சென்னை மகாஜன சபை

சென்னை மகாஜன சபை என்பது மதராஸ் மாகாணத்ததை தளமாகக் கொண்ட ஒரு இந்திய தேசியவாத அமைப்பாகும். பூனா சர்வஜனிக் சபை, பம்பாய் பிரசிடென்சி அசோசியேஷன், இந்திய சங்கம் ஆகியவைற்றைப் போன்று இது இந்திய தேசிய காங்கிரசின் முன்னோடியாக கருதப்படுகிறது.

தோற்றம் தொகு

இந்தியர்களின் உரிமைகளுக்காக கிளர்ச்சி செய்த மதராஸ் மாகாணத்தின் முதல் அமைப்பு மதராஸ் நேட்டிவ் அசோசியேஷன் எனப்பட்ட மதராஸ் மக்கள் சங்கம் ஆகும். இது 1849 இல் வணிகர் காசுலு லட்சுமிநரசு செட்டியால் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு நீண்ட காலம் நிலைக்கவில்லை, இறுதியில் கலைக்கப்பட்டது.

1884 மே திங்களில், எம். வீரராகவாச்சாரியார், ஜி. சுப்பிரமணிய ஐயர், பி. ஆனந்தச்சார்லு ஆகியோர் மதராஸ் மகாஜன சபையை நிறுவினர். சபையின் அலுவலகம் துவக்கத்தில் தி இந்து, எல்லிஸ் சாலை சந்தி, மவுண்ட் ரோட்டில் செயல்பட்டது. பி. ரங்கையா நாயுடு 1885 இல் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1885 செப்டம்பரில், சபையானது பம்பாய் பிரசிடென்சி அசோசியேஷன், இந்திய சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இங்கிலாந்துக்கு ஒரு குழுவை அனுப்பியது.

மகாஜன சபை தனது முதல் மாநாட்டை 1884 திசம்பர் 29 முதல் 1885 சனவரி 2 வரை நடத்தியது. சபை அதன் துவக்க நாட்களில் மிதவாத கொள்கையையே ஏற்றுக்கொண்டிருந்தது. இருப்பினும், இதன் நோக்கங்களும் இலக்குகளும் தேசத்துரோகமாகக் கருதப்பட்டன. 1895 திசம்பரில், இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த எல்ஜின் பிரபு மதராசுக்கு பயணம் மேற்கொண்டபோது, மதராஸ் மகாஜன சபையின் வரவேற்பு உரையைப் பெற மறுத்துவிட்டார்.

வரலாறு தொகு

பிரித்தானியர் ஆட்சியின் பிடியிலிருந்து நாட்டை விடுவிக்கவும் இந்தியர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் இந்திய துணைக்கண்ட அளவில் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை மகாஜன சபையின் உறுப்பினர் உணர்ந்தார். அடயாறு பிரம்மஞான சபையில் நடைபெற்ற மாநாட்டில் சபையின் உறுப்பினர்கள் இந்த கருத்தை மிகவும் வலுவாக வெளிப்படுத்தினர். இதில் பல தேசபக்தர்களும், தலைவர்களும் கலந்து கொண்டனர். பின்னர் இந்திய தேசிய காங்கிரசை உருவாக்குவதன் மூலம் அதை செயல்படுத்தினர். இவ்வாறு 1884 முதல் தமது சக மனிதர்களின் நலனுக்காக தேசிய சுதந்திரம் மற்றும் பிற பொதுவான சமூகப் பிரச்சினைகள் போன்ற இந்தியர்களின் அடிப்படை உரிமைகளை சபை குரல் கொடுத்துள்ளது. இது 1920 முதல் இந்திய தேசிய காங்கிரசுடனும் அதன் நடவடிக்கைகளுடனும் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது.

இதன் விளைவாக சபையானது 1930 ஏப்ரல் 22 அன்று மதராஸ் ஜார்ஜ் டவுன், உயர் நீதிமன்றத்துக்கு முன்னுள்ள காலி இடம், கடற்கரை பகுதிகளில் உப்பு சத்தியாக்கிரக இயக்கத்துக்கு ஏற்பாடு செய்தது. சபையின் உறுப்பினர்கள் பிரித்தானிய காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டனர். தேசிய இயக்கத்துக்காக அவர்கள் இரத்தம் சிந்தினர். சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றவர்களுக்கு நடந்த அநீதி குறித்து சட்ட விசாரணைக்கு சபை வற்புறுத்திய நிலையில், நீதிபதி டி. ஆர். இராமச்சந்திர ஐயர் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஆணையம் முப்பது பேரை விசாரித்து தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

இதேபோன்ற ஒரு தாக்குதல் ஏப்ரல் 27 அன்று பிரித்தானிய காவல்துறையினரால் பைக்ரோஃப்ட்ஸ் சாலையில் பால் கங்காதர் திலகரின் பொதுக் கூட்டத்தில் மீண்டும் நடத்தப்பட்டது. அப்போது நடந்த காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் வழக்கறிஞர் கோவிந்தசாமி கொல்லப்பட்டார். கோவிந்தசாமி கொலை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுத்தது மதராஸ் மகாஜன சபை. மீண்டும் 1942 இல், சபையின் பல உறுப்பினர்கள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றனர்.

பிரித்தானிய அரசாங்கம் காங்கிரஸ் கட்சியை தடை செய்தபோது. மதராஸ் மகாஜன சபையானது அகில இந்திய காதி கண்காட்சி, சுதேசி கண்காட்சி போன்றவற்றை நடத்தி நாட்டு மக்களின் இதயங்களில் தேசபக்தி உணர்வுகளைத் தூண்டியது.

மகாத்மா காந்தி 1896 அக்டோபர் 24 அன்று நடந்த மகாஜன சபைக் கூட்டத்தில் உரையாற்றினார். பண்த ஜவகர்லால் நேருவும் சபையின் பொன்விழா கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார்.

மதராஸ் மகாஜன சபையின் வைர விழா கொண்டாட்டங்கள் 1945 சனவரி 31 அன்று நடைபெற்றது.

இந்த சபையானது 1932 முதல் தி இந்து செய்தித்தாளின் தினசரி இதழ்களை சேகரித்து வைத்திருந்தது. அவை 2001 இல் இந்து இதழின் நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமல்லாமல், வரலாறு, அறிவியல், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, உலக நாடுகளைப் பற்றிய விவரங்கள் போன்ற அனைத்து வகையான புத்தகங்களும் இந்த நூலகத்தில் உள்ளன.

மேலும், ரிக்‌சா ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர்கள், தொழிலாளர்கள் போன்ற மிகவும் ஏழ்மையான நலிந்த மக்களின் குழந்தைகளுக்காக காமராசர் பெயரில் ஒரு மழலை பள்ளியை சபை 1996 வரை நடத்தியது.

சபைன் செயற்குழு உறுப்பினர்கள் 31.12.1969 அன்று சென்னை ஆளுநர் மாளிகையில் கான் அப்துல் கஃபர் கானை (எல்லை காந்தி) சந்தித்தனர்.

1990 வரை அண்ணா சலை எல்.ஐ.சி கட்டிடத்தின் பின்னால் செயல்பட்டு வந்த சபையில் மாலை நேரங்களில் இலவசமாக இந்தி கற்பிக்கப்பட்டது. இதில் அரசு மற்றும் தனியார் துறை அதிகாரிகள் பயனடைந்தனர்.


சபையின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 1985 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல தலைவர்கள் அதன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். அந்த நிகழ்வின்போது ஐம்பது தியாகிகளுக்கு சபையானது நினைவு பரிசுகளை வழங்கியுள்ளது.

சென்னை மகாஜன சபை தனது 125 வது ஆண்டை 2010 இல் கொண்டாடியது.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_மகாஜன_சபை&oldid=3302020" இலிருந்து மீள்விக்கப்பட்டது