சிமோன் த பொவார்

பிரெஞ்சுப் பெண் எழுத்தாளர் மற்றும் மெய்யியலாளர்
(சிமோன் ட பொவார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


சிமோன் ட பொவார் (Simone de Beauvoir, ஜனவரி 9, 1908ஏப்ரல் 14, 1986) ஒரு பிரெஞ்சுப் பெண் எழுத்தாளரும், மெய்யியலாளரும் ஆவார். மேலும் இவர் இருத்தலியல் தத்துவ அறிஞராகவும் பெண்ணியவாதியாகவும் அரசியல் செயல்பாட்டாளராகவும் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். இவர் புதினங்கள்; மெய்யியல், அரசியல், சமூகப் பிரச்சினைகள் பற்றிய தனிக்கட்டுரைகள், தனி நபர் வரலாறுகள், தன்வரலாறு என்னும் துறைகளில் எழுதியுள்ளார். இப்பொழுது இவர் அவள் தங்குவதற்காக வந்தாள் (She Came to Stay), மாண்டரின்கள் (The Mandarins) போன்ற இவரது மீவியற்பியல் புதினங்களுக்காகவும்; பெண்கள் மீதான அடக்குமுறை, தற்காலப் பெண்ணிய அடிப்படைகள் என்பன குறித்த இரண்டாம் பால் (The Second Sex) என்னும் விரிவான பகுப்பாய்வு நூலுக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார்.

சிமோன் லூசி ஏர்னஸ்டைன் மேரி பேர்ட்ரண்ட் டி பொவார்
காலம்20ஆம்-நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேற்கத்திய மெய்யியல்
பள்ளிஇருத்தலியல்
பெண்ணியம்
முக்கிய ஆர்வங்கள்
அரசியல், பெண்ணியம், நெறிமுறை
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
ethics of ambiguity, feminist ethics, existential feminism

இளமைக்காலம்

தொகு

சிமோன் லூசி ஏர்னஸ்டைன் மேரி பேர்ட்ரண்ட் டி பொவார் என்னும் இயற்பெயர் கொண்ட சிமோன் டி பொவார், ஒரு சட்ட வல்லுனரும், நடிகருமான ஜார்ஜ் டி பொவார் என்பவருக்கும், பிராங்கோய்ஸ் பிராசியர் என்னும் இளம் பெண்ணுக்கும் மகளாகப் பாரிஸ் நகரில் பிறந்தார். இவர் நல்ல பாடசாலைகளில் கல்வி கற்றார். முதலாம் உலகப் போருக்குப் பின்னர், மியூஸ் வங்கியின் தலைவராக இருந்த இவரது தாய்வழிப் பாட்டனான குஸ்தாவ் பிரேசியர் வங்குரோத்து ஆனார். இதனால் முழுக் குடும்பமும் பிறரின் பழிப்புக்கு ஆளானதுடன் வறுமை நிலைக்கும் தள்ளப்பட்டது. இவர்கள் ஒரு சிறிய வீட்டுக்குக் குடிபுக வேண்டியதாயிற்று.

இரண்டு பெண்பிள்ளைகளைப் பெற்றிருந்த சிமோனின் தந்தையார் ஆண்பிள்ளைகளை விரும்பியிருந்தார். எனினும், சிமோன் "ஆண்பிள்ளைகளுக்கு உரிய மூளை"யைப் பெற்றிருப்பதாகக் கூறிவந்தார். இளம் வயதிலிருந்தே சிமோன் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தார். ஜார்ஜ் தனக்கு நாடகம், இலக்கியம் போன்றவற்றில் இருந்த ஆர்வத்தைத் தனது மகளிடத்திலும் உருவாக்கினார். கல்வியறிவின் மூலமே தனது மகள்கள் வறுமையில் இருந்து மீள முடியும் என அவர் நம்பினார்.

15 ஆவது வயதிலேயே தான் ஒரு எழுத்தாளர் ஆக வேண்டும் என சிமோன் முடிவெடுத்துவிட்டார். இவர் பல பாடங்களிலும் சிறந்து விளங்கினாலும், மெய்யியலின் பால் பெரிதும் கவரப்பட்டு, அதனைக் கற்பதற்காக பாரிஸ் பல்கலைக்கழகம் சென்றார். அங்கே அவர் இழான் பவுல் சார்த்ர உட்படப் பல அறிவுத்துறை சார்ந்தோரைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார்.

கல்வி

தொகு

பொவார், தம் தந்தையின் ஊக்கம் காரணமாக, அறிவுக் கூர்மை மிக்கவராகத் திகழ்ந்தார். சிமோன் ஒரு மனிதனைப் போல் தன்னைக் கருதிக் கொள்கின்றாள் என்று அவரது தந்தை பெருமைப்படக் கூறுவார். குடும்பத்தில் காணப்படும் நெருக்கடியான சூழ்நிலைகளினால், தனக்கான வரதட்சணையினை அடைவதற்கு தன் வயதையொத்த ஏனைய மத்தியதர வர்க்கப் பெண்களைப் போல் காத்திருக்க விரும்பாததால், திருமண வாய்ப்புகள் சிக்கலில் அமைந்தன. பொவார் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். தனக்குப் பிடித்த செயல்களைச் செய்வதில் அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக, தன் வாழ்க்கைக்குரிய பொருளை ஈட்டுவதில் முனைப்புக் காட்டினார்.

கி. பி. 1925 இல் கணிதம் மற்றும் தத்துவம் ஆகியவற்றின் இளங்கலைத் தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றார். அதன்பிறகு, பிரான்சில் உள்ள கத்தோலிக்க த பாரீசு மற்றும் செயின்ட் மேரி கல்வி நிறுவனங்களில் முறையே கணிதம் மற்றும் இலக்கியம்/ மொழியியல் உள்ளிட்டப் பாடங்களைப் பயின்றார். மேலும், பாரீசு பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்தார். 1928 ஆம் ஆண்டு தன பட்டப்படிப்பை முடித்தபின், முதுகலைப் பட்டப்படிப்பிற்கு இணையான லேய்ப்னிசின் கருத்து குறித்து ஓர் ஆய்வறிக்கையைச் சமர்பித்தார். சொபொனில் (Sorbonne) உள்ள பாரீசு பல்கலைகழகமானது, பொவார் பயின்ற அண்மைக்காலத்தில்தான் பெண்களுக்கு உயர்கல்வியினை வழங்கியிருந்தது. அங்குப் பட்டம்பெற்ற ஒன்பதாவது நபராகப் பொவார் இருந்தார்.

சிமோன் த பொவார் முதன்முதலாக, மாரிஸ் மெர்லியோ போன்தி (Maurice Merleau-Ponty), கிளாத் லெவி ஸ்ட்ராஸ் (Claude Lévi-Strauss) ஆகியோருடன் பணிபுரிந்தார். அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துகொள்ளாது போனாலும், அவர் தத்துவத்திலுள்ள விவசாயப் பாடத்திட்டங்களான எகோல் நார்மலே சுபீரியர் (École Normale Supérieure) பற்றி எடுத்துரைக்கலானார். அப்பாடத்திட்டம், உயர் முதுகலைப் பட்டப்படிப்பிற்குரிய தேர்வு தேசிய தரவரிசை மாணவர்களுக்கு உறுதுணையாக விளங்கியது. 1929 முதற்கொண்டு 1943 வரை இவர் லீசி எனும் உயர்நிலைப் பள்ளியில் கற்பித்தல் பணியை மேற்கொண்டுவந்தார்.

மத்திய கால வாழ்க்கை

தொகு

அக்டோபர் 1929 இல், ஜீன் பால் சார்த் (Jean-Paul Sartre) என்பவர், பொவாரது தந்தையைச் சந்தித்து, அவரைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தை வெளிப்படுத்தினார். பின், இருவரும் தம்பதியராகக் காணப்பட்டனர். ஒருநாள் பாரீசின் முதன்மையான அருங்காட்சியகமான லோவ்ரி (Louvre) யின் வெளிப்புற இருக்கையில் இருவரும் அமர்ந்திருந்தனர். அப்போது, பால் சார்த் பொவாரிடம், இரண்டாண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமாய் பணித்தார். அவருடைய திருமண வாழ்க்கை முடியும் தருவாயில் இருந்தது. அப்போது அவர், திருமண வாழ்க்கை இனி சாத்தியமில்லை; ஏனெனில், என்னிடம் கொடுக்க வரதட்சணை இல்லை என்று கூறினார். ஆனாலும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் நட்புக் கொண்டிருந்தனர். அதன்பின், அவர் திருமணம் பற்றிய எண்ணத்தைக் கைவிட்டார். மேலும், சார்த்துடன் இணைந்து வாழும் போக்கையும் நிராகரித்தார். பொவாருக்குக் குழந்தைகள் கிடையாது. இதன்காரணமாக, அவர் மேம்பட்ட கல்விப் பட்டப்படிப்புகள் பெற முடிந்தது. மேலும், அரசியல் அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொளளவும், பயணம் மேற்கொண்டிடவும், எழுத்துப்பணியில் உழைத்திடவும், கற்பித்தலைத் தொடர்ந்திடவும் அவருக்குப் போதிய நேரமிருந்தது. இதுதவிர, ஆண், பெண் இருபாலரின் அன்பைப் பெற முடிந்தது. அதோடுமட்டுமின்றி, அவர்களுடன் அடிக்கடி கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பிருந்தது.

சார்த் மற்றும் பொவார் இருவரும் மற்றவரின் படைப்புகள் குறித்து எப்பொழுதும் வாசித்து வந்தனர். சார்த்தின் இருப்பும் இன்மையும் (Being and Nothingness), பொவாரின் அவள் வசிக்க வந்தாள் (She Came to Stay), தொடர்பின்மை ஆய்வும் குறிக்கோளும் (Phenomenology and Intent) ஆகிய இருத்தலியல் படைப்புகள் குறித்து ஒருவருக்கொருவர் விவாதம் மேற்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இருப்பினும், சார்த்தின் தாக்கத்தைத் தாண்டி, எகல் மற்றும் லேபினீசு (Hegel and Leibniz) ஆகியோரின் தாக்கங்களை உள்ளடக்கியதாக பொவாரின் அண்மையப் படைப்புகள் இருந்தன. 1930 களில் நவீன எகலிய மறுமலர்ச்சிக்கு அலெக்சாண்டர் கோவே மற்றும் ஜீன் ஹிப்போலிட் (Alexandre Kojève and Jean Hyppolite) ஆகியோர் தலைமையேற்றனர். இது ஒட்டுமொத்த பிரெஞ்சு சிந்தனையாளர்களிடையே பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியது. பொவார் மற்றும் சார்த் ஆகியோரையும் இது விட்டுவைக்கவில்லை. எகலின் ஆன்மவியல் கோட்பாடுகளை (Hegel's Phenomenology of Spirit) இருவரும் அறியத் தலைப்பட்டனர்.

இரண்டாம் பாலினம்

தொகு

சிமோன் த பொவார் கி. பி. 1949 இல் இரண்டாம் பாலினம் (The Second Sex) என்னும் நூலை எழுதி வெளியிட்டார்.[1] இந்நூலில், இவர் பெண் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறாள், என்று கூறியுள்ளார். இந்த நூலை முன்னோடியாகக் கொண்டு, பெண்ணியம் என்னும் கருத்தியலானது, ஓர் அறிவுசார் கோட்பாடாகவும் செயல்பாடுகளுக்கான கருவியாகவும் மாற்றம் பெற்றது.[2] மேலும், இந்நூல் பெண் விடுதலைக்கான அடிப்படை சாசனமாகத் திகழ்ந்து வருகிறது.[3] தாய், மனைவி என்னும் நிலைப்பாடுகள் மூலமாக குடும்பம் அமைப்பு எவ்வாறு பெண்ணைக் கட்டுப்படுத்துவனவாக உள்ளன என்பது பற்றி பொவார் இதில் குறிப்பிட்டுள்ளார்.[4]

ஹார்னியின் விமர்சனம்

தொகு

சிக்மண்ட் பிராய்டின் கருத்துக்களை எதிர்க்கும் பெண்ணியத் திறனாய்வாளர்களுள் குறிப்பிடத்தக்கவராக கேரன் ஹார்னி உள்ளார். ஆணுறுப்பு குறித்து சிறுமிகளுக்குள்ள பொறாமை என்கிற கருத்தாக்கமானது அபத்தமானதாகும் என்கிறார். சிறுமிகள் தாங்கள் பெண்கள் என்பதனைத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர். மேலும், தங்களுடைய பாலுறுப்புகளைப் பற்றிய தெளிவும் கொண்டுள்ளனர். சிறுவர்களுக்குரிய ஆணுறுப்பின்மீது உருவாகும் ஆர்வமானது பொறாமையினால் ஏற்படுவதல்ல. மாறாக, ஆணைப்போல், தந்தையைப்போல் இருக்க முடியாது என்பதாலும், தந்தையர்கள் வெளிக்காட்டும் பாரபட்சத்தினாலும், பெண்ணாக இருப்பதால் ஏற்படும் இழப்புகளாலும் பெந்தன்மையிளிருந்து அவர்கள் விடுபட முயல்கின்றனர். அதேபோல், சிறுவர்களும் தம்மை வேறாட்களாக உணர்வதும் நிகழ்கிறது. கருப்பைக் குறித்த சிறுவர்களின் பொறாமையானது பெண் மட்டுமே உயிரை உருவாக்கிட முடியும் என்பதன் அடிப்படையில் உருவாவதாகும்.[5] பெண் குழந்தை, தன்னை முழுமையானவளாக உணர சாத்தியம் உண்டு எனக் கூறும் ஹார்னி மற்றும் ஏனைய பெண் உளவியல் அறிஞர்களின் கருத்தைப் பொவார் முழுதாக அங்கீகரிக்கின்றார். தவிர, சிறுமி ஒருத்தியின் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மைக்கு அடித்தளமாக, சமுதாய இடமும் பாத்திரமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று எடுத்துரைத்துள்ளார்.[6]

பெண்ணியம் குறித்த கருத்துகள்

தொகு

1976 இல் ஜான் ஜெராசி (John Gerassi) உடனான நேர்காணலின்போது, பெண்ணிய இயக்கமானது கருத்து நிலையிலிருந்து செயல் வடிவிற்கு மாற்றம் பெற்றுள்ளது என்றும், பெண்ணியச் செயல்பாடுகளுக்கான வலுவான எதிர்ப்புகள் நீங்கி, ஏற்றுக்கொள்ளத்தக்க நிலைகளில், அவற்றின் தீவிரத்தன்மைகள் குறைந்து ஒழுங்கமைதி ஏற்பட்டுள்ளது என்றும், பெண்ணியப் படைப்புக்களில் இத்தகைய மாற்றத்தைக் காண முடியும் என்றும் பொவார் தெரிவித்துள்ளார்.[7]

இறுதிக்காலம்

தொகு

1976 இல் சிமோன் த பொவாரும் சில்வே லீ பானும் (Sylvie Le Bon) அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கிப் பயணித்தனர். அங்கு, கேத் மில்லட்டை (Kate Millett) அவருடைய பண்ணையில் சந்தித்தனர். 1981 இல் பொவார் சார்த்திற்கு பிரியாவிடை ( A Farewell to Sartre ) என்னும் நூலைப் படைத்தார். இந்த நூல் சார்த்தரின் உடனான இறுதிக்கால வலிகளை எடுத்துரைப்பதாக அமைந்திருந்தது. இந்நூலின் முகவுரையில், சார்த் வாசிக்கவியலாது வெளிவந்திருக்கும் என்னுடைய குறிப்பிடத்தக்க முழுத் தொகுப்பு இதுவாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். 1984 ஆம் ஆண்டு அனைத்துலக மகளிர் இயக்கம் (The International Women's Movement Anthology) சார்பில் ராபின் மார்கனை (Robin Morgan) ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட உலகளாவிய சகோதரித்துவம் (Sisterhood Is Global) என்னும் தொகுப்பில், பெண்ணியம் - உயிர்ப்புள்ள, சிறந்த, நிலைத்த ஆபத்து (Feminism - alive, well, and in constant danger) என்கிற புகழ்பெற்ற கட்டுரையை இவர் வழங்கியிருந்தார். 1980 இல் சார்த்தர் மறைவுக்குப்பின், அவருடைய கடிதங்களைப் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, பொவார் திருத்தம் செய்து வெளியிட்டார். இவர் தம் எழுபத்தெட்டாவது அகவையில் நிமோனியா நோய்க் காரணமாக பாரீசில் உயிர்நீத்தார். இவரது கல்லறையானது பாரீசில் மொன்பர்னாஸ் (Montparnasse Cemetery in Paris) இடுகாட்டில் சார்த்தரின் கல்லறைக்கு அருகில் அமைந்துள்ளது.

மேற்கோள்

தொகு
  1. முனைவர் தி. கமலி, பெண்ணியப் படைப்பிலக்கியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 113, ப. 182.
  2. http://webcache.googleusercontent.com/search?q=cache:http://www.tamilvu.org/courses/diploma/d071/d0714/html/d0714441.htm&gws_rd=cr&ei=zr9gWbutBMWm0ASy0bbYCA
  3. http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=1534&id1=77&issue=20140614
  4. http://andhimazhai.com/news/view/seo-title-10941.html
  5. வ.கீதா & கிறிஷ்டி சுபத்ரா, பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும், பாரதி புத்தகாலயம், சென்னை-18, 2009, பக். 102- 103.
  6. வ.கீதா & கிறிஷ்டி சுபத்ரா, பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும், பாரதி புத்தகாலயம், சென்னை-18, 2009, ப. 103.
  7. முனைவர் தி. கமலி, பெண்ணியப் படைப்பிலக்கியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை- 113, 2006, ப. 182.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமோன்_த_பொவார்&oldid=3661566" இலிருந்து மீள்விக்கப்பட்டது