சித்தலிங்கமடம்
சித்தலிங்கமடம் என்ற ஊர் தமிழ்நாட்டின் வடபகுதியில் விழுப்புரம் மாவட்டத்தில், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமம் ஆகும். இக்கிராமம் தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் விழுப்புரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், திருக்கோயிலூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் திருவெண்ணைநல்லூரில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 191 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1] இவ்வூர் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஊராகும். நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தெருக்களைக் கொண்டுள்ளது. இவ்வூரில் 9 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த வியாக்ரபாதீஸ்வரா் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது
ஊா்பெயர் வரலாறு
தொகுஇந்த ஊா் பழங்காலத்தில் சிற்றிங்கூர் என்று அழைக்கப்பட்டது. பின்னா் அப்பெயா் மருவியது. இது மருத நிலத்தில் அமைந்துள்ளதால் ஊா் என்ற பின்னொட்டு பெற்றிருந்தது. இவ்வூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானானந்தகிரிகளின் மடம் இந்த ஊரின் தற்போதைய பெயருக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.[2]
வியாக்ரபாதீஸ்வரர் கோயிலின் தலவரலாறு
தொகுஔவையார் பாடலுக்கு மகிழ்ந்து, பால், தயிர், நெய் பெருக்கெடுத்து வந்த பெருமையினையுடைய தென்கங்கை, (தக்ஷிணபிநாகினி) என்னும் புகழ்பெறும் தென்பெண்ணையின் தென்கரையில் உள்ள இந்த பிராசீனமான கோயில் பற்றிய குறிப்பு ஸ்காந்த புராணத்தில் காணப்படுகிறது. சுயம்புவாகிய சித்தலிங்கத்தை வழிபட்டுப் புலிப்பாதம் பெற்ற வியாக்கிரபாத முனிவர், இங்கிருந்து தில்லைத் திருத்தலம் எழுந்தருளி, அங்கு பதஞ்சலி முனிவரால் பூஜிக்கப்பட்ட இளமையாக்கியனாரையும் வழிபட்டுப் பேறுபெற்றார். ஆகவே இப்பெருமானுக்குத் திருப்புலிப்பகவனார் என்ற திருநாமமும் உண்டு. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்புகளைப் பெற்றது இத்தலம்.
எழுபதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இந்த கோயிலின் பழம் பெருமையை பறைசாற்றுகின்றன. அவை முதலாம் பராந்தக சோழனின் காலந்தொடங்கி பாண்டியர், பல்லவர், சம்புவராயர், விஜயநகரவேந்தர் ஆகியோரின் ஆட்சி காலங்களில் பொறிக்கப்பெற்றவையாகும். இக்கோயில் கி.பி.918 ஆம் ஆண்டில் தொண்டை மண்டல மன்னர்களால் கட்டி முடிக்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sithalingamadam". http://www.onefivenine.com/india/villages/Villupuram/Thiruvennainallur/Sithalingamadam. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2017.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ "ஞானானந்தகிரி ஸ்வாமி". பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2017.
- ↑ "வியாக்ரபாதீஸ்வரா் கோயிலின் தலவரலாறு". பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2017.