செப்பனியா (நூல்)
செப்பனியா (Zephaniah) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.[1][2][3]
பெயர்
தொகுசெப்பனியா என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் צְפַנְיָה (Tsfanya, Zefanyàh) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் Σοφονίας (Sofonìas) என்றும் இலத்தீனில் Sophonias என்றும் உள்ளது. இப்பெயருக்குக் "கடவுள் காக்கிறார்" என்று பொருள்.
உள்ளடக்கம்
தொகுகி.மு. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செப்பனியா இறைவாக்கு உரைத்தார். அவர் இறைவாக்கு உரைத்த காலம் யோசியா அரசன் கி.மு. 621இல் செயல்படுத்திய சமயச் சீர்திருத்தத்திற்கு முன்னைய பத்தாண்டாக இருக்கலாம். அவ்வாறாயின் செப்பனியா என்பவர் எரேமியா இறைவாக்கினருக்குச் சற்றே முற்பட்ட ஆண்டுகளில் இறைவாக்கு உரைத்திருக்கலாம். செப்பனியாவில் காணக்கிடக்கும் கருத்துகள், சொல்லாடல்கள் எரேமியாவிலும் உள்ளன.
செப்பனியா இறைவாக்கு உரைத்த நாள்களில் யூதா சமய நம்பிக்கையில் சீரழிந்த நிலையில் இருந்தது. யாவே என்னும் ஒரே கடவுளிடம் நம்பிக்கை கொள்ளாமல் வேற்றுத் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டது.
ஏனைய இறைவாக்கு நூல்களில் மிகுதியாகக் காணப்படும் கருத்துகளையே இந்நூலும் கொண்டுள்ளது: அழிவின் நாள் நெருங்கிவிட்டது; அப்பொழுது யூதா வேற்றுத் தெய்வங்களை வழிபட்டதற்காகத் தண்டிக்கப்படும்; எருசலேம் அழிவுற்றாலும் மீண்டும் ஒருநாள் முன்னைய நன்னிலைக்கு உயர்த்தப்படும்; பணிவும் நேர்மையும் மிக்க மக்கள் அங்கு மீண்டும் வாழ்வார்கள்.
இந்நூலில் உள்ள மூன்று அதிகாரங்களும் பின்வருமாறு அமைந்துள்ளன:
அதிகாரம் 1: ஆண்டவர் தீர்ப்பு வழங்கும் நாள் அழிவைக் கொணரும் நாளாக வரும். ஆண்டவரின் சினம் அந்நாளில் வெளிப்படும்.
அதிகாரம் 2: அழிவிலிருந்து தப்ப வேண்டும் என்றால் மக்கள் மனம் மாற வேண்டும்; அழிவு விவரிக்கப்படுகிறது.
அதிகாரம் 3: எருசலேம் செய்த தவற்றுக்காகக் கண்டிக்கப்படுகிறது; ஆயினும் கடவுளின் இரக்கம் வெளிப்படும். அவர் தமக்குப் பிரமாணிக்கமாக இருந்தோருக்கு அமைதியும் மகிழ்வும் நல்குவார்.
நூலிலிருந்து சில பகுதிகள்
தொகுசெப்பனியா 1:14
"ஆண்டவரின் மாபெரும் நாள் அண்மையில் உள்ளது;
அது விரைந்து நெருங்கிக் கொண்டிருக்கிறது;
ஆண்டவரது நாளின் பேரொலி கசப்பை உண்டாக்கும்;
மாவீரனையும் கலங்கி அலறும்படி செய்யும்.
அந்த நாள் கடும் சினத்தின் நாள்;
துன்பமும் துயரமும் நிறைந்த நாள்;
பேரழிவும் பேரிழப்பும் கொண்டு வரும் நாள்;
இருட்டும் காரிருளும் கவிந்த நாள்;
அரண்சூழ் நகர்களுக்கும் உயரமான கொத்தளங்களுக்கும்
எதிராக எக்காளமும் போர்முழக்கமும் கேட்கும் நாள்."
செப்பனியா 3:14-17
"மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி;
இசுரயேலே! ஆரவாரம் செய்;
மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி.
ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்;
உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்;
இசுரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்;
நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.
அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்:
'சீயோனே, அஞ்சவேண்டாம்;
உன் கைகள் சோர்வடைய வேண்டாம்.
உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்;
அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்;
உன் பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்;
தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்;
உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.'"
உட்பிரிவுகள்
தொகுபொருளடக்கம் | நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. ஆண்டவர் தீர்ப்பு வழங்கும் நாள் | 1:1 - 2:3 | 1384 - 1385 |
2. வேற்றினத்தாரின் அழிவு | 2:4-15 | 1385 - 1386 |
3. எருசலேமின் அழிவும் மீட்பும் | 3:1-20 | 1386 - 1388 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Prophecy of Sophonias | EWTN". EWTN Global Catholic Television Network.
- ↑ Zephaniah 1:1, NRSV
- ↑ Zeph 2:12, Zeph 3:9–10