேனியத் துண்டுகள் அதிகமான கதிரியக்க அபாயம் கொண்டதாக உள்ளது. இதேபோல தோரியமும் புதியதாக தோன்றும் பொழுது சிறிதளவு கதிரியக்க வெளிப்பாடும் சிலமாதங்கள் சேமித்து வைத்த பின்னர் அது அதிகமான கதிரியக்கத்தன்மையும் கொண்டதாக மாறுகிறது.

ஒரு கதிரியக்க பொருளின் அணு எந்த நேரத்தில் சிதைவடையும் என்பதை கணிக்க முடியாது என்றாலும், அக்கதிரியக்க பொருளின் சிதைவு பொருட்களை மிகவும் துல்லியமாக கணிக்க இயலும். இதன் காரணமாக, சிதைவு பொருட்கள் விஞ்ஞானிகளுக்கு மிகமுக்கியமான பொருட்களாக உள்ளன. இதுபோன்ற ஆய்வுகள் மூலம் அவர்கள், மூலப்பொருளின் அளவு வகை முதலானவற்றை அறிந்து கொள்கின்றனர். அணுக்கரு உலைகளைச் சுற்றி உண்டாகும் மாசுக்கேட்டிற்கான அளவை கணக்கிடவும் இவ்வாய்வுகள் அவர்களுக்கு உதவுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Glossary of Volume 7 பரணிடப்பட்டது 2017-01-03 at the வந்தவழி இயந்திரம் (Depleted Uranium — authors: Naomi H. Harley, Ernest C. Foulkes, Lee H. Hilborne, Arlene Hudson, and C. Ross Anthony) of A review of the scientific literature as it pertains to gulf war illnesses.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதைவு_விளைபொருள்&oldid=3367320" இலிருந்து மீள்விக்கப்பட்டது