சேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியான்
சேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியான் (1905–பெப்ரவரி 11, 1989), அபுதாபி அமீரகத்தின் முன்னாள் ஆட்சியாளர் ஆவார். இவர் 1922 ஆம் ஆண்டு முதல் 1926 ஆம் ஆண்டு வரை அபுதாபியின் ஆட்சியாளராக இருந்த சேக் சுல்தான் பின் சக்புத் அல் நகியானின் மூத்த மகன் ஆவார். தந்தை இறந்தபின் ஆட்சியாளரான சேக் சக்புத், அவர் காலத்தில் எண்ணெய் வளம் மூலம் கிடைக்கத் தொடங்கியிருந்த செல்வத்தை வளர்ச்சிப் பணிகளில் செலவு செய்யத் தயங்கினார். இவ் வருமானம் நிலையானதாக இருக்குமா என்ற ஐயம் காரணமாக வருமானத்தைச் சேமித்து வைப்பதே உசிதமானது என்று அவர் கருதியதாகச் சொல்லப்படுகின்றது.
இவரது இளைய தம்பியான சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் வேறு விதமான கருத்தைக் கொண்டிருந்தார். எண்ணெய் வருமானத்தை மூலதனமாகக் கொண்டு நாட்டில் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்கவேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. 1966 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் தேதி, சேக் சக்புத் ஆட்சிப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, சேக் சயத் ஆட்சியாளரானார்.