சிறிய தெரு (ஓவியம்)

சிறிய தெரு (The Little Street) என்பது, நெதர்லாந்தைச் சேர்ந்த ஓவியரான ஜொஹான்னெஸ் வெர்மீர் என்பவரால், 1657-1658 காலப் பகுதியில் வரையப்பட்டது. இது ஆம்ஸ்டர்டாமில் உள்ள, ரிஜ்க்ஸ்மியூசியம் எனப்படும் அருங்காட்சியகத்தில் உள்ளது. ஆரம்பத்தில் இதில் ஒரு வீடு மட்டுமே இடம்பெற்றிருப்பதாகக் கருதப்பட்டாலும், இதில் இரண்டு வீடுகள் காணப்படுகின்றன.

சிறிய தெரு
ஜொஹான்னெஸ் வெர்மீர், 1657-1658
கான்வஸில் எண்ணெய் வண்ணம்
54,3 × 44 cm
ரிஜ்க்ஸ்மியூசியம், ஆம்ஸ்டர்டாம்

இது மிகவும் எளிமையானதும், எவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டதுமான ஓவியமாகும். இது, அக்காலத்தில் காணப்பட்ட டச்சு வாழ்க்கையின் பொதுவான அம்சங்களைப் பார்ப்பவர்களுக்கு எடுத்துக்கூறுகின்றது. ஒரு வாழ்விடம் அங்கே வாழ்பவர்களுக்கு மறைப்பையும், பாதுகாப்பையும் வழங்குகிறது. ஆனால் இவற்றின் முகப்புக்கள், இவர்களுடைய நெருக்கமான இருப்பின் வெளிப்புறத்தை மட்டுமே வெளிக்காட்டுகின்றன. இந்த எளிமையை, ஓவியர், ஒரு மதிப்பு மிக்க, அமைதியான தெரு மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இவரது சமகாலத்தவர்களான, டி ஹூச் (de Hooch), ஜான் ஸ்டீன் (Jan Steen) போன்றோரும் செங்கல், சாந்து போன்றவற்றை வரைந்துள்ளனராயினும், அவர்கள் அவற்றைக் கையாண்ட விதம், மேலோட்டமான தோற்றத்தில் மட்டுமே வேர்மீருக்கு நெருங்கி வர முடிந்தது. வேர்மீர், தனது ஓவியங்களில் வெளிப்படுத்திய அமைதியான பீடு (கம்பீரம்) மற்றும் பரஸ்பர நெருக்கம் சார்ந்த உணர்வு என்பவை, ஏனையவர்களின் மேலோட்டமான முயற்சிகளைக் கடந்து, அவரது நோக்கங்களைத் தத்துவத்தின் எல்லைகளுக்குள் உயர்த்தியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_தெரு_(ஓவியம்)&oldid=1548534" இலிருந்து மீள்விக்கப்பட்டது