சிலிக்கோன்

சிலிக்கோன்கள் (Silicones) பாலிசிலாக்சேன்கள் எனவும் அழைக்கப்படும் பலபடிகளாகும்.இவை மீண்டும் மீண்டும் இடம் பெறும் சிலாக்சேன் அலகுகளால் ஆன பலபடி ஆகும். சிலாக்சேனானது அடுத்தடுத்த சிலிக்கான் மற்றும் ஆக்சிசன் அணுக்களால் ஆன சங்கிலித் தொடரானது கார்பன், நீரியம், மற்றும் சில நேரங்களில் இதர தனிமங்களுடன் இணைந்தும் காணப்படும். இவை வெப்பத்தைத் தாங்க வல்ல திரவ நிலையிலோ அல்லது இரப்பர் போன்றோ காணப்படும் சேர்மங்களாகும். இவை ஒட்டும் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உயவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், வெப்ப மற்றும் மின் கடத்தாப் பொருட்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. சில் பொதுவான வகைப்பாடுகள் சிலிக்கோன் எண்ணெய், சிலிக்கோன் மசகு, சிலிக்கோன் இரப்பர், சிலிக்கோன் பிசின் மற்றும் சிலிக்கோன் சக்கை ஆகியவை ஆகும்.[1]

சிலிக்கோன் சக்கையானது நீர் மற்றும் காற்றுக் கசிவிற்கான அடிப்பைடயான அடைப்புப் பொருளாக பயன்படுத்தப்படலாம்

வேதியியல் தொகு

 
சிலிக்கோன் பாலிடைமெதில்சிலாக்சேனின் வேதியியல் அமைப்பு (PDMS).

மிகத்துல்லியமாகச் சொல்வதெனறால் பலபடியாக்கப்பட்ட சிலாக்சேன்கள் அல்லது பாலிசிலாக்சேன்கள், சிலிக்கோன்கள் ஒரு கனிம சிலிக்கான் ஆக்சிசன் முக்கியச் சங்கிலியுடன் (⋯-Si-O-Si-O-Si-O-⋯) கரிம பக்கத் தொகுதிகள் சிலிக்கான் அணுக்களுடன் இணைந்த சேர்மங்களாகும். இத்தகைய சிலிக்கான் அணுக்கள் நான்கு இணைதிறனைக் கொண்டவையாகும். ஆகவே, சிலிக்கோன்கள் கனிம-கரிம ஒற்றை மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டவையாகும். சிலிக்கோன்கள்  பின்வரும் பொதுவான வேதியியல் வாய்ப்பாட்டைக் கொண்டுள்ளன. [R2SiO]n, இவ்வாய்ப்பாட்டில் R ஒரு கரிம அல்கைல் (மெதில், எதில் போன்ற) தொகுதியாகவோ அல்லது பினைல் தொகுதியாகவோ இருக்கலாம்.

சில நேர்வுகளில், கரிம பக்கத் தொகுதிகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட -Si-O- முக்கியச்சங்கிலிகளை ஒன்றாக இணைக்கப் பயன்படுகிறது. -Si-O- தொடரின் நீளம், பக்கத் தொகுதிகள், மற்றும் குறுக்கு இணைப்புகள் ஆகியவற்றை வேறுபடுத்துவதன் மூலம் வேறுபட்ட பண்புகள் மற்றும் இயைபுகள் உள்ள சிலிக்கோன்கள் தொகுக்கப்படலாம். இவை திண்மையில் திரவத்திலிருந்து திட நிலை வரைக்கும், இரப்பர் முதல் கடின நெகிழி வரை வேறுபடலாம். மிகவும் பொதுவான சிலாக்சேனானது பாலிடைமெதில்சிலாக்சேன் நேரோடியான பாலிடைமெதில்சிலாக்சேன் (PDMS), ஒரு சிலிக்கோன் எண்ணெய் ஆகும். சிலிக்கோன் பிசின்களை அடிப்படையாகக் கொண்டவை இரண்டாவது பெரிய சிலிக்கோன் தொகுதியைச் சார்ந்தவையாகும். இவை கிளைகளுள்ள கூண்டு போன்ற ஓலிகோசிலாக்சேன்களால் உருவாக்கப்படுகின்றன.

கலைச்சொல் தொகுதி மற்றும் வரலாறு தொகு

பி.எஸ். கிப்பிங் 1901 ஆம் ஆண்டில் பாலிடைபினைல் சிலாக்சேன் Ph2SiO (Ph பினைல் தொகுதியைக் குறிக்கிறது C6H5), கீட்டோன் பென்சோபீனோனுடைய வாய்ப்பாட்டுடன் Ph2CO கொண்டிருக்கும் ஒப்புமையின் மூலம் சிலிகோகீட்டோன் அல்லது சிலிக்கோன் எனப் பெயரிட்டார். கிப்பிங் பாலிடைபினைல்சிலாக்சேன் ஒரு பலபடி என்பதையும் பென்சோபீனோன் ஒரு ஒற்றை மூலக்கூறு என்பதையும் நன்றாகவே அறிந்திருந்தார். மேலும், அவர்  Ph2SiO மற்றும் Ph2CO ஆகியவை முற்றிலும் வேறுபட்ட வேதியியலைக் கொண்டவை என்று தெரிவித்திருந்தார்.[2][3]  கிப்பிங்சின் மூலக்கூறுகள் மற்றும் கீட்டோன்கள் இடையே கட்டமைப்பு வேறுபாடுகள் கண்டறியப்பட்டபோது ' 'சிலிக்கோன்' ' என்பது சரியான சொல் அல்ல என்பதும் ' 'சிலாக்சேன்கள்' 'என்பதே நவீன வேதியியலின் பெயரிடுதல் மரபின்படி சரியானது என்பதையும் அனைவரும் உணர்ந்தனர். இருப்பினும், இன்றளவும் சிலிக்கோன் என்ற சொல் பொதுவான பயன்பாட்டில் உள்ளது.[4] சிலிக்கான் சில நேரங்களில் தவறுதலாக சிலிகான் என குறிப்பிடப்படுகிறது. வேதித் தனிமமான சிலிக்கன் என்பது ஒரு படிக வடிவுள்ள உலோகப்போலியாகும். இத்தனிமம் பரவலாக கணினிகளிலும் மற்ற மின்னணு உபகரணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. சிலிக்கோன்கள் சிலிக்கான் அணுக்களைளக் கொண்டிருப்பினும், அவற்றில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் மற்றும் அநேகமாக இதர வகை அணுக்கள் ஆகியவையும் அடங்கும். மேலும், தனிம சிலிக்கானுக்கும் சிலிக்கோனுக்கும் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் வெவ்வேறானைவ.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலிக்கோன்&oldid=3521590" இலிருந்து மீள்விக்கப்பட்டது