சூழல் தாக்க மதிப்பாய்வு
சூழல் தாக்க மதிப்பாய்வு (Environmental impact assessment) என்பது, மனிதனுடைய சூழல்சார் உடல்நலத்தில் ஏற்படக்கூடிய தாக்கம், வாழ்சூழல் நலம் (ecological health) மற்றும் இயற்கையின் சேவைகளில் (nature's services) ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட திட்டம் கொண்டிருக்கக்கூடிய தாக்கங்களை மதிப்பாய்வு செய்தல் ஆகும். திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பான தீர்மானம் எடுப்பவர்கள், அதற்குமுன், அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கவனத்தில் கொள்வதற்கு உதவுமுகமாகவே இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
சூழலியல் காரணிகளால், மனித உடல் நலத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றி அறிவதற்கு, செல்வழிப் பகுப்பாய்வு (pathway analysis) முறையைப் பயன்படுத்துவதில், ஐக்கிய அமெரிக்க சூழல் பாதுகாப்பு முகமை (US Environmental Protection Agency) முன்னோடியாக இருந்தது. இந்தப் பகுப்பாய்வுக்கான தொழில்நுட்பம், சூழல் அறிவியல் (environmental science) எனப்பட்டது. முன்னணித் தோற்றப்பாடுகள் அல்லது தாக்கம் ஏற்படுவதற்கான வழிகள்:
- மண் மாசடைதல் தாக்கங்கள்,
- வளி மாசடைதல் தாக்கங்கள்,
- சத்தம்சார் உடல்நலத் தாக்கங்கள்,
- வாழ்சூழலில் ஏற்படக்கூடிய தாக்கங்கள்,
- அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள் தொடர்பான மதிப்பாய்வு,
- நிலவியல் ஆபத்துக்கள் மதிப்பாய்வு,
- நீர் மாசடைதல் தாக்கங்கள்.
வழிப் பகுப்பாய்வும், த நச்சுரல் ஸ்டெப் (The Natural Step) அமைப்பின் வரைவிலக்கணங்களும், பின்னர், சூழல் மேலாண்மைச் சீர்தர வரிசைகளான ஐஎஸ்ஓ 14000 இற்கும், ஐஎஸ்ஓ 19011 இற்கும் அடிப்படையாக அமைந்தன.
சூழல் தாக்க மதிப்பாய்வுக்குப் பின்னர், ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தடுப்பதற்கு, கட்டுப்படுத்துவதற்கு, கடுமையான பொறுப்பு அல்லது காப்புறுதி நிபந்தனைகளை விதிப்பதற்கு, முன்னெச்சரிக்கைக் கொள்கை, மாசுபடுத்துவோர் ஈடுசெய்தல் கொள்கை என்பவற்றைப் பயன்படுத்த முடியும்.
சூழல் தாக்க மதிப்பாய்வு சில சமயங்களில் சர்ச்சைக்கு உரியதாக அமைவதுண்டு. சமூகத் தாக்கங்கள் தொடர்பான பகுப்பாய்வு, சமூகத் தாக்க மதிப்பாய்வு மூலமும், வணிகத்துறைத் தாக்கங்கள் தொடர்பான பகுப்பாய்வு, சூழ்நிலைப் பகுப்பாய்வு மூலமும், வடிவமைப்புத் தாக்கங்கள் தொடர்பான மதிப்பாய்வு சூழ்நிலைக் கோட்பாட்டின் மூலமும் செய்யப்படுகின்றன.