சிலப்பதிகாரத்தில் தமிழிசை

சிலப்பதிகாரத்தில் தமிழிசை பற்றி விரிவான விளக்கங்கள் உள்ளன. தமிழிசையின் பல்வேறு கூறுகளுக்கு இது இலக்கணம் தருகிறது. சிலப்பதிகாரத்தின் அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லாருரையும் மேலும் பல பயனுள்ள குறிப்புக்களைத் தருகின்றன.

அரங்கேற்று காதையில் பண், திறம், தூக்கு ஆகியன குறித்தும் ஏழு சுரங்கள் குறித்தும் பாடலாசிரியன், யாழாசிரியன், குழலாசிரியன் மற்றும் தண்ணுமை ஆசிரியன் ஆகியோரின் இலக்கணங்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

கானல் வரி, வேட்டுவ வரி ஆகியவற்றில் நாட்டுப்புற இசை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

“மகரத்தி னொற்றாற் சுருதி விரவும்

பகருங் குறில்நெடில் பாரித்து - நிகரிலாத்

தென்னாதெனா வென்று பாடுவரேல் ஆளத்தி

மன்னாவிச் சொல்லின் வகை”

எனும் அடியார்க்கு நல்லார் உரையில் வரும் மேற்கோள் மூலம் “இம்ம்” என்று மூலாதாரத்திலிருந்து இசையை எழுப்பும் வழக்கம் அன்றிலிருந்து மாறாமல் வழங்கி வருதலை அறிய முடிகிறது.