சுவடு (இதழ்)

1978இல் வெளியான தமிழ் சிற்றிதழ்

சுவடு என்பது 1970 களில் வெளியான சிற்றிதழ் ஆகும்.[1] இது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், புதுக்கோட்டையில் இருந்து மாதாந்தம் வெளிவந்தது.

வரலாறு தொகு

சுவடின் முதலாவது இதழ் மே 14, 1978இல் வெளியானது. முதல் இதழில் புவியரசு, மு. மேத்தா, நா. விச்வநாதன் ஆகியோரின் கவிதைகள் இடம் பெற்றிருந்தன. ‘கடலில் பெய்த மழை' என்றொரு கதையை அகல்யா எழுதியிருந்தார். க. துரைப்பாண்டியனின் 'நினைத்துப் பார்ப்பது நல்லது' என்ற கட்டுரை வெளியானது. இது தவிர, 'வெங்கட்சாமிநாதனின் இலக்கியப் பார்வை' பற்றி பாலா எழுதிய கட்டுரையும் இருந்தது.

வழக்கமான அம்சங்கலாக 'குறிப்புகள்' என்ற தலைப்பில், முக்கிய நிகழ்ச்சிகள் அல்லது குறிப்பிடத்தகுந்த தகவல்கள், செய்திகள் அவற்றின் மீது குத்தலான அல்லது நகைச்சுவை பொருந்திய குறிப்புரைகள் தரப்பட்டன. பார்வை என்ற பகுதியில் புத்தகங்களுக்கு விரிவான மதிப்புரை இடம்பெற்றது. மீரா 'அந்தப் பக்கம் இந்தப் பக்கம்' பகுதியில் சுவையாகவும் கிண்டலாகவும் பொது விஷயங்கள் பற்றி கருத்துகள் எழுதினார்.

மாத இதழாக தோன்றி இடையில் 'இரு மாதம் ஒருமுறை' என மாறி ஆண்டு நிறைவை எய்தியது. சுவடு அன்றைய ‘ஆனந்தவிகடன்' அளவில் வந்தது. துவக்கத்தி 24 பக்கங்களும், பின்னர் 32 பக்கங்களுமாக வெளிவந்தது.

இதன் ஏழாவது இதழ் 'இரண்டாம் ஆண்டுச் சிறப்பிதழ்' என்று 56 பக்கங்களோடு வந்தது. அதில் ஈழத்து இலக்கியங்கள்- ஓர் அறிமுகம் (ஜவாது மரைக்கார் ), மெய் பொய் (அசோகமித்திரன்), வார்த்தைகளும் வாழ்க்கையும் (மெளனி கதைகள் பற்றி அகல்யா), ஞானபீடம் பரிசு பெற்ற சச்சிதானந்த ஹீரானந்த வாத்ஸ்யாயன்- ‘ஆக்ஞேய' பற்றிய அறிமுகம் (என். ஸ்ரீதரன்), தில்லியில் ஏழாவது உலகத் திரைப்பட விழா ( கலாஸ்ரீ) ஆகிய கட்டுரைகள் உள்ளன. நா. விச்வநாதன் கவிதைகள்-4 பக்கங்கள் மற்றும் புவியரசு, கலாப்ரியா, அபி, கிவி கவிதைகள். சுந்தர ராமசாமி, பா. செயப்பிரகாசம், வா. மூர்த்தி கதைகள் என வெளியானது.[2]

அதன் பிறகு சுவடு வெகுகாலம் நீடித்திருக்கவில்லை. விரைவிலேயே ஒரு அறிவிப்போடு அதன் வெளியீடு நிறுத்தப்பட்டது.

குறிப்புகள் தொகு

  1. சிற்றிதழ்கள்
  2. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 127–132. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவடு_(இதழ்)&oldid=3399444" இலிருந்து மீள்விக்கப்பட்டது