சீனப் பொதுவுடமைக் கட்சி
சீனப் பொதுவுடமைக் கட்சி (சீபொக) அல்லது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சீனக் குடியரசின் ஆளும் அரசியல் கட்சியாகும். சீனாவின் அரசியல் சட்டப்படி இக் கட்சியே நாட்டை ஆள முடியும். சீனப் பொதுவுடமைக் கட்சி 1921 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. குவோமிந்தாங் கட்சியின் ஆட்சியில் இருந்த அன்றைய சீனாவின் தேசிய அரசாங்கத்துக்கு எதிராகப் போரிட்ட இக் கட்சி, சீனப் புரட்சி எனப்படும் புரட்சி மூலம் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. 70 மில்லியன் மேலான உறுப்பினர்களைக் கொண்டுள்ள இக் கட்சியே உலகின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாகும்.
சீன மக்கள் குடியரசில் கட்சியின் பங்கு
தொகுசீனப் பொதுவுடமைக் கட்சி மக்கள் சீனாவிலுள்ள மூன்று அதிகார மையங்களுள் ஒன்றாகும். அரச இயந்திரமும், மக்கள் விடுதலைப் படையும் ஏனைய இரண்டு அதிகார மையங்கள். மக்கள் சீனாவில் இக் கட்சி மிகவும் பலம் வாய்ந்ததாகும். சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஹாங்காங், மாக்காவோ ஆகியவற்றுக்கு வெளியே பொதுவுடமைக் கட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இது ஒரு கட்சி அரசாகச் செயல்படுகின்றது.
ஸ்டாலினுக்குப் பிற்பட்ட சோவியத் ஒன்றியத்தில் கட்சியே அரசைக் கட்டுப்படுத்தியது போல அல்லாமல், சீனாவில் கட்சிக்கும் அரசுக்கும் நேரடியான தொடர்பு இல்லை. சீனாவில், ஆட்சி அதிகாரம் அரசு நிலையிலிருந்தே பெறப்படுகின்றது. ஆனால் முக்கிய அரச பதவிகள் அனைத்தையும் கட்சி உறுப்பினர்களே வகிக்கின்றனர். கட்சி தனது ஒழுங்கமைப்புப் பிரிவினூடாகப் பதவி நியமனங்களுக்கு உரியவர்களைத் தீர்மானிக்கின்றது. சட்டத்துக்கு மேலான அதிகாரத்தைக் கொண்ட சோவியத் ஒன்றிய நிலைமைக்கு மாறாக, 1990க்குப் பின்னர் சீனாவில் பொதுவுடமைக் கட்சி சட்டத்துக்குக் கட்டுப்பட்டது ஆகும். இதனால் அது அரசின் அதிகாரத்துக்கும் நாட்டின் அரசியல் சட்டத்துக்கும் கட்டுப்பட்டது ஆகும். அரசு, காவல்துறை மற்றும் இராணுவம் ஆகியவைகளின் முழு கட்டுப்பாடும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கையில் உள்ளது..
கட்சியின் நூற்றாண்டு விழா
தொகுசீனப் பொதுவுடமைக் கட்சி மே 1921-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1 சூலை 2021 அன்று இக்கட்சி தனது நூற்றாண்டு விழாக்களை பெய்ஜிங் நகரத்த்தின் தியனன்மென் சதுக்கத்தில் கொண்டாடத் துவங்கியது. நூற்றாண்டு விழாவை துவக்கிப் பேசிய சீன அதிபரும், சீன பொதுவுடமைக் கட்சியின் தலைவருமான சீ சின்பிங், சீனாவை யாரும் அடிமைபடுத்த முடியாது. அவ்வாறு செய்ய முயல்பவர்கள் ரத்தக்களறியை சந்திப்பார்கள் என அறைகூவல் விடுத்துள்ளார். மேலும் சீனாவை அடிமைபடுத்தும் காலம் மலையேறி விட்டது என்றும், எந்த நாட்டையும் சீனா அடிமைபடுத்தியது கிடையாது; அடக்கியதும் இல்லை; அடக்குமுறைகளை ஏவியதும் இல்லை என்றார். [1][2][3]