சிற்றூர் அரசுக்கல்லூரி

சித்தூர் அரசுக்கல்லூரி இந்திய மாநிலமான கேரளத்தில் உள்ள பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்ற இக்கல்லூரி, கேரள அரசின் கல்லூரிக்கல்வி இயக்ககத்தின் கீழ் சிறப்புநிலைக் கல்லூரி என்னும் சிறப்பினையும் பெற்றுள்ளது.[1][2][3]

படிப்புகள்

தொகு

கலை, அறிவியல், வணிகவியல் பிரிவுகளில் இளங்கலை, முதுகலைப் படிப்புகள் இக்கல்லூரியில் உள்ளன.

தமிழ், மலையாளம், பொருளியல், வரலாறு, தத்துவவியல் (மெய்யியல்), இசையியல் ஆகிய கலைப்பிரிவுத்துறைகளிலும் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், மின்னணுவியல், புவியியல் ஆகிய அறிவியல் பிரிவுத்துறைகளிலும் வணிகவியல் துறையிலும் இளங்கலைப்பட்டப்படிப்பு உள்ளது.

தமிழ், பொருளியல், தத்துவவியல் (மெய்யியல்), இசையியல் ஆகிய கலைப்பிரிவுத்துறைகளிலும் கணிதம், புவியியல் ஆகிய அறிவியல் பிரிவுத்துறைகளிலும் வணிகவியல் துறையிலும் முதுகலைப் பட்டப்படிப்பு உள்ளது.

தமிழ், கணிதம், தத்துவவியல், இசையியல் ஆகிய துறைகளில் முனைவர்ப்பட்டப்பிரிவு செயல்படுகிறது.

2018 முதல் தமிழ், கணிதம் ஆகிய துறைகளின் கீழ் ஆய்வியல் நிறைஞர்ப்பட்டப்பிரிவும் அறிவிக்கப்பட்டுள்ளது.    

ஒரு கல்வியாண்டில் ஏறக்குறைய 1400 மாணவர்கள் இக்கல்லூரியில் பயில்கின்றனர்.

தமிழ், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை இரண்டாம் மொழியாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் வாய்ப்பு உள்ளது.

வரலாறு

தொகு

1947 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் பதினொன்றாம் நாள் அதாவது, இந்திய சுதந்திரத்திற்கு நான்கு நாள் முன்பாக நிறுவப்பட்ட கல்லூரி ஆகும். 1954 முதல் சோகநாசினி என்றழைக்கப்படும் சித்தூர்ப்புழை ஆற்றின் கரையில் உள்ள தற்போதைய வளாகத்தில் செயல்பட்டுவருகிறது.

திரையிசைப் பாடகர்கள் (மறைந்த) சொர்ணலதா, கிருஷ்ண சந்திரன்,  தமிழ்த்திறனாய்வாளர்கள் (மறைந்த) ராஜமார்த்தாண்டன், அ. கா. பெருமாள், வேதசகாயகுமார், தலமரங்கள் நூலாசிரியர் (மறைந்த) சுந்தரசோபிதராஜ், கண்ணதாசன் ஆய்வாளர் பாலு ஆகியோர் இக்கல்லூரியில் பயின்ற மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இடம்

தொகு

பாலக்காடு நகரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் சித்தூர் தத்தமங்கலம் நகராட்சியில் சோகநாசினி என்றழைக்கப்படும் சித்தூர்ப்புழை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

கோயமுத்தூர் – கொல்லங்கோடு, கோயமுத்தூர் – புதுநகரம், கோயமுத்தூர் – தத்தமங்கலம் பேருந்து வழித்தடத்திலும் பொள்ளாச்சி – கொழிஞ்சாம்பாறை – பாலக்காடு பேருந்து வழித்தடத்திலும் அமைந்துள்ள இக்கல்லூரி பாலக்காடு மாவட்டத்தின் உட்பகுதிகளில் இருந்து பேருந்துத் தடங்களால் இணைக்ககப்பட்டுள்ளது.

இலக்குமொழி

தொகு

“பெரியோர் வழியே நல்வழி” என்னும் பொருள்படும் महाजनो येन गत : स पन्था என்னும் இந்திமொழி வாசகத்தினைத் தன் இலக்குமொழியாகக் கொண்டு இக்கல்லூரி இயங்குகிறது.

துறைகள்

தொகு

தமிழ், மலையாளம், பொருளியல், வரலாறு, தத்துவவியல் (மெய்யியல்), இசையியல் ஆகிய கலைப்பிரிவுத்துறைகளும் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், மின்னணுவியல், புவியியல் ஆகிய அறிவியல் பிரிவுத்துறைகளும் வணிகவியல் துறையும் ஆக பதினான்கு துறைகள் முதன்மைத்துறைகளாக இயங்குகின்றன.

இந்தித்துறை, சமஸ்கிருதத்துறை, விளையாட்டுத்துறை ஆகியனவும் இயங்குகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Government College, Chittur: Admission 2021, Courses, Fee, Cutoff, Ranking, Placements & Scholarship".
  2. "Government".
  3. http://61.0.248.125/dcekerala/chitturcollege/history/ [தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்றூர்_அரசுக்கல்லூரி&oldid=4098899" இலிருந்து மீள்விக்கப்பட்டது