சிவநெறிப் பிரகாசம்

சிவநெறிப் பிரகாசம் என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாக்கிர யோகிகள் என்பரால் எழுதப்பட்ட சைவசித்தாந்த நூல். இதற்கு இவரது மாணாக்கர் எழுதிய சிவநெறிப் பிரகாச உரை இந்த நூலின் பெருமையை நன்கு விளக்குவதாக உள்ளது. யோகிகளின் மகள் சுவானந்த நாச்சியார் தமக்குச் சிவநெறியை உணர்த்தும்படி வேண்ட அதன் பொருட்டு சிவாகமங்களிலிருந்து தெரிந்தெடுத்த செய்திகளை 1000 சுலோகங்களில் தந்துள்ள நூல் இது. வாழ்க்கை இருளில் சிவப்பேறு அடைய வழிகாட்டும் ஒளிவிக்கு என்னும் பொருள் தருவதாய், இந்த நூலின் பெயர் ‘சிவநெறிப் பிரகாசம்’ என்று சூட்டப்பட்டுள்ளது.

நூலின் பாடல்கள் எண்சீர் விருத்தங்களால் ஆனவை. [1]

நூல் சொல்லும் செய்திகளில் சில:

  • முனிவர்கள் பின்பற்றிய வாழ்க்கை முறைகள் - துருவாசர் சந்நியாசம், அகத்தியர் வானப்பிரத்தம், கௌதமர் கிரகத்தம், ததீசி பிரமச்சரியம்
  • அளவை கூறும் பகுதியில் பதி, பசு, பாச இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
  • தீட்சை முதலானவற்றைக் கூறும் பகுதியில் புறசமய மறுப்புகள் காணப்படுகின்றன.
  • மூன்று வகை ஆன்மாக்கள்: சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர்
  • சிவஞான சித்தியாருக்கு உரை எழுதிய பின்னர் இந்த நூல் செய்யப்பட்டதற்கான குறிப்புகள் நூலில் காணப்படுகின்றன.
  • மகடூஉ முன்னிலைப் பாடல்கள் இந்நூலில் யாண்டும் இல்லை.

நூலில் உள்ள பாடல் (எடுத்துக்காட்டு)

செறிவரிய ஞானநிட்டை எய்தி னோர்கள்

சீவன்முத்த ராய்ச்சரிக்கும் சிவமே யாவர்

அறிவறிதாம் அவர்செயலைப் பிராரத்த பேதம்

அனேகமுள ஆதலினால் அவ்வுடல் வாதனையால்

பிரிவரிதாய்ச் சிற்றின்பம் அனைத்தினையும் பெற்றும்

பெரிதாய இச்சை வெறுப்பினராயும் பின்னும்

நெறியான அறம்மறந்து மறமே செய்தும்

நீங்கியிடார் சிவன்தனை எந்நேரமும் அந்நிலையே. [2]

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. 14 பாடல்கள் மட்டும் அறுசீர் விருத்தம். 211 ஆம் பாடல் ஒன்று மட்டும் ஐந்தடிப்பாடல்.
  2. எண்சீர் விருத்த வாய்பாடு இந்த விருத்த்த்தில் பின்பற்றப்படவில்லை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவநெறிப்_பிரகாசம்&oldid=1429516" இலிருந்து மீள்விக்கப்பட்டது