சிறப்புப் பெயரகராதி

சிறப்புப் பெயரகராதி என்பது தமிழ் சிறப்புப் பெயர்களுக்கான அகராதி ஆகும். இதை கருப்பகிளர் சு. அ. இராமசாமிப் புலவர் அவர்கள் ஆக்கி உள்ளார். இது சிறப்புப் பெயர் பற்றிய துறை அகராதி என்பதால், இதில் இடம்பெறும் பெயர்கள் பலவற்றுக்கான விரிவான பொருள்கள் தரப்பட்டுள்ளன. நூலாசிரிரயர் சங்க இலக்கியம் முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு நூல்கள் வரை ஆழ்ந்து படித்து இந்த அகராதியை உருவாக்கியிருக்கிறார்.[1]

சிறப்புப் பெயரகராதி
நூல் பெயர்:சிறப்புப் பெயரகராதி
ஆசிரியர்(கள்):சு. அ. இராமசாமிப் புலவர்
வகை:பெயரகராதி
துறை:தமிழ் சிறப்புப் பெயர் களஞ்சியம்
காலம்:1970
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பதிப்பகர்:சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
பதிப்பு:முதற் பதிப்பு
ஆக்க அனுமதி:சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

நூல் வரலாறு

தொகு

இச்சிறப்புப் பெயரகராதிக்கு முன்னோடியாக, 1902 இல் யாழ்ப்பாணம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை சிறப்புச் சொற்களைத் திரட்டி அபிதானகோசம் என்ற அகராதி ஒன்றை வெளியிட்டுள்ளார். 1908 இல் ஈக்காடு இரத்தினவேலு முதலியார் சிறப்புப் பெயர் அகராதி என்ற ஒன்றை வெளியிட்டுள்ளார். 1910 இல் ஆ. சிங்காரவேலு முதலியார் அபிதான சிந்தாமணியை வெளியிட்டார். இந்த நூல்களின் தொடர்ச்சியாகவே இந்த சிறப்புப் பெயகராதியும் வெளிவருகிறது. 1970 இல் இந்த அகராதியின் முதல் பதிப்பு வெளிவந்தது. இதன் வெளியீட்டுக்கு இந்திய ஒன்றிய அரசு பொருளுதவி செய்திருக்கிறது. ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் கழித்து 2018 இல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இந்த சிறப்புப் பெயரகராதியை அப்படியே வருடிப் (Scanned) இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளது.[1]

உள்ளடக்கம்

தொகு

இதில் காலத்துக்கேற்பப் பல்வேறு மாற்றங்களை செய்து விரிவான அகராதியாக உருவாக்கி சங்கப் புலவர்கள், சங்க கால அரசர்கள், சங்க கால ஊர்கள், நீதி நூல்கள், காப்பிய மாந்தர்கள், பக்தி இலக்கியங்கள், புராணங்கள், சமய நூல்கள், பிற்கால அரசர்கள், சிற்றிலக்கியங்கள், இடங்களின் காரணப் பெயர்கள், தல வரலாறு, சித்தர்கள், பிற்கால இலக்கிய நூல்கள், இலக்கண நூல்கள், நாட்டுப்புறவியல் என்று இந்த அகராதியின் எல்லை மிகப் பெரியதாக உள்ளது. பழைய பெயர்கள் மட்டுமன்றி, காந்தியடிகள், கால்டுவெல், ஏரிகாத்த பெருமாள், எவரெஸ்ட் சிகரம் போன்றவற்றை பற்றியும் எழுதியிருக்கிறார். விரிவான இந்த நூலின் பிற்சேர்க்கையாக மட்டுமே நூறு பக்கங்களைச் சேர்த்திருக்கிறார். இது கலைக்களஞ்சியத்துக்கு இணையான அகராதியாகவே விளங்குகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "நூல் வெளி: பெயர்களுக்குப் பின்னிருக்கும் வரலாறு!, சுப்பிரமணி இரமேஷ்". இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறப்புப்_பெயரகராதி&oldid=3011324" இலிருந்து மீள்விக்கப்பட்டது