சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள்
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கல்வி அறக்கட்டளைகள், சமுதாய அமைப்புகள், சங்கங்கள் போன்றவைகளால் அரசின் நிதியுதவியின்றி நடத்தப்படும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன. இந்திய அரசு அமைப்பான அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு பொறியியல் கல்லூரிகளுக்கான அனுமதிகளை வழங்குகிறது. இந்த அனுமதியைப் பெற்ற பின்பு கல்லூரி அமைக்கப்படும் மாநில அரசின் அனுமதி பெறுவதுடன், கல்லூரிக்குத் தொடர்புடைய பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற வேண்டி இருக்கும். இந்தக் கல்லூரிகளுக்கு இணைப்பு செய்யப்பட்ட பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தின்படி அந்தப் பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்தி மதிப்பெண் சான்றிதழ்களையும், பட்டங்களையும் அளிக்கின்றன. இந்த சுயநிதிப் பொறியியல் கல்விக்கு மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணங்களை மாணவர்கள் செலுத்த வேண்டும்.