சிம்லா மாநாடு

சிம்லா மாநாடு (Simla conference) என்பது 1945ல் பிரித்தானிய இந்தியாவில் நடைபெற்ற ஒரு அரசியல் மாநாடு மற்றும் பேச்சுவார்த்தை நிகழ்வு. சிம்லா நகரில் இந்தியாவின் வைசுராய் ஆர்ச்சிபால்ட் வேவல் கூட்டிய இந்த மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் முசுலிம் லீக் கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கு கொண்டனர். பிரிட்டனின் நேரடி ஆட்சியின் கீழிருந்த இந்தியாவுக்கு சுயாட்சி வழங்குவது, முசுலிம்களுக்கு சட்டமன்றங்களில் தனியே பிரதிநிதித்துவம் வழங்குவது, இந்து முசுலிம் ஆகியோருள் ஒரு மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள மாகாணங்களில் சிறுபான்மை மதத்தினரின் உரிமைகளை பாதுகாப்பது குறித்தான பேச்சுவார்த்தைகள் இம்மாநாட்டில் நடைபெற்றன.

சிம்லாவில் கான் அப்துல் கஃப்ஃபார் கான், நேரு மற்றும் வல்லபாய் படேல் (1946)
சிம்லா மாநாட்டில் ராஜேந்திர பிரசாத், ஜின்னா, ராஜாஜி and அபுல் கலாம் ஆசாத்

1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தொடக்கத்தால் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கும் இந்திய விடுதலை இயக்கத்தினருக்கும் இடையே ஏற்பட்டிருந்த பிணக்கு இம்மாநாட்டால் சிறிது சரியானது. விரைவில் இந்தியாவிற்கு சுயாட்சி / விடுதலை வழங்கப்படும் என்றும் இதனால் காங்கிரசு கட்சி அரசுடன் ஒத்துழையாமைக் கொள்கையினைக் கைவிட்டு மீண்டும் தேர்தல்களில் போட்டியிட்டு நாட்டின் நிருவாகத்தில் பங்கேற்கவும் முடிவானது. அடுத்த ஆண்டு (1946) மாகாண சட்டமன்றங்களுக்கும் நடுவண் நாடாளுமன்றத்துக்கும் புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆனால் காங்கிரசு முசுலிம் உறுப்பினர்களை தேர்வு செய்வது குறித்து முசுலிம் லீகின் தலைவர் முகமது அலி ஜின்னாவுக்கு இணக்கமில்லை. காங்கிரசு கட்சியுள்ளும் ஜின்னாவின் முசுலிம் பிரிவினைவாதக் கோரிக்கையை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்று கருத்து வேறுபாடுகள் நிலவின. 1946ல் தேர்தல்கள் முடிந்து புதிய அரசுகள் பதவியேற்ற பின்னர் மீண்டுமொரு முறை சிம்லாவில் அனைத்து தரப்பினரும் கூடி எத்தகு சுயாட்சி/அரசியல் முறையினை அமைப்பது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால் ஓராண்டு கழித்து இந்தியா சமய அடிப்படையில் பிரிவினை செய்யப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்லா_மாநாடு&oldid=3093452" இலிருந்து மீள்விக்கப்பட்டது