சூரிய கோயில், ராஞ்சி
சூரிய கோயில் அல்லது சூர்யா மந்திர் (Surya Temple;இந்தி: सूर्य मंदिर, रांची), சார்கண்டு மாநிலத்தில் பூண்டுக்கு அருகில் அமைந்துள்ள, சூரிய தெய்வமான சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயில் ஆகும்.
இது ஒரு மலையின் உச்சியில், தேசிய நெடுஞ்சாலை 43-ல் (ராஞ்சி-டாடா சாலை), சார்கண்டு தலைநகர் ராஞ்சியில் இருந்து தோராயமாக 40 km (25 mi) தொலைவில் அமைந்துள்ளது.[1] நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பதினெட்டு சக்கரங்கள் மற்றும் ஏழு இயற்கையான குதிரைகள் கொண்ட பெரிய தேர் வடிவத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது.[2] இக்கோயிலில் சிவன், பார்வதி மற்றும் விநாயகர் உட்படப் பல தெய்வ சன்னிதிகள் உள்ளன.
ராஞ்சி விரைவு குழுமத்தின் நிர்வாக இயக்குநரான சிறீ சீதா ராம் மாரூ தலைமையிலான, சமஸ்கிருதி விகார் என்ற அறக்கட்டளையால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. 1991ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி சுவாமி சிறீ வாசுதேவானந்த சரசுவதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1994ஆம் ஆண்டு சூலை 10ஆம் தேதி சுவாமி சிறீ வாமதேவ் ஜி மகராஜ் அவர்களால் பிராண பிரதிஷ்டை மேற்கொள்ளப்பட்டது.
பக்தர்களுக்குத் தர்மசாலை கட்டப்பட்டுள்ளது. சூரிய பகவானை வழிபடுவதற்காக சத் பூசையின் போது பக்தர்கள் நீராடக்கூடிய குளமும் உள்ளது.