சில்லு விளையாட்டு

சில்லு விளையாட்டு தமிழக நாட்டுப்புறங்களில் அண்மைக்காலம் வரையில் விளையாடப்பட்ட சிறுமியர் விளையாட்டுகளில் ஒன்று. இதற்கு வழங்கப்படும் வட்டாரப் பெயர்கள் -சில்லாங்கு, தெல்லாங்கு, எத்து-மாங்கொட்டை மற்றும் ஒன்னான்-ரெண்டான் வட்டு

சில்லு-விளையாட்டு அரங்குகள்

ஆட்டம்

தொகு

தட்டையான சிறு சில்லை அரங்கத்தில் போட்டு, அதனைக் காலால் மிதித்து, அரங்கத்துக்கு வெளியே காலால் எற்றித்தள்ளி, அதனை மிதித்து விளையாடுவது சில்லு விளையாட்டு.

உடைந்த மண்பாண்டத்து ஓட்டில் சுமார் மூன்று அங்குல அளவு விட்டமுள்ள சிறு ஓட்டினைச் சில்லு அல்லது சில்லி என்பர். மாங்கொட்டையும் ஆடுசில்லாகப் பயன்படுத்தப்படுவது உண்டு.

அரங்கு தரையில் சில்லால் கோடு கிழித்து அமைக்கப்படும்.

செவ்வக-அடுக்கு
வட்ட-ஆரை-அரங்கு

என்னும் பாங்கில் ஆடரங்கு அமைந்திருக்கும்.
அரங்கிலிருந்து சுமார் 10 அடி தொலைவில் ஒரு உத்திக்கோடு.

 
மேலை நாடுகளில் சில்லு விளையாட்டு அரங்கம்

செவ்வக-அடுக்கு அரங்கு ஆட்டம்

தொகு

உத்தியிலிருந்து சில்லை அரங்கில் எறிவர். முதல்-கட்டம், இரண்டாம்-கட்டம் என வரிசை முறையில் சில்லு எறியப்படும். சில்லு அரங்கக் கோட்டில் படாமல் கிடக்க வேண்டும். கோட்டில் பட்டால் பிழை. பிழை நேர்ந்தால் அடுத்தவர் ஆடுவார்.

உத்தியிலிருந்து நொண்டி அடித்துக்கொண்டு சென்று அரங்கில் கிடக்கும் சில்லை அதே நொண்டிக்காலால் ஒரே தவ்வில் மிதித்துப் பின்னர் அதே காலால் சில்லை அரங்கிற்கு வெளியே எத்தி, ஒரே தவ்வில் அதே நொண்டிக்காலால் மிதித்தால் பழம். பழம் பெற்றதும் அடுத்த-கட்டத்தில் இதேபோல் ஆட்டம். எல்லாக் கட்டங்களிலும் ஆடி முடித்தபின் மச்சு-ஆட்டம்.

அரங்கு வரையில் நொண்டி அடித்துக்கொண்டு சென்று அரங்கின் முதல் கட்டத்தில் இருகால்களையும் ஊன்றிக்கொண்டு நிற்பர். ஆடிய சில்லைத் தலையில் வைத்துக்கொண்டு தன் மண்களை தானை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி நடந்து செல்வர். ஆடுபவர் இரண்டு தப்படி வைத்ததும் “சரியா” என்று கேட்பார். கோட்டை மிதித்திருந்தால் தப்பு. “சரி” என்று பிறர் சொன்னால் அடுத்த தப்படிகள். கடைசி கட்டம் சரி என்றதும் தலையிலுள்ள சில்லைக் குனிந்து தரையில் போடவேண்டும். பின் கண்ணைத் திறந்துகொண்டு அந்தச் சில்லை மிதிக்கவேண்டும்.

எந்த ஆட்டப் பகுதியில் பிழை நேர்ந்ததோ அந்த ஆட்டப் பதியிலிருந்து அடுத்த ஆட்டமுறை வரும்போது ஆட்டத்தைத் தொடரலாம்.

மிதிக்கும் இந்த இடத்தைச் சோழநாட்டில் மலை என்றும், கொங்குசாட்டில் கரகம் என்றும் கூறுவர். இங்கு நின்றுகொண்டு “ஆனையா, பூனையா” என்று கேட்பர். மற்றவர் ஆனை என்று சொன்னால் ஆனை தன் கையால் தண்ணீரை உறிஞ்சித் தன் தலைக்கு மேல் கையை உயர்த்தி நீரை விசிறுவது போலச் சில்லை அரங்குக்கு வெளியே எறிந்துவிட்டுக் கட்டங்களில் நடந்துவந்து கட்டத்திலிருந்து தவ்வி மிதிக்க வேண்டும். “பூனை” என்று மற்றவர் சொன்னால் குனிந்து சில்லை எறிந்து அவ்வாறே மிதிக்க வேண்டும்.

மிதித்துவிட்டால் அரங்கின் ஓரத்தில் ஒரு கட்டம் போட்டு அதனைத் தன் மச்சு என்று வைத்துக்கொள்ளலாம். அடுத்த ஆட்டத்தில் நொண்டி அடித்துக்கொண்டு செல்லும்போது தன் மச்சில் தான் இரண்டு கால்களையும் ஊன்றிக்கொள்ளலாம். அதிக மச்சு கட்டியவர் வென்றவர் ஆவார்.

காலின்மேல் சில்லை வைத்துக்கொண்டு கண்ணைத் திறந்துகொண்டு நடத்தலும் ஏற்றுக்கொள்ளப்படும்

வட்டரங்கு ஆட்டம்

தொகு

ஆரைக் கட்டங்களுக்கு மதிப்பீடு வழங்கப்பட்டிருக்கும். மேலே கூறப்பட்டது போலச் சில்லை எறிந்து, நொண்டியடித்துச் சென்று, தவ்விச் சில்லை மிதித்து, வெளியே எற்றி மிதித்து, ஆரக்கட்ட எண்ணிக்கையைத் தன் வெற்றிப்புள்ளியாக ஆக்கிக்கொள்வர். அதிக புள்ளி பெற்றவர் வெற்றி.

காட்சி

தொகு

மேலும் காண்க

தொகு

கருவிநூல்

தொகு
மறைகின்ற விளையாட்டுகள், 2002
தேவயேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், 1954
பாலசுப்பிரமணியம் இரா, தமிழர் நாட்டு-விளையாட்டுகள், 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்லு_விளையாட்டு&oldid=1038402" இலிருந்து மீள்விக்கப்பட்டது