சூரிய மலர் இயக்கம்

(சூரிய மல் இயக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சூரிய மலர் இயக்கம் (Suriya-Mal Movement, சூரிய-மல் இயக்கம்) என்பது பிரித்தானிய இலங்கையில் நினைவுகூரும் நாள் அன்று போரில் பங்கு கொண்ட இலங்கையரின் நலனுக்காக 1931 ஆம் ஆண்டில் பூவரசு (சிங்களத்தில் சூரிய) மலர்களை விற்பனை செய்வதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இவ்வியக்கம் பின்னர் ஏகாதிபத்திய எதிர்ப்பாகத் தோற்றம் பெற்றது. இவ்வியக்கம் 1934-35 இல் மலேரியா தொற்றுநோய்க் காலத்தில் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தது.[1]

பின்னணி

தொகு

நவம்பர் 11 நினைவுறுத்தும் நாளில் பிரித்தானிய முன்னாள் போர் வீரர்களின் நலனுக்காக பொப்பி விற்பனை செய்யப்பட்டு வந்தது. பெண்கள் பொப்பி மலர்களை விற்பனை செய்து அதன் மூலம் வரும் பணத்தை முன்னாள் போர் வீரர்களுக்கு வழங்கி வந்தார்கள். இலங்கையில் இருந்து பங்குபற்றிய போர் வீரர்களுக்கு சிறிய அளவு கொடுப்பனவுகளே வழங்கப்பட்டதாக தேசியவாதிகள் குறை கூறினர்.[1] 1931 ஆம் ஆண்டில் இலங்கையின் முன்னாள் போர் வீரர் ஏலியன் பெரேரா என்பவர் தனது முன்னாள் சகாக்களின் நலனுக்காக இந்நாளில் பூவரசு மலர்களை விற்பனை செய்ய ஆரம்பித்தார்.[1]

அடுத்த ஆண்டில் கொழும்பு தெற்கு இளைஞர் அணி இவ்வியக்கத்தில் இணைந்து கொண்டது. 1933 நவம்பரில் இவர்கள் சூரிய மலர் இயக்கத்தை அமைதியும் விடுதலையும் என்ற தொனிப்பொருளுடன் ஆரம்பித்தனர்.[1] இலங்கையின் வீதிகளில் இளைஞர்களும் பெண்களும் சூரிய மலர்களை விற்பனை செய்தனர். டொரீன் யங் (எஸ். ஏ. விக்கிரமசிங்காவின் மனைவி), செலினா பெரேரா போன்ற பெண்கள் இவ்வியக்கத்தில் முக்கிய பங்காற்றினர்.[1] டொரீன் தலைவராகவும், டெரன்சு டி சில்வா, ரொபின் இரத்தினம் ஆகியோர் செயலாளர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப் போர் ஆரம்பமாகும் வரை இவர்கள் ஆண்டு தோறும் சூரிய மலர் விற்பனையை நடத்தி வந்தனர்.[2] "ஒவ்வொரு சூரிய மலரும் ஏகாதிபத்தியம், பாசிசம், போர் ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கும்" என்பதே இவ்வியக்கத்தின் இலக்காக இருந்தது. இவ்வியக்கத்தினரால் பெருமளவு பணம் திரட்ட முடியாவிட்டாலும், அன்றைய காலகட்டத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இளைஞர்களைத் திரட்ட இவ்வியக்கம் வழிவகுத்தது.[1]

மலேரியாவும் வெள்ளமும்

தொகு

1934 ஆம் ஆண்டில் இலங்கைத் தீவை பெரும் வறட்சி ஆட்கொண்டது. அரிசிக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அக்டோபர் முதல் பெரும் மழை, மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 1934-35 இல் மலேரியா தொற்றுநோய் பரவ ஆரம்பித்தது. இரண்டே மாதங்களில் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.[1] 1,000,000 பேர் வரை பாதிக்கப்பட்டனர். சூரிய மல் இயக்கத்தினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். கிராமம் கிராமமாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மற்றும் உணவுப் பொருட்களைக் கொடுத்தனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Selina Perera – The relentless revolutionary". தி ஐலண்டு. 12 ஏப்ரல் 2009. Archived from the original on 2015-02-05. பார்க்கப்பட்ட நாள் 5 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "A Short History of Lanka Samasamaja Party" (PDF). 18 டிசம்பர் 1960. பார்க்கப்பட்ட நாள் 6 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "Lerski: Origins of Trotskyism in Ceylon (Chap.1)". Marxists.org. பார்க்கப்பட்ட நாள் 29 November 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_மலர்_இயக்கம்&oldid=3555331" இலிருந்து மீள்விக்கப்பட்டது