சீனப் பண்பாட்டுப் புரட்சி

பாட்டாளிகள் பண்பாட்டுப் பெரும் புரட்சி (Proletarian Cultural Great Revolution) என்னும் விரிவான பெயர்கொண்ட பண்பாட்டுப் புரட்சி அல்லது சீனப் பண்பாட்டுப் புரட்சி என்பது, மக்கள் சீனக் குடியரசில், 1966 ஆம் ஆண்டுக்கும் 1976 ஆம் ஆண்டுக்கும் இடையில் இடம்பெற்ற சில நிகழ்வுகளைக் குறிக்கும். இக்காலத்தில் சீனாவில் பரவலான சமூக, அரசியல் கிளர்ச்சிகள் இடம்பெற்றன. இதனால் நாடு தழுவிய குழப்பநிலையும், பொருளாதார ஒழுங்கின்மையும் நிலவியது.

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பங்கு அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ளது. பல சிறிய கட்சிகள் இருக்கும்போதும் கூட, அவைகள் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்க கடமைப்பட்டுள்ளன. நிறுவனர் மாவோ சேதுங்கின் கீழ், கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான சர்வாதிகார சோஷியலிசத்தை அமல்படுத்தியது. ஆயினும்கூட முன்னேற்றிச் செல்வதற்கான நீண்ட பாய்ச்சல் (The Great Leap Forward) என்ற இயக்கத்தின் பொருளாதார தோல்வி, நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் கலாசாரப் புரட்சியின்போது ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக லட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

சீனப் பொதுவுடைமைக் கட்சிக்குள்ளும், சமூகத்திலும் "தாராண்மையிய பூர்சுவாக்கள்" ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் சீனாவில் மீண்டும் முதலாளித்துவத்தைக் கொண்டுவர முயல்வதாகவும் குற்றம் சாட்டிய சீனத்தலைவர் மாவோ சேடாங், 1966 ஆம் ஆண்டு மே 16 ஆம் நாள் பண்பாட்டுப் புரட்சியொன்றைத் தொடங்குவதாக அறிவித்தார். இது மாவோவின் அதிகாரத்திற்கு சவாலாக இருந்தவர்களை குறிவைத்து அமைந்தது. இத்தகையவர்களை புரட்சிக்குப் பிந்திய வகுப்புப் போராட்டம் மூலம் இனங்கண்டு நீக்க வேண்டும் என வலியுறுத்திய மாவோ, இதற்காகச் சீன இளைஞர்களின் சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் ஒன்று திரட்டுவதற்காக இளைஞர்களைக் கொண்ட செம்படை ஒன்றையும் அமைத்தார். இந்த இயக்கம் படைத்துறை, நகர்ப்புறத் தொழிலாளர், கட்சித் தலைமை போன்ற எல்லா இடங்களுக்கும் பரவியது. கலாச்சாரப் புரட்சி முற்றுப் பெற்றுவிட்டதாக 1969 ஆம் ஆண்டில் மாவோவே அறிவித்திருந்தாலும், 1966க்கும் 1976ல் "நால்வர் குழு" எனப்பட்டவர்கள் கைது செய்யப்படும்வரை இடம்பெற்ற அதிகாரப் போட்டி, அரசியல் உறுதியின்மை ஆகியவை அனைத்தும் இக் கலாச்சாரப் புரட்சியின் பகுதிகளாகவே தற்காலத்தில் கருதப்படுகின்றன.

மாவோ இறந்த பின்னர், பண்பாட்டுப் புரட்சிக்கு எதிரான டெங் சியாவோபிங் தலைமையிலான குழுவினர் சீனப் பொதுவுடைமைக் கட்சியில் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் பண்பாட்டுப் புரட்சியின்போது கொண்டுவரப்பட்ட அரசியல், பொருளியல், கல்விச் சீர்திருத்தங்கள் எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டுவந்ததுடன், தொடக்கத்தில் இருந்தே பண்பாட்டுப் புரட்சி ஒரு எதிர்த் தோற்றப்பாடு எனவும் அறிவித்தனர். பண்பாட்டுப் புரட்சியின் கொள்கைகளை ஒழுங்கமைத்து நிறைவேற்றுவதற்குப் பொறுப்பாக இருந்தவர்கள்மீது விசாரணை நடத்தப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு, பண்பாட்டுப் புரட்சிக்கான பொறுப்பு காலஞ்சென்ற தலைவர் மாவோவின் மீதே சுமத்தினாலும், இதனால் ஏற்பட்ட கடும் விளைவுகளுக்காக லின் பியாவோவையும், நால்வர் குழுவையும் குற்றம்சாட்டியது. இக் குழுவின் தலைவர் சியாங் சிங் முக்கிய பொறுப்பாளி ஆக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு