சூஃபியா கமல்

பேகம் சூஃபியா கமல் (20 சூன் 1911 - 20 நவம்பர் 1999) என்பவர் வங்காளதேசத்தைச் சேர்ந்த கவிஞரும், எழுத்தாளரும், அரசியல் ஆர்வலரும் ஆவார்.[1] 1950 ஆம் ஆண்டுகளின் வங்காள தேசியவாத இயக்கத்தில் பங்கேற்றார். கமல் 1999 ஆம் ஆண்டில் மரணமடைந்தார். வங்காளதேசத்தில் மாநில இறுதி சடங்கு வழங்கப்பட்ட முதல் பெண்மணி இவர் ஆவார்.[2]

ஆரம்பகால வாழ்க்கைதொகு

 
கணவர் கமாலுதீன் அகமதுடன் கமல் (1939)

கமல் பாரிசலின் ஷேஸ்தாபாத்தில் ஒரு ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தார். அவரது குழந்தை பருவத்தில் பெண்களின் கல்வி தடை செய்யப்பட்டு இருந்தது. அதனால் பள்ளிக் கல்வியைப் அவரால் பெற முடியவில்லை. ஆனால் அவர் வீட்டில் ஆசிரியர்களிடமிருந்து அவர் பெங்காலி, இந்தி, ஆங்கிலம், உருது, அரபு, குர்திஷ் மற்றும் பாரசீக மொழிகளைக் கற்றுக்கொண்டார். 1918 ஆம் ஆண்டில் அவர் தனது தாயுடன் கல்கத்தா சென்றார். அங்கு அவர் பேகம் ரோக்கியாவை சந்தித்தார். [3]சூஃபியா அவரது 11வது வயதில் அவரது உறவினரான சையத் நேஹல் ஹொசைனை திருமணம் முடித்தார். இத் தம்பதியினருக்கு அமீனா கஹார் என்ற மகள் பிறந்தார். ஹொசைன் 1932 ஆம் ஆண்டில் இறந்தார்.[4]

பின்னர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சூஃபியா கமாலுதீன் அகமதுவை மணந்தார். கமாலுதீன், சூஃபியா தம்பதியினருக்கு சுல்தானா கமல், சைதா கமல் ஆகிய இரு புதல்விகளும், ஷாஹேத் கமல், சஜேத் கமலும் இரு புதல்வர்களும் பிறந்தனர்.

சூஃபியா 1925 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார்.[1] இந்த சந்திப்பானது எளிமையான ஆடைகளை அணியத் தூண்டியது. சூஃபியா கமலின் முதல் கவிதையான பஷாந்தி (வசந்தம்) 1926 ஆம் ஆண்டில் சோகத் இதழில் வெளியிடப்பட்டது. 1931 ஆம் ஆண்டில் இந்திய மகளிர் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்த முதல் வங்காள முஸ்லீம் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.[3]

இலக்கிய வாழ்க்கைதொகு

சூஃபியா கமல் எழுதிய ஷைனிக் போது என்ற சிறுகதை 1923 ஆம் ஆண்டில் உள்ளூர் பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்டது.[3] 1937 ஆம் ஆண்டில் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான கீயர் காந்தா வெளியிட்டப்பட்டது. அவரது முதல் கவிதை வெளியீட்டிற்குப் பிறகு அவரது இலக்கிய வாழ்க்கை தொடங்கியது. அவரது முதல் கவிதை புத்தகம், சஞ்சர் மாயா (மாலை மந்திரம்) 1938 ஆம் ஆண்டில் காசி நஸ்ருல் இஸ்லாத்தின் முன்னுரையைத் தாங்கி வெளிவந்தது. இந்த கவிதைத் தொகுப்பு ரவீந்திரநாத் தாகூரின் பாராட்டைப் பெற்றது.[5]

செயற்பாடுகள்தொகு

சூஃபியா கமல் 1947 ஆம் ஆண்டில் "ஷப்தாஹிக் பேகம்" இதழ் முதன்முதலில் வெளியிடப்பட்டபோது அதன் முதல் ஆசிரியராக பணியாற்றினார். இந்தியாவின் பிரிவினைக்கு பின்னர் அதே ஆண்டில் அக்டோபரில் டாக்காவுக்கு திரும்பினார். அக்கால இந்துக்கும் முஸ்லிமுக்கும் இடையே ஏற்பட்ட பெரும் மோதலின் போது இவர் அவர்களின் நட்பிற்காக உழைத்த அமைதிக் குழுவில் சேர்ந்தார். 1948 ஆம் ஆண்டில் புர்போ பாகிஸ்தான் மொஹிலா குழு அமைக்கப்பட்டபோது ​​அவர் அதன் தலைவரானார். [3]1952 ஆம் ஆண்டில் மொழி இயக்கத்தில் செயற்பட்டார். 1961 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அரசாங்கம் ரவீந்திர சங்கீத்தை (ரவீந்திரநாத்தின் பாடல்கள்) தடை செய்யப்பட்டதை எதிர்த்தார். 1969 ஆம் ஆண்டில் நடந்த வெகுஜன எழுச்சியில் பங்கேற்றார். மேலும் இதன் போது மொஹிலா சங்கிராம் பரிஷத் (பெண்கள் போராட்டக் குழு) உருவாக்கினார். பல ஆண்டுகளாக வங்காளதேசத்தின் மிகப்பெரிய மகளிர் அமைப்பான மஹிலா பரிஷத்தின் தலைவராக இருந்தார்.

வங்காள விடுதலைப் போரின் சுதந்திரப் போராளிகளுக்கு அவர் தீவிரமாக ஆனால் ரகசியமாக உதவினார். பாக்கிஸ்தானிய இராணுவம் அவர் மீது கடுமையான கண்காணிப்பைக் கொண்டிருந்தது. ஆயினும் ஆபத்துக்களைப் புறக்கணித்து சுதந்திரப் போராளிகளுக்கு வெவ்வேறு வழிகளில் உதவினார்.

விருதுகளும், அங்கீகாரமும்தொகு

 • இலக்கியத்திற்கான வங்காள அகாடமி இலக்கிய விருது (1962)
 • சோவியத் ஒன்றியத்தில் இருந்து லெனின் நூற்றாண்டு விழா பதக்கம் (1970)
 • ஏகுஷே படக் (1976)

செக்கோஸ்லோவாக்கியா பதக்கம் (1986)

 • ஜாதியோ கபிதா பரிஷத் விருது (1995)
 • பேகம் ரோக்கியா பதக்கம் (1996)
 • தேஷ்பந்து சி.ஆர்.தாஸ் தங்கப் பதக்கம் (1996)
 • சுதந்திர தின விருது (1997)

டாக்காவில் உள்ள தேசிய பொது நூலகம் அவரது நினைவாக சூஃபியா கமல் தேசிய பொது நூலகம் என்று பெயரிடப்பட்டது.[6]

சான்றுகள்தொகு

 1. 1.0 1.1 "Kamal, Begum Sufia - Banglapedia". en.banglapedia.org. 2019-12-07 அன்று பார்க்கப்பட்டது.
 2. Newsd (2019-06-20). "Google Doodle celebrates 108th birth anniversary of poet Sufia Kamal". News and Analysis from India. A Refreshing approach to news. (ஆங்கிலம்). 2019-12-07 அன்று பார்க்கப்பட்டது.
 3. 3.0 3.1 3.2 3.3 Prothom Alo, 20 November 2006
 4. ""Kamaludddin Ahmed Khan: Keen, unconventional, relevant"".
 5. "সাহিত্যে কবি সুফিয়া কামাল". The Daily Sangram. 2019-12-07 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
 6. "Central Public Library renamed". The Daily Star (ஆங்கிலம்). 2010-01-22. 2019-12-07 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூஃபியா_கமல்&oldid=3347998" இருந்து மீள்விக்கப்பட்டது