செ. வரதராசனார்

தமிழறிஞர்

புலவர் செ. வரதராசனார் (25, ஏப்பிரல் 1925- 13 ஏப்பிரல் 2013) என்பவர் தென்னிந்தியாவின், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர், எழுத்தாளர், ஆசிரியர் ,பத்திரிக்கை ஆசிரியர் ஆவார். இவருக்கு தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் விருதினை 17 சனவரி 2012 அன்று வழங்கியது.[1]

பிறப்பும் கல்வியும் தொகு

இவர் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட்த்தில் உள்ள கல்லக்குறிச்சி வட்டத்தின் மோ. வன்னஞ்சூர் என்ற சிற்றூரில் திரு கு. செல்லப்பிள்ளை, இராமானுசம் அம்மாள் இணையருக்கு தலைமகனாக 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 25 ஆம் நாள் பிறந்தார்.

உள்ளூரில் துவக்கக் கல்வியையும், கல்லக்குறிச்சியில் உயர்நிலைக் கல்வியையும் பயின்றார். பின்னர் திண்டிவனம் அருகிலுள்ள மைலம் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டத்தைப் பெற்றார். ஈரோடு நகருக்குச் சென்று பெரியார் அவர்கள் வீட்டில் ஒரு வாரம் தங்கியிருந்து, தந்தை பெரியாரிடம் நேரடியாகப் பகுத்தறிவு விளக்கத்தை ஈட்டிக் கொண்டார்.

சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்து முடித்தார். பின்னர் பொன்னேரி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் இணைந்தார். பின்னர் பொன்னேரியில் இருந்து விடுபட்டு சொந்த ஊரான தென்னாற்காடு மாவட்டம் கல்லக்குறிச்சிக்கு பணிமாறுதல் பெற்றுத் திரும்பினார்.

நெல்லிக்குப்பம், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், கல்லக்குறிச்சி போன்ற ஊர்களில் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினார். இதற்கிடையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தார். கூடுதலாக இளங்கலைக் கல்வியியலையும் முடித்தார். நிறைவாக குதிரைச்சந்தல் என்னும் ஊரில் அரசுயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக ஆனார். அங்கேயே பணிநிறைவும் பெற்றார்.

தமிழ்ப்பணிகள் தொகு

கல்லக்குறிச்சியில் வாலிபர் சங்கத்தைத் தோற்றுவித்தார். இரவுப் பாடசாலையில் திருக்குறளையும் சேர்த்து படிக்கச் செய்தார். சிற்றூர்களில் திருக்குறளை பரப்பி வந்தார். கல்லக்குறிச்சியில் திருக்குறள் மாணவர் மாநாட்டை நடத்தினார். திருவள்ளுவரையும் திருக்குறளையும் தேரில் வைத்து நகரில் ஊர்வலமாய் அழைத்து வந்தனர். மேலும் திரு.வி.க. தமிழ் மாநாடு நடத்தினார்.

கா. ந. அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனவுடன் 1967 ஆம் ஆண்டு அழைத்து வந்து கல்லக்குறிச்சியில் தமிழ் இலக்கிய மன்றத்தை, புலவர். அரங்கநாதன் தலைமையில் அண்ணாதுரை தொடக்கி வைக்க விழாவை நடத்தினார். பின்னர் வாலிபர் சங்கம் கல்லைத் தமிழ்ச் சங்கமாக மாற்றப்பட்டது.

திருக்குறளுக்கு வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் விளக்க வகுப்புதனை நடத்தினார். முழுமையாக மூன்று முறை இங்ஙனம் நடத்தி முடித்துள்ளார்.

வானொலியில்யில் புத்தாண்டு உட்பட சிறப்பு நாட்களில் பல கவியரங்கங்கள் தலைமை தாங்கி நடத்தினார். தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று பல தமிழ்க் கூட்டங்களில் பேசியுள்ளார். புதுதில்லியில் தமிழுக்கு 'செம்மொழி'த் தகுதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, அறிஞர்களுடன் சேர்ந்து உண்ணாநிலை மேற்கொண்டு போராடினார். திருக்குறள் வழித் திருமணங்களை, பன்னூறு அளவில் மூன்று தலைமுறை மக்களுக்கு நடத்தி மாந்தர்களின் இல்வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி உள்ளார்.

நடத்திய இதழ்கள் தொகு

'குறள்மணம்' என்ற திங்களிதழை பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தினார். அனைத்து அரசு நூலகங்களிலும் அவ்விதழ் வாங்கப்பட்டது.

எழுதிய நூல்கள் தொகு

  • மணக்கும் மலர்கள் - கவிதைத் தொகுப்பு
  • திருக்குறள் - பாயிரம் காட்டும் பண்பாடு
  • திருக்குறள் - காமத்துப்பால் வழங்கும் வாழ்வியல் நெறிகள்
  • தமிழ்ப் பாவை
  • தமிழ்த்தாய் - திருப்பள்ளி எழுச்சி
  • கண்ணகி - தமிழரின் பண்பாட்டுச் சின்னம்
  • புலவர் செ.வரதராசன் கவிதைகள்
  • திருக்குறள் - உண்மை உரை

விருதுகள் தொகு

  • தமிழ்நாடு அரசின் 'நல்லாசிரியர்' விருது
  • தமிழ்நாடு அரசின் 'திருவள்ளுவர் விருது, 2012

குடும்பம் தொகு

செ. வரதராசனார் உருக்குமணி அன்ற அம்மையாரை மணந்தார். இ்ந்த இணையருக்கு ஆறு ஆண் மக்களும், நிறைவில் ஏழாவதாகப் பெண் மகளும் பிறந்தனர்.

இறப்பு தொகு

செ. வரதராசனார் தனது 88 ஆம் அகவையில் 13 ஏப்பிரல் 2013 அன்று மூப்பினால் இறந்தார். அவரின் விருப்பப்படி, அன்றே அவரது கண்களும், உடலும் கொடையாக மருத்துவ உலகிற்கு வழங்கப்பட்டன.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._வரதராசனார்&oldid=3597565" இருந்து மீள்விக்கப்பட்டது