சுருள் பட்டை
சுருள் பட்டை என்பது ஒரு வளையக்கூடிய மெல்லிய உலோகத்தால் ஆன வளையக்கூடிய, நீண்ட வாள் ஆகும். இது ஒருவரின் உடலுக்குள் ஊடுருவிப் பாய்ந்து வெட்டக் கூடிய அளவுக்குக் கூர்மையானது. அதே வேளை ஒரு வளையமாகச் சுருட்டி விடக் கூடியது. சுமார் முக்கால் அங்குலம் அகலமும் நான்கு அல்லது ஐந்தரை அடி நீளமும் கொண்ட இந்த வாளை இரும்பினாலான சவுக்காகவும் கருதலாம்.[1] இது தமிழர் பயன்படுத்திய போர்க் கருவிகளில் ஒன்றாகும்.
தமிழில் இந்த ஆயுதத்தின் மற்றொரு பெயர் சுருள் வாள். இன்றும் தென் தமிழகத்தில் இவ்வாள் பயன்பாட்டில் உள்ளதைக் காணலாம். தற்காப்புக் கலைகளான வர்மக் கலை மற்றும் குத்து வரிசை ஆகியவற்றில் இவ்வாள் பயன்படுத்தப்படுகிறது. கேரள தற்காப்புக் கலையான களரிப்பயிற்றிலும் இது பயன்படுத்தப்படுகிறது. மலையாளத்தில் இந்த வாளானது, வட கேரள களரிப்பயிற்று முறைப்படி உருமி எனவும் தென் கேரள களரிப்பயிற்று முறைப்படி சுட்டுவாள் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாள் மலையாளச் சொற்களான திரும்பு அல்லது சுழல் என்ற பொருள் கொண்ட சுட்டு மற்றும் வாள் ஆகிய இரு சொற்களையும் சேர்த்து சுழலும் வாள் என்ற பொருளில் சுட்ட வாள் என்ற பெயர் பெற்றுள்ளது. சண்டையின் போது இதனை ஒருவர் சுழற்றிப் பயன்படுத்தும் முறையால் இப்பெயர் இதற்கு மிகவும் பொருத்தமானதாக அமைகிறது.[1]
சுருள் பட்டையைப் பயன்படுத்துவதில் சிறந்த பயிற்சியுடையவராக ஆவதற்கு வலிமையையும் வேகத்தையும் விட வளையக்கூடிய தன்மையும் சாமர்த்தியமான திறமையுமே தேவை. இதனைச் சுழற்றுவதும் எதிராளியின் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதும் மிகவும் கடினமானதும் ஆபத்தானதுமான கலையாகும். சரியான முறையில் கையாளப்படாவிட்டால் பயன்படுத்துபவருக்கு நிரந்தரமான காயங்கள் ஏற்பட்ட வாய்ப்புண்டு. இக்கலையில் வல்லுநர்களுக்கும் கூட இதனைப் பயன்படுத்தும்போது சிதறாத ஒருமுகக் கவனம் தேவை. பல எதிரிகளுக்கு இடையில் தனியாக மாட்டிக் கொள்வது போன்ற சூழ்நிலையில் ஒருவர் தன்னைக் காத்துக்கொள்ளச் சுருள் பட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இடுப்புப் பட்டையாக இதனை அணிந்து கொள்ளலாம் என்பதால் ஒருவர் இதை வைத்திருப்பது மற்றவர்களுக்கு எளிதாகத் தெரியாது, எடுத்துச் செல்வதும் எளிது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Saravanan, T. (2005). "Valorous Sports Metro Plus Madurai". The Hindu. http://www.hindu.com/thehindu/mp/2005/01/14/stories/2005011400050100.htm. பார்த்த நாள்: 2012-06-05.