சீனாவின் தேநீர்ப் பண்பாடு

தேநீர் அருந்துதல் என்பது இன்று உலக மக்களின் வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் கலந்துவிட்ட ஓர் பழக்கம் ஆகும். பண்டையக்காலம் தொட்டே குறிப்பாக சீனர்களின் வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் தேநீர் அருந்துதல் என்பது மிகவும் பண்பாட்டு முதன்மைத்துவம் வாய்ந்த ஒரு முறையாகும். சீனாவின் தேசிய பானம் தேநீர். சீனர்களின் அன்றாட வாழ்கைக்குத் தேவைப்படுகின்ற ஏழு அடிப்படை பொருட்களில் தேநீரும் ஒன்று. சீன மொழியில் சாசுய் (cháshù) என்று அழைக்கப்படும் தேநீர், இந்தியில் சாய் என்றும் மலையாளத்தில் சாயா என்றும் அழைக்கப்படுகிறது. சாயி என்ற சொல் சீன மொழியில் தேநீர்க் கலை என்ற பொருளில் வழங்கப்படுகிறது. சீனாவின் தேநீர் தயாரிப்பு முறையானது இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் ஜப்பானின் தேநீர்த் தயாரிப்பு முறைகளில் இருந்து வேறுபட்டதாகும்.

தேநீர்
தேநீரகம்- ஷாங்காய்,சீனா.
தேநீரகம்-நான்சிங் அரண்மனைத் தோட்டம்

வரலாறு

தொகு

பொ.ஊ.மு. 280-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு, தென்சீனாவில் வூ என்ற நாட்டின் மன்னர் தமது அமைச்சர்களுக்கு அளித்த விருந்தில் மது வழங்கப்பட்டது. இதில் வே சேள எனும் அமைச்சரால் மதுவுக்கு பதிலாக தேநீரைக் குடிப்பதற்கு மன்னர் ஒப்புதல் அளித்தார். அதன் பின்னரே, விருந்தினரை வரவேற்று தேநீர் கொடுக்கும் பழக்கம் துவங்கியது. டாங் வமிசக்காலத்தில், தேநீர் அருந்துதல் என்பது மக்களின் பழக்கமாக மாறி விட்டது. பின்னர் இப்பழக்கம் புத்த மதத்துடன் தொடர்புடையதாக அறிவிக்கப்பட்டது. பொ.ஊ. 713ம் ஆண்டு முதல் 741ம் ஆண்டு வரை, கோயிலுள்ள மதகுருமார், மூளையை சுறுசுறுப்பாக்க தேநீர் அருந்தத் துவங்கினர். டாங் வமிச காலத்தில் செல்வந்தர்களின் வீடுகளில் தேநீர் அறை என்று சிறப்பாக கட்டப்பட்டது.

ஆய்வு நூல்

தொகு

தேநீர் குறித்த ஆராய்ச்சிகள் சீனாவில் பண்டைய காலத்திலேயே நடைபெற்று வந்துள்ளது. பொ.ஊ. 780-ஆம் ஆண்டில் சீனாவின் தேநீர் சித்தர் என்று அழைக்கப்படுபவர் தேயிலையின் நிபுணர் லூ யியு (Lu Yu , 733-804) சாஜிங் என்ற தேயிலை பற்றிய சீனாவின் முதலாவது ஆய்வு நூலை எழுதினார். இந்நூல் ஆங்கிலத்தில் “The Classic of Tea’’ என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் தேயிலையை விளைவித்தல், தேநீர் வகைகள், தயாரிக்கும் முறைகள், தேநீரின் மருத்துவக் குணங்கள் பற்றி விரிவாக எடுத்தியம்புகிறது.

பல்வேறு தேநீர் வகைகள்

தொகு
 
Green tea leaves steeping in an uncovered gàiwǎn teabowl.

சீன மக்கள் அதிகமாக தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். சீனாவின் பல்வேறு இடங்களிலும் தேயிலைகள் வேறுபட்ட தேநீர்கள் தயாரிக்கப்படுகிறது. பெய்ஜிங்கில் மலர்த் தேநீரும், ஷாங்காங் பகுதியில் பச்சைத் தேநீரும் அருந்தப்படுகிறது புசியான் மாநிலத்தில் சிவப்புத் தேநீரும் சில இடங்களில், தேநீரில் பிற பொருட்களை சேர்த்தும் தேநீர் தயாரிப்பு நிகழ்கிறது. ஹுநான் மாநிலத்தில், இஞ்சி உப்பு கலந்த தேநீர் கொடுத்து விருந்தினரை வரவேற்கின்றனர். தேநீரில் தேயிலை மட்டுமல்லாது, உப்பு, இஞ்சி, எள்ளு ஆகியவை சேர்க்கப்படுகின்றன.

தேநீர் அருந்தும் பழக்கம்

தொகு
 
சீனாவின் மண் தேநீர்க் குவளை(茶壺)

சீனர்களின் தேநீர் அருந்தும் பழக்கம் 4000 ஆண்டுக்கு மேலான வரலாறு கொண்டது. சீனர்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத பானங்களில் தேநீர் முக்கிய இடம்பெறுகிறது. விருந்தினர்களுக்கு தேநீர் வழங்குவது, சீனர்களின் பழக்கமாகும். பல்வேறு பண்பாட்டு சூழல்களில் தேநீரைப் பயன்படுத்தும் வழக்கம் சீனர்களிடம் பண்டைய காலம் தொட்டே இருந்து வருகிறது. மரியாதையின் குறியீடாகவும், குடும்ப உறுப்பினர்கள் சந்தித்துக்கொள்ளும்போதும், மன்னிப்பு கோருவதற்காகவும், திருமண நாளில் பெரியவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதற்காகவும் தேநீர் பரிமாறுவது வழக்கமாக இருந்து வருகிறது.[1] சீனாவில், தேநீர் குடிப்பது என்பது, தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு பண்பாடாக மாறியுள்ளது. தேநீர் அருந்துதல் என்பது ஒரு வகை கலையாகக் கருதப்படுகிறது.[2]

மரியாதைக் குறியீடு

தொகு

சீனச் சமுதாயத்தில் இளைய தலைமுறையினர் தங்கள் மரியாதையை வெளிப்படுத்தும் விதத்தில் மூத்த தலைமுறையினருக்கு தேநீர் வழங்குகின்றனர். பெரியவர்களை விடுமுறை நாட்களில் தேநீரகத்திற்கு அழைத்துச் சென்று தேநீர் கொடுத்து உபசரிப்பது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. இதுவே பண்டைய காலங்களில் கீழ்நிலையில் இருப்பவர்கள் உயர் பதவி வகிப்பவர்களுக்குக் மரியாதை நிமித்தமாக தேநீர் வழங்குவது இருந்து வந்தது. இன்று பண்பாட்டு மாற்றங்களின் விளைவாக கீழ் பதவியில் வகிப்பவர்களுக்கு உயர் பதவியில் வகிப்பவர்களும், சிறியவர்களுக்குப் பெரியவர்களும் தேநீர் ஊற்றிக் கொடுப்பதைக் காணமுடிகிறது.

பெய்ஜிங்கில், வரவேற்பவர் தேநீரை வழங்கும் போது, விருந்தினர்கள் உடனடியாக இரு கைகளாலும் அதை ஏற்று நன்றி சொல்கின்றனர். தென் சீனாவின் குவான்துங் மற்றும் குவான்சி மாநிலங்களில், நன்றி தெரிவிக்கும் பொருட்டு, விருந்தினர் வலது கையால் மேசையை மூன்று முறை தட்ட வேண்டும்.

திருமணச் சடங்கில் தேநீர் வழங்குதல்

தொகு

திருமணம் முடிந்த பிறகு திருமண நாளன்றே மணமகன் மற்றும் மணமகள் உறவினர்களை அறிமுகப்படுத்தும் விதமாக மீண்டும் தேநீர் சடங்கு நடைபெறுகிறது. சடங்கின்போது மணமகன், மணமகள் மற்றும் மணமகள் தோழி மூவரும் இணைந்து சிவப்பு பேரிச்சை மற்றும் தாமரை இதழ்களைச் சேர்த்து தேநீர் தயாரிப்பார்கள். சிவப்பு பேரிச்சை மற்றும் தாமரை இதழ்களை தேநீரில் சேர்ப்பதன் மூலம் மணமகள் கூடிய விரைவில் திடகாத்திரமான குழந்தைகளைப் பெறுவாள் என நம்பப்படுகிறது.

மணமக்கள் மண்டியிட்டு மணமகனின் பெற்றோர்களுக்குத் தேனீர் வழங்குவர். மணமகள் தன்னுடைய மாமனாரின் இடது புறமும் மணமகன் தன்னுடைய தாயின் வலதுபுறமும் மரபுகளின் படி மண்டியிட வேண்டும். தேநீர் சடங்கின்போது தோழி மங்கல வாழ்த்துப்பாடல்களைப் பாடிக்கொண்டு மணமக்களுக்கு உதவியாக இருப்பாள்; மணமகனின் பெற்றோருக்குத் தேநீர் வழங்கிய பிறகு, மணமகனின் உறவினர்களுக்குத் தேநீர் வழங்கப்படுகிறது. முதலில் தாத்தா பாட்டிக்கும் பிறகு அண்ணா, அக்கா, தங்கை என வயதின் அடிப்படையில் ஒவ்வொருவருக்காக வழங்கி அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்பிறகு குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் மணமக்களுக்கு சிவப்பு வண்ணப் பொதியை பரிசாக அளிப்பார்கள். அப்பொதியில் பணமோ நகையோ இருக்கும்.

கால மாற்றங்களுக்கேற்ப தேநீர் வழங்கும் சடங்கிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்று மணமக்கள் இரு வீட்டாருக்கும் தேநீர் வழங்குகின்றனர். இச்சடங்கு பெரிய பெரிய மண்டபங்களிலும், ஐந்து நட்சத்திர விடுதிகளிலும், திறந்த வெளிகளிலும் பல ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வண்ணம் ஆடம்பரமாக நடைபெறுகிறது. ஆடம்பரங்கள் இருப்பினும், இச்சடங்கு இரண்டு குடும்பங்களின் ஒருங்கிணைப்பை சிறப்பிக்கும் விதமாகவே நடைபெறுகிறது.

உறவுகள் சந்தித்தல்

தொகு

பொருளின் நிமித்தமாக அல்லது திருமணம் ஆனபிறகு பிள்ளைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் ஒன்று சேரும்போது தேநீரகத்திற்கு குடும்பத்துடன் சென்று தேநீர் அருந்தி மகிழ்வது சீனர்களின் வழக்கமாக உள்ளது.

மன்னிப்புக் கோருதல்

தொகு

பிள்ளைகள் ஏதாவது தவறுகள் செய்துவிட்டால் தேநீர் ஊற்றிக்கொடுத்து பெற்றோர்களிடம் மன்னிப்புக் கோருவது சீனர்கள் பண்பாட்டில் காணப்படுகிறது.

பாரம்பரியம்

தொகு

பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதற்காகவும் தேநீர் அருந்துதல் நிகழ்கிறது. குடும்பந்தோறும் உறவினர்கள் கூடி தேநீர் அருந்தும்போது குடும்ப பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பற்றிப் பேசிகொள்வது வழக்கம். இதன் மூலம் சீனர்களின் பண்பாடு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக நம்பப்படுகிறது.

தேநீர் குவளைகள்

தொகு
 
சீனாவின் நான்கு தேநீர்க் கோப்பைகள்.

கலை நுட்பத்துடன் கூடிய கோப்பைகள் பத்தாம் நூற்றாண்டிலிருந்து சீனர்களின் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனர்கள் பயன்படுத்தும் தேநீர் கோப்பைகளும் குவளைகளும் சித்திர வேலைப்பாடுகளுடன் மிகுந்த கலை நுட்பத்தோடும் அழகியல் உணர்வோடும் இதற்கென தனி வகை களிமண் மற்றும் மணல் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ட்ராகான், பீனிக்ஸ், குதிரை, குரங்கு, புலி, பூனை, சேவல், மீன், பன்றி, ஆமை, ஆந்தை, பல்லி, தவளை, செர்ரிமலர், தாமரை, சூரியகாந்தி மலர், அண்ணாச்சி, பூசணி, மூங்கில், சிரிக்கும் புத்தர், குழந்தை புத்தர், ஆண், பெண் ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்பட்ட அல்லது உருவங்கள் பொறிக்கப்பட்ட குவளையில் தேநீர் ஊற்றிக் குடிப்பதன் மூலம் அதற்கேற்ற பலன் கிடைப்பதாக நம்பப்படுகிறது.

தேநீரகங்கள்

தொகு
 
A pot of Chinese tea
 
சீனாவின் பாரம்பரிய கடை ஒன்றில் தேநீர் வழங்கப்படுகிறது

சீனாவில் பல்வேறு வடிவமான தேநீர் கடைகள் உள்ளன. பெய்ஜிங்கின் செழுமை மிக்க சியான்மான் சாலையின் பக்கத்தில், சிறந்த தேநீர்கடை இருக்கிறது. மக்கள் இங்கமர்ந்து தேநீர் அருந்தி, சிற்றுண்டி உண்பதோடு, கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கின்றனர். தென்சீனாவில் அழகான இயற்கைக் காட்சிக்கு அருகில் தேநீர் கடைகள் உள்ளன. பயணிகள் தேநீர் குடிக்கும் போது இயற்கை காட்சியைக் கண்டு ரசிக்கலாம்.

சீனாவில் தேநீரகங்கள் சீனக் கட்டக்கலை நுட்பத்துடனும் இயற்கை எழிலோடும் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் குழு குழுவாக அமர்ந்து தேநீர் அருந்தும் வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும். தேநீரகத்தில் சீனக் கலைஞர்கள் மீட்டும் இசையை மணிக்கணக்கில் கேட்டு மகிழ்ந்தவாறே தேநீர் அருந்துவர். தேநீர் அருந்தும்போது கொறிப்பதற்காக வறுத்த பூசணி, தர்பூசணி விதைகள், வேர்க்கடலை ஆகியன கொடுக்கப்படுகின்றன.

உசாத்துணை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16684:2011-09-22-23-02-34&catid=1257:2011-01-29-14-00-16&Itemid=515
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-04-21.

வெளியிணைப்புகள்

தொகு