செயல்திட்டவழிக் கற்றல்
செயல்திட்ட வழிக்கற்றல் (Project Based Learning) என்பது ஒரு வகையான கற்றல் கற்பித்தல் வழிமுறையாகும். இம்முறை கற்ற கல்வியை வாழ்க்கையோடு தொடர்புபடுத்துவது என்னும் இலக்கோடு செயல்படுத்தப்பட்டு வரும் முறையாகும். இது ஒரு குறிப்பிட்ட பாடப்பொருளை ஆய்வு செய்து, அது குறித்து வினாக்களை எழுப்பி, துருவிப்பார்த்துக் கற்கும் முறையாகும்.[1] மாணவர்களின் தனித்துவமான தேவைகளையும், திறமைகளையும்,ஆர்வத்தையும் இனம் கண்டு செயல்திட்டத்தைப் பரிந்துரைக்க வேண்டும். செயல்திட்டம்,மாணவரின் சுயமான படைப்பாற்றல் திறனையும் வழங்குதிறனையும் பறைசாற்றுவதாக அமையும். செயல்திட்டம் மேற்கொள்ள படைப்பாற்றல் சிந்தனை வேண்டும். கூர்சிந்தனையும்,தேடியும் கேட்டும் பெறும் ஆற்றலும் வேண்டும். இம்முறையில் கற்கும் போது ஆய்வு செய்யவும், முடிவுகளை யூகிக்கவும், கண்டறிந்தவற்றை தம் சொந்த நடையில் எழுதவும், பகிரவும் மாணவருக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.[2]ஒத்த மாணவருடன் கருத்துப்பரிமாற்றம்,கற்றல் சார்ந்த சொல்லாட்சி வலுப்பெறுதல்,தமது வாழிடம் சார்ந்த கலாச்சாரம் மற்றும் தமது தனித்துவமான பலத்தையும் சார்ந்தே மாணவர்களால் திறம்படச் செய்ய முடியும். செயல்திட்டம் அதிவிரைவாக மாணவரது மொழித்திறன் வளர்ச்சிக்கு அடித்தளமிடுவதோடு மட்டுமின்றி தனக்குப் பிடித்தமான தலைப்புகளை அறிந்து கொள்ளவும் அவர்களுக்கு வழிகாட்டுகிறது.மேலும் மாணவர்கள் இணைந்து பணிபுரியவும், கூட்டுறவாகக் கற்கவும், வழிவகை செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்களின் புரிதல் திறனை மேம்படுத்தி, கற்றல் அனுபவம் பெறல் எனும் உயர்திறனைப் பெறவும் அடிகோலுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Project-Based Learning, Edutopia, March 14, 2016. Retrieved 2016-03-15
- ↑ Yasseri, Dar; Finley, Patrick M.; Mayfield, Blayne E.; Davis, David W.; Thompson, Penny; Vogler, Jane S. (2018-06-01). "The hard work of soft skills: augmenting the project-based learning experience with interdisciplinary teamwork" (in en). Instructional Science 46 (3): 457–488. doi:10.1007/s11251-017-9438-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:1573-1952.